கமலா கல்பனா கனிஷ்கா: பெற்றால் தான் குழந்தையா?

By பாரதி ஆனந்த்

மடோனா பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டே வந்து அமர்ந்தாள் கனிஷ்கா.

“என்ன கனிஷ்கா, ரொம்ப உற்சாகமாக இருக்கிற மாதிரி தெரியுது! என்ன விஷயம்?” என்று பேச்சை ஆரம்பித்தார் கமலா பாட்டி.

“மடோனா இரட்டைக் குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கார் பாட்டி! மலாவி நாட்டில் ஆதரவற்ற இல்லத்தில் வசித்துவந்த எஸ்தர், ஸ்டெல்லா என்ற குழந்தைