திருகை கெட்டிப்படுவதற்காக ‘பட்டு’ போட்டு முடித்த பிறகுதான் மேல் திருகையிலிருக்கும் முளைக்குச்சியைப் பிடித்துக்கொண்டு திருகையின் குழி நிறைய போட்ட வரகைத் திரிக்க ஆரம்பிப்பார்கள். அப்படியே வேலைப்பாட்டுடன் திரித்து வரகரிசியைப் புடைத்து எடுக்கும்போது அந்த அரிசி மஞ்சளாக இருக்கும். பிறகு உரலில் போட்டுத் தீட்டினால்தான் வெள்ளையாகும். இந்த வரகுக்கென்றே ஒரு பாட்டும் உண்டு.
ஏழு அரங்குக்குள் இருக்கும்
எண்ண குயில் பெண்ணே
நான் பட்டுடுத்தி பனிய விட்டு இம்புட்டு
விபூதியிட்டாதான் வருவேன்
இப்படி தானியங்களைக் குத்தித்தான் அரிசி கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் இந்தப் பெண்கள் ஆத்திரம் அவரசத்துக்கு ஒரு விருந்தாள், வேற்றாள் திடீரென்று வந்துவிட்டால் என்ன செய்வது? அப்போது குத்திக்கொண்டிருக்க முடியுமா? அதுவும் இந்தத் தானியங்கள் நன்றாகக் காய்ந்தால்தான் குத்த முடியும். அதனால் முன்னாலேயே மூன்று படி, நான்கு படி என்று குத்தி, அரிசியைப் பானைக்குள் போட்டுவைத்துக்கொள்வார்கள். ஆனால் நெல்லை மட்டும் அவித்து காயப்போட்டுக் குத்தி, அரிசியாக்காமல் பானைக்குள் புழுங்கலாகவே வைத்திருப்பார்கள். அதைக் குத்தி அரிசியாக வைத்திருந்தால் அதற்குத்தான் கைபோகும். சின்னப் பிள்ளைகள் மட்டுமல்ல, குமரிகளும் வர ஒரு வாய் அள்ளி தெரியாமல் தின்றுவிட்டால் பிறகு வெறும் பானைதான் அடுக்கில் உட்கார்ந்திருக்கும். அதனால் நெல்லைக் குத்துவதில்லை.
அந்தப் பாறை அருகிலிருந்தக் காட்டில் இரண்டு கமலை இறைத்துக்கொண்டிருந்தன. சில சமயம் மூன்று கமலைகூட கட்டி விடிய விடிய இறைப்பார்கள். வெடித்த பருத்திச் சுளைகள் வெண்பஞ்சு மேகங்களாகப் பூத்திருந்தன. பெண்கள் ஓடி ஓடிப் பருத்தி எடுத்து மடி மடியாகக் குமித்தார்கள்.
“அண்ணே இங்கன வாய்க்கால்ல கஞ்சியக் குடிச்சுட்டுப் போவோமா? நம்ம குறுக்குப் பாதையா போறதனால எங்கனயும் திலாக் கிணறு இருக்காது” என்றாள் சங்கினி.
“நீ சொல்லதும் சரிதேன்த்தா. வெயிலும் கொளுத்துது. போயி மூஞ்சி, கை காலெல்லாம் கழுவிட்டுக் கஞ்சியக் குடிப்போம்” என்றான் ராமசாமி.
இவர்கள் வாய்க்கால் நோக்கி நடந்தார்கள். வாய்க்காலிலும், கமலைக் குழியிலும் பூவரச மரங்கள் பம்மரக் காயும், மஞ்சள் பூவுமாகக் குளு குளுத்து நின்றன. சங்கினி ஒரு பூவரச இலையைப் பறித்துச் சுருட்டி, பீ.. பீ.. என்று ஊதினாள்.
“இந்தா எங்க போனாலும் உன் புத்திய விடமாண்ட போலுக்கோ. வந்தமா, கஞ்சியக் குடிச்சமான்னு புறப்படுவயா? பொழுது மேற்க போயிருச்சி. இன்னைக்கு ராவைக்குள்ள கோயிலுக்குப் போயி சேரணும்” என்று முத்தையா பொய்யாகக் கண்டிக்க, “ம்.. கொஞ்சம் சந்தோசமா இருந்தா உனக்குப் பொறுக்காதே” என்று முனங்கியவாறே வாய்க்காலில் இறங்கினாள் சங்கினி.
எப்போதும் கிணற்றுத் தண்ணி குளுகுளுவென்றுதான் இருக்கும். இவர்கள் வாய்க்காலில் இறங்கியதுமே அங்கே பருத்தி எடுத்தவர்கள் எல்லோரும் வந்து இவர்களைச் சுத்திக் கூடிவிட்டார்கள். யார், என்ன, எங்க போறவக என்று விசாரிக்க, இவர்கள், “நாங்க சங்கரன்கோவிலுக்கு நேத்திக்கடன் செலுத்தப் போறவக” என்று சொன்னதுதான் தாமதம் எல்லாருடைய முகத்திலும் பக்தி வந்துவிட்டது.
“கோயிலுக்குப் போறவக இந்தக் கெணறு பாத்து வந்திருக்கீக. அது நாங்க செஞ்ச புண்ணியம்” என்றவாறே ஒருத்தி ஓடிப் போய் கஞ்சிக்குப் பிசைந்துகொள்ள கனிந்த தக்காளிப் பழமும், பச்சை மிளகாயும் கொண்டுவந்தாள். இன்னொருத்தி விளைந்து நெறிகட்டியிருந்த நிலக்கடலைச் செடிகளைப் பிடுங்கி அப்படியே வாய்க்கால் தண்ணியில் அலசிக் கொண்டுவந்தாள். செடியின் தூரில் சலங்கை மணிகளாக நிலக்கடலைகள் தூர் கட்டியிருந்தன.
பிறகு தங்கள் முந்திகளில் முடிந்திருந்த காத்துட்டு, அரைத் துட்டு என்று அந்தக் காசுகளை இவர்களிடம் கொடுத்துடு, கோயில் உண்டியலில் போடச் சொன்னார்கள். “வரும்போது நீங்க இப்ப வந்தது கணக்கா இந்த வளிதேன் வரணும். எங்களுக்கு அந்த சங்கரேஸ்வரரோட துன்னூறு, குங்குமத்தைக் கொடுத்துட்டுப் போவணும்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்.
இதற்குள் அத்தி மரத்துத் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பிள்ளை சிணுங்கியவாறு அழுது குரல்கொடுக்க, ஒருத்தி பால் மணத்துடன் ஓடினாள்.
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago