வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்கூடப் பெண்கள் தங்களது வாழ்வை எவ்வளவு கலை நேர்த்தியோடு வாழ்ந்தார்கள் என்பதற்குக் கோலங்கள் ஒரு சாட்சி.பெரும்பாலான பெண்கள் அதை கலையாக நினைக்காமல் கடமையாக நினைத்துச் செய்தார்கள் என்ற போதிலும் அவர்களது உழைப்பில் இருந்த கற்பனைத் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது.
எனினும் எவ்விதமான அங்கீகாரமுமின்றிக் கழிந்த பெண் வாழ்வின் கலையைத் தரையிலிருந்து புத்தகம் வரை (ஃப்ளோர் டு புக்) என்கிற தலைப்பில் கண்காட்சியாக்கியிருக்கிறது தாரா புக்ஸ் பதிப்பகம்.
திருவான்மியூரின் உள்ளடங்கிய ஒரு பகுதியில் அழகியல் கூடிய நிதானத்துடன் இயங்கும் தாரா புக்ஸினுள் நுழையும்போதே விதவிதமான கோலங்கள்தான் வரவேற்கின்றன. கடந்த பத்து வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு பின்புலங்களிலிருந்து செயல்படும் பெண் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றிவருகிறது தாரா புக்ஸ்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கோலம் போன்ற தினசரி கலை வடிவங்களிலிருந்து தங்கள் கலைப் பயணத்தைத் தொடங்கியவர்கள். பெரும்பாலான வட்டார மற்றும் பழங்குடிக் கலை வடிவங்கள் கோலம்போல, வீட்டை அலங்கரித்தல்போல அன்றாடக் கலைகளாகத் தொடங்கியவையே. பெண்களே இந்தக் கலை வடிவங்களை வளர்த்தெடுப்பவர்களாக, காப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தக் கலை வடிவங்கள் வீடு தாண்டி வணிக மதிப்பைப் பெறும்போது அதில் ஆண்களும் பங்குகொள்ளத் தொடங்குகிறார்கள்.
தாரா புக்ஸ் பதிப்பித்த பல புத்தகங்களில் இந்தக் கலை வடிவங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சீதையின் ராமாயணம் என்கிற புத்தகத்தில் மொய்னா சித்திரகர் என்கிற கலைஞர் பட்டுவா சுருள் கலையைப் பயன்படுத்தியிருக்கிறார். வங்காள நாட்டுப்புறக் கலையின் ஒரு பகுதி இந்த பட்டுவா கலை. வரையப்பட்ட நீளமான சுருள் துணியைப் பிடித்துக்கொண்டே அதிலுள்ள சித்திரங்களுக்கு ஏற்பக் கதையைப் பாடலாகப் பாடுவார் கலைஞர்.
இது போன்ற அரிய கலை வகைகளையும் கலைஞர்களையும் இந்தியா முழுவதிலிமிருந்து தேடிப்பிடித்து அவர்களைத் தமது படைப்புகளில் பயன்படுத்திவரும் தாரா புக்ஸ், அவர்களது கலைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியைப் பெண்கள் தினத்தன்று கண்காட்சியாக வைத்தது மிகவும் பொருத்தமானது.
தொடக்க நிகழ்வில் தாரா புக்ஸின் வ. கீதாவும் எழுத்தாளர் ப்ரேமா ரேவதியும் கலந்துகொண்டு பெண்களின் தினசரி கலை வடிவங்கள், பயணங்கள் குறித்துப் பேசினார்கள். செல்வி என்கிற வீட்டு வேலை செய்யும் பெண்ணின் பெரிய அழகிய கோலங்கள் பற்றிய சிறு வீடியோ பதிவோடு நெகிழ்வாக முடிந்தது தொடக்க நிகழ்வு. வீடியோ பதிவுசெய்யப்பட்ட மூன்றாவது மாதத்தில் செல்வி இறந்துவிட்டார் என்றும் கண்காட்சியை அவரது நினைவிற்கு அர்ப்பணிப்பதாகவும் கீதா சொன்னார்.
வாசற்படிகளில் தொடங்கிய கலை எப்படி பல்வேறு வெளிகளில் பயணித்து புத்தகங்களை வந்தடைந்திருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக அவர்களின் கலை வடிவங்கள் இடம் பெற்ற புத்தகங்களின் வாயிலாகவே உணர்வது முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கிறது.
(கண்காட்சி ஜூலை மாதம் வரையில் நடைபெறும்.இடம்: புக் பில்டிங், 9, சி.ஜி.இ காலனி, திருவான்மியூர், சென்னை.)
