இந்தியா சுதந்திரமடைந்து எழுபது ஆண்டு காலம் ஆன பிறகும் அரசியல் இன்னும் ஆண்களின் உலகமாகவே அறியப்படுகிறது. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் சட்டமன்றம், நாடாளு மன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கே போராடிக்கொண்டிருக்கிறோம்.
அநீதிக்கு எதிரான செயல்பாடு
அமெரிக்கா சுதந்திரமடைந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு ஒரு பெண் இன்னும் அதிபராக முடியவில்லை. அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கே அங்கு இருநூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதிபர், பிரதமர், முதல்வர் பதவியையெல்லாம் விடுங்கள். இருபது வருடங்களுக்கு முன்பு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவதற்கே பெண் என்பதால் நான் சந்தித்த தடைகள் சாதாரணமானவை அல்ல. இத்தனைக்கும் அந்தத் தொகுதியில் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்!
1996-ல்தான் முதன்முதலாகப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்திருந்தது. சட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு பெண்கள் தேர்தலில் அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியெல்லாம் ஒரு கிராமச் சூழலில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எனக்கும் அந்தக் காலகட்டத்தில் எல்லா நடுத்தர வர்க்கத்தினரையும் போல அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம்தான் இருந்தது. எங்கள் கிராமத்தில் தலித் மக்களுக்குக் குடி தண்ணீர் தராமல் அநீதி இழைக்கப்படுவதை உணர்ந்தேன். இத்தனைக்கும் அது தாராளமாகக் குடி தண்ணீர் வசதியுள்ள கிராமம். இந்த அநீதியை அதிகாரம் இருந்தால் மாற்ற முடியும் என்று தோன்றியது (அதிகாரம் இருந்தால் மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது என்பதைப் பிறகு காலம் கற்பித்தது). அந்தத் தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் என்பது ஒரு அநீதிக்கு எதிரான செயல்பாடு மட்டுமே.
தேர்தலில் வென்று சில வருடங்கள் கழித்தே நேர்மையானவர்களும், மக்களுக்கு பணியாற்றுபவர்களும் அரசியலை சாக்கடை என நினைத்து ஒதுங்குவதாலேயே அது இன்னும் மோசமான சாக்கடையாக மாறிவருகிறது என்பதை உணர்ந்தேன். அரசியலை மாற்ற வேண்டும் என்ற ஒரு தெளிவான மனநிலையோடு அரசியலில் நீடிக்க முடிவு செய்தேன். இன்னும் அதே நம்பிக்கையோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் வீட்டில் இடி விழுந்ததைப் போல ஆடிப்போய்விட்டார்கள். என்னது அரசியலா? தேர்தலா? அதுவும் பெண்ணா? இப்படி அடுக்கடுக்கான அதிர்ச்சிகள்! எங்கள் குடும்பம் அரசியல் பின்புலம் எதுவுமில்லாத விவசாயக் குடும்பம். படிப்பில் அதிகக் கவனத்தோடு இருப்பார்கள். பெண் என்ற வேறுபாட்டை வீட்டில் ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை. போதுமான சுதந்திரம் கொடுத்தே வளர்த்தார்கள்.
செல்லமாக வளர்த்த பெண் என்பதால் கடுமையாக ஒன்றும் சொல்ல முடியவில்லையே தவிர, எனது முடிவு எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று எனக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டது. அதுவரையில் இருந்த ‘சூட்டிக்கையான நல்ல பெண்’ என்கிற பிம்பம் வெயிலில் வைக்கப்பட்ட பனிக் கட்டியைப் போல வேகமாகக் கரைவதை உணர்ந்தேன். அதற்காக எனது முடிவை நான் மாற்றிக் கொள்ளவில்லை.
“காலம் கலிகாலம். பொம்பளைங்க மட்டுந்தே போட்டி போட முடியுமாம்ல. இப்புடியும் நடக்குமா? அப்புறம் எப்புடி மழை பேயும்?” என்ற வானிலை ஆராய்ச்சியில் தொடங்கி, வகை வகையான தத்துவங்கள், அறிவுரைகள் வாரியிறைக்கப்பட்டன.
“இதுக்குத்தேன் பொட்டப் புள்ளைய நாலு எழுத்து படிக்க வெக்கப்படாதுங்கறது. சொல் பேச்சு கேக்குதா பாரு.”
“காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணி வெச்சிருந்தா இதெல்லாம் நடக் குமா?!’ ( அப்பொழுது எனக்கு 21 வயது!)
“பொட்டப் புள்ளைக்கு எதுக்கு இத்தனை புடிவாதம்?”
“கட்சிக்கு ஒரு ஆம்பளைப் பையனா இருந்தாக்கூட தொலையுது. பொட்டப் புள்ளை போய் எலக்ஷன்ல நிக்கறம்னா என்ன அர்த்தம்?” என்று ஒரு மாதம் வீடே அல்லோலகல்லோலப்பட்டது!
இவை பெரும்பாலும் என் மீதான, எங்கள் குடும்பத்தின் மீதான அன்பாலும் அக்கறை யாலும் சொல்லப்பட்டவை என்பதால் பொறுமை யாகக் கேட்டுக்கொண்டேனே தவிர அசைந்து கொடுக்கவில்லை.
“உள்ளூருக்குள்ளதான… நின்னுட்டுப் போகுது, வுடுங்க” என்கிற சமாதானத்தை ஏற்றும், அவ்வளவு அழுத்தத்துக்கும் அசைந்துகொடுக்காத எனது உறுதியான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டும் இறுதியில் அம்மா அரைமனதாகச் சம்மதித்தார்கள்.
அரசியலில் பெண்களின் இடம்
என் முடிவில் உறுதியாக இருந்தேனே தவிர ஒரு பெண் அரசியலில் பங்கேற்பதில் உள்ள மனோபாவத்தைப் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்துதான் போனேன். தனியொரு பெண்ணுக்கே இவ்வளவு தடைகள் என்றால், ஆணாதிக்கம் மிக்க அரசியல் சூழலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு (பத்து லட்சம் பெண்கள்) அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்த எதிர்ப்பு சாதரணமானதல்ல.
பெண்கள் நிர்வாக அறிவும் திறமையும் அனுபவமும் அற்றவர்கள்; அவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு எழுந்தது. குடும்பப் பொறுப்புகள், விவசாயம், கலாச்சாரத்தைப் பேணுவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் பெண்களின் மகத்தான பங்களிப்பு, செறிவான அனுபவ அறிவு, நிதி நிர்வாகத்தில் பெண்களின் நேர்மை, பொருளாதார அறிவு, துணிச்சல், சகிப்புத்தனமை என்று அடுக்கடுகான ஆதரங்களோடு ராஜீவ் காந்தி பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரித்து ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஒரு ஆண், பெண்களுக்கு அதிகாரமளிக்கப் போராடியதொரு அற்புதமான வரலாற்றுத் தருணம் அது!
ஆனாலும் ஆதிக்கச் சக்திகளும் பழமைவாதிகளும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நாடாளுமன்ற மாநிலங்களவை யில் தோற்கடித்தனர். தனது கனவு தன் கண் முன்னாலேயே தோற்றுப் போனதைப் பார்த்து அந்த இளம் பிரதமர் கண்ணில் நீரோடு வெளியேறினார்.
ராஜீவின் படுகொலைக்குப் பிறகு வந்த நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 73 மற்றும் 74-வது சட்டத் திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை யும், ராஜீவின் கனவையும் நனவாக்கியது.
சட்டமும் அது பெண்களுக்கு வழங்கும் உரிமையும் வாய்ப்பும் இருக்கும்போதே இவ்வளவு தடைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. இப்படியொரு வாய்ப்பு இல்லையென்றால் என்னைப் போன்ற எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாத, சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியலில் பங்கேற்பதைப் பற்றிக் கனவுகூடக் கண்டிருக்க முடியாது.
ஒருவழியாகத் தடைகளைத் தாண்டி தேர்தல் களம் கண்டேன். மக்கள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில், மகத்தான வரவேற்பு. வெற்றி மிக எளிதாகவே நிகழ்ந்தது. பிறகுதான் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்தன! குடி தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குள் ஒவ்வொரு இடத்திலும் போராட்டங்களோடு, ‘பெண்’ என்பதையும் கடந்துதான் வர வேண்டியிருந்தது. குடி தண்ணீர் பிரச்சினை என்னவோ தீர்ந்துவிட்டது. ஆனால் இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் பொதுவாழ்வில் பெண்ணுக்கு எதிரான போக்குகளை ஒவ்வொரு முறையும் போராடித்தான் கடக்க வேண்டியிருக்கிறது. போராடாமல் எந்தப் பெண்ணும் தன் முன் இருக்கும் அகழியை நீந்திக் கடந்துவிட முடியாது.
நேர்மையும், போராட்டக் குணமும், கடும் உழைப்பும்தான் நமது அணிகலன்களும் ஆயுத மும். இவை இருந்தால் அரசியலில் மட்டுமல்ல எந்தத் துறையிலும் நாம் வெற்றிபெற முடியும்.
ஆம், இது கலிகாலம்தான்; பெண்களின் யுகமும்கூட!
கட்டுரையாளர்,
காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர்.
தொடர்புக்கு: jothimani102@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago