இல்லற வாழ்க்கை இனிக்க...

By ஆதி

திருமண வாழ்க்கை பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. எல்லாம் நவீனமயமாகி வரும் உலகில், தம்பதிகளும் நவீனமயமாகி வருகிறார்கள். அவர்கள் படித்திருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பரபரப்பாக இருக்கிறார்கள். காதல் திருமணமோ, பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணமோ எப்படியிருந்தாலும் மணவாழ்க்கை பிரச்சினைகளைத் தம்பதிகள் தெளிவாக அணுகுகிறார்களா?

பலரது மணவாழ்க்கையில் சிக்கலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி அணுக வேண்டும், மணவாழ்க்கையை வெற்றிகரமாகத் தொடர்வது எப்படி?

சிக்கல் இல்லாத மணவாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் பற்றி பிரபல உளநல ஆலோசகர் விஜய் நாகசாமி எழுதியுள்ள புத்தகங்கள் நல்ல வழிகாட்டிகளாக இருக்கின்றன. இல்லற வாழ்க்கைத் தொடர்பாக சில பாதைகளை அவை நமக்குச் சுட்டிக்காட்டும். ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு உளநல ஆலோசகராகச் செயல்பட்டுள்ள அவர், மணவாழ்க்கையை நிம்மதியாகத் தொடர்வதற்குக் கவனப்படுத்தும் முக்கிய அம்சங்கள்:

முக்கியப் பிரச்சினைகள்

1 கணவர் குடும்பம் – மருமகள் இடையிலான பிரச்சினை: திருமணமான முதல் ஒரு வருடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது இயல்புதான். இது காலங்காலமாக தொடர்வதும்கூட. இதை சரியாகக் கவனிக்காவிட்டால் கணவர் குடும்பத்துடன் மருமகளுக்கு பிரச்சினைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். இதை முறையாக அணுகினால்தான், உறவு சமூகமாக இருக்கும்.

2வேலை தொடர்பான பிரச்சினைகள்: தற்போதுள்ள குடும்பங்களில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குப் போவதால் அதிக நேரம் அலுவலகத்தில் செலவு செய்துவிட்டு, வீட்டுக்கு வரும்போது சோர்ந்து விடுகிறார்கள். இதனால் மணவாழ்க்கையிலும் துணையின் மீதும் கவனம் செலுத்த முடிவதில்லை. தம்பதிகள் தனியாக, நெருக்கமாக இருப்பதற்கான நேரமும் குறைந்துவிடுகிறது. கிடைக்கும் நேரத்திலும் விசேஷம், சினிமா என்று வெளியே போய்விடுகிறார்கள். இதனால் நெருக்கம் குறைந்து போகிறது.

3அலுவலக உறவு: ஒரு நாளின் பெரும்பாலான நேரம் அலுவலகத்தில் இருப்பதால், வேலையிடம் சார்ந்த எதிர்ப்பாலினருடன் நெருக்கம் அதிகமாகிறது. இதனால் மணவாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முன்பெல்லாம் திருமணத்தை மீறிய உறவுகள் வெளியே தெரியாமல் மறைமுகமாக, குறைவாக இருந்தன. இப்போது இது வெளிப்படையாகி, அதிகரித்துவிட்டது.

4தாம்பத்திய உறவு: நமக்கு முறைப்படியான பாலியல் கல்வி கொடுக்கப்படாததால் நிறையப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பலர் இணையத்திலும், நண்பர்கள் மூலமும் பாலுறவைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். இதனால் மனக்கலக்கம், பாலுறவைப் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதால் வரும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இவைதான் நவீனத் தம்பதிகள் அதிகம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள்.

கணவனும் மனைவியும் நெருங்கிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாவிட்டால் மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் ஏற்பாட்டு திருமணம், காதல் திருமணம் என எதுவென்றாலும் திருமணத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பொதுவானவை, ஒரே மாதிரியானவைதான். இரண்டிலும் அன்பு வளர வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் மணவாழ்க்கை நிலைத்திருக்கும்.

இன்றைய பெண்கள்

இவை தவிரப் பொதுவான சில விஷயங்கள் வேண்டுமென்றே பெரிதாக்கப்படுகின்றன. பெண்கள் வேலைக்குச் செல்வதால், அவர் களுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கிறது, அது பொருளாதாரச் சுதந்திரமும் பாலியல் சுதந்திரமும் கிடைக்க வழிவகுக்கிறது. நமது அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் வேறு வழியில்லாமல் கணவரிடம் மனைவிகள் பொறுமையைக் கடைப்பிடித்து, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் கணவரிடம் நெருக்கமாக இருக்கவோ, அவருடன் தனியாக வெளியே போகவோ அதிக வாய்ப்பு இருக்க வில்லை. ஆனால் காலம் மாறி வருகிறது. இன்றைய பெண்கள் கட்டுப்பெட்டித்தனங்களை, முட்டாள்தனங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதேநேரம் அளவுக்கு மீறி எதிர்பார்ப்பதும் இல்லை. பெண்ணின் கர்வம், அகங்காரம் என்று இது அடையாளப்படுத்தப்பட்டாலும்கூட, அது உண்மையில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதை மதிக்கக் கற்றுக்கொள்வதுதான் சரியானது.

தங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று முடிவெடுக்கப் பெண்களுக்கு ஓரளவு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அறிவுப்பூர்வமாகவும், கலந்து பேசுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவும் நல்ல மாற்றமே.

மறுமுகம்

இக்காலத் தம்பதிகளில் பெரும்பாலானோர் உயர்கல்வி படித்து, வேலைக்கும் போவதால், சுதந்திரமாக இருக்கிறார்கள். அதனால் வரக்கூடிய பிரச்சினைகளும் தீவிரமாக இருக்கின்றன. சகிப்புத்தன்மை குறைந்து போயிருக்கிறது. சாதாரண விஷயங்களில் ஏற்படும் வித்தியாசங்களில் பெரிய கவனம் இல்லாவிட்டாலும், சிக்கலான பிரச்சினைகள் தீவிரமாகவும், அதிகரித்தும் வருகின்றன.

இன்றைக்கு மணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதில், உணர்வுசார்ந்த அக்கறை (எமோ ஷனல் இன்வெஸ்ட்மென்ட்) அதிகமாகத் தேவைப் படுகிறது. மண வாழ்க்கையில் எப்போதுமே இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஐ ஸ்பேஸ் (என்னுடைய இடம்), வீ ஸ் பேஸ் (தம்பதிகளுக்கான இடம்) ஆகிய இரண்டும் சமப்பங்கு இருக்க வேண்டும். ஐ ஸ்பேஸ் என்பது தனிநபர்களுக்கு உள்ள தனிப்பட்ட உரிமைகள். வீ ஸ்பேஸ் என்பது இருவரும் சேர்ந்து வாழும்போது அடுத்தவரை மதிக்கும் உரிமை. இந்த இரண்டும் நன்றாகப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே மணவாழ்க்கை சுமூகமாகத் தொடரும்.

இதற்கெல்லாம் மேலாக அன்பு, மரியாதை, நம்பிக்கை, மனநெருக்கம் ஆகிய நான்கு அம்சங்களும் தம்பதிகளுக்கிடையே தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டிருந்தால்தான் மணவாழ்க்கை நிலைத்திருக்கும். மணவாழ்க்கை வெற்றி பெறுவதற்கான நான்கு தூண்கள் இவை. இவை தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படும்போது தம்பதிகளிடையே கோபம், கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் வளரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்