இணைக்கும் கோலங்கள்
பங்காரம்மாள் என்ற அந்தக் கிழவிதான் நான் முதலில் சந்தித்த ஓவியை. தாராவுக்கும் கீதாவுக்கும் நன்றி சொல்வதா இல்லை என்னுடை சிறு பிராயத்தில் அழகியலையும் நேர்த்தியையும் மெனக்கெட்டு கடைபிடித்து கற்று கொடுத்தவளுக்கு நன்றி சொல்வதா எனத் தெரியவில்லை. என் அவ்வா, தன் ஓட்டு வீட்டின் பக்கச்சுவர் முழுவதும் வரட்டி தட்ட வைத்திருந்த காலத்தவள். அவள் சாணியை உருட்டி அந்தச் சுவற்றின் மீது வீசும் லாவகம் நினைவில் இருக்கிறது. அடுக்கடுக்கான சீரான வட்ட வரட்டிகளை அவள் அங்கே பதிந்திடுவாள்.
கிழிந்த தன் புடவையைத் தைக்கப் பயன்படுத்தும் உருட்டுத் தையலில்கூட இடைவெளி ஒரே சீரில் விழ வேண்டும் அவளுக்கு. வேலிகாத்தான் முள்ளைத் தரித்து ஒரே அளவில் நறுக்கி அவற்றை மிகச் சிறந்த முறையில் கட்டி எடுத்து அடுக்கி வைத்திருப்பாள் வெளித் தாழ்வாரச் சமையல்கட்டில்.
சாணி மெழுகவும் - அது ஒரு பெரும் கலை – அதன் ஓரங்களில் செம்மண் கொண்டு தீற்றவும், சுண்ணாம்பு கரைசலில் ஓரங்களில் வரி வடிவங்களை மையச் சுவரிலும் விளிம்புகளிலும் வரையும் கலையையும் அவளிடம்தான் முதலில் கண்டேன்.
சிமெண்ட் வீடுகளினால் நாம் இழந்தவை இதெல்லாம். கோலமும் பாட்டி விட்டுச்சென்ற மரபுதான் எனக்கு. சிறு வயதில் இருந்து மார்கழி மாதங்கள் வண்ணங்களுக்கும் கோலப் போட்டிகளுக்கும் இரவுகளில் கூடிப் பேசிச் சிரித்து மகிழ்வதற்கும் ஆனவை. யார் மிகப்பெரிய கோலம் போட்டிருக்கிறார்கள், கம்பிக் கோலமா பூக்கோலமா, புது கலர் ஏதேனும் போட்டார்களா என்று ஏகப்பட்ட ஆவல்கள்.
ஏராளமான புள்ளிக் கோலங்களை வகுப்பில்கூடப் பழகிப் பார்த்து மார்கழி மாத இரவில் வரைவோம். புள்ளிகளை நேராக வைப்பதிலும் அறுபடாத இழைகளாகக் கோலமாவை இழுப்பதிலும் அலாதி ஆனந்தம். மூலை வீட்டு மாமியிடம் கேட்டு வாங்கி வந்த காப்பித் தூளைக் காயவைத்து பிரவுன் கலர். மஞ்சள் தூளில் இருந்து வெவ்வேறு மஞ்சள்கள் உருவாக்குவது, கரியைத் தூளாக்கிக் கருப்பு நிறம், துணிக்குப் பயன்படுத்தும் நீலத்தில் ப்ளூ, செங்கல் பொடித்து கனகாம்பர நிறம் எல்லாம் செய்து வண்ணம் தீட்டும்போது பெரு அமைதியில் மொத்தத் தெருவும் கனத்து இயங்கும்.
அப்புறம் எல்லாரும் கும்பலாகத் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை சென்று ஒவ்வொரு கோலமாகப் பார்த்துவருவோம். விடிகாலையில் பூசணிப் பூக்களைப் பறித்து வந்து கோலத்தின் நடுவே கொஞ்சம் சாணிக்குள் நட்டு வைத்துவிட்டால் அப்பாடா ஒரு நாள் கோலம் ரெடி.
இப்படி முப்பது நாளும் அட்டவணை வைத்துப் பூக்கோலம், கம்பிக் கோலம், ரங்கோலிக் கோலம் எல்லாம் போட்டு முடித்தால் பொங்கலன்று அனைவரும் சொந்தமாய் ஒரு கோலம் உருவாக்க வேண்டும்.
மிக மிக உற்சாகமாய் தெருப் பெண்கள் அனைவரும் பல்வேறு வேறுபாடுகளைக் கொஞ்சம் கடந்து கழித்த இரவுப் பொழுதுகள் அவை. வேலைக்குப் போகும் பெண்ணான அம்மா, லாட்டரிச் சீட்டு விழுந்து பெரிய வீடு கட்டிய ஜனதா அக்கா, தி.மு.க. குடும்பமான போஸ்ட்மேன் மகளான செந்தாமரையக்கா, மூலை வீட்டு ரேவதி இன்னும் நிறையப்பேர், தூத்துக்குடியிலிருந்து வாக்கப்பட்டு வந்த கண்மணியக்கா…
திருப்பித் திருப்பி வரையப் படும் வடிவங்களுக்குள் அடங்கிப்போய்விட்டாலும், அந்தக் கோலங்கள் ஏதோ பல தொடர்புகளைத் தமக்குள் வைத்தி ருந்ததாகவே எனக்குப் பட்டது.
(கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசியதிலிருந்து)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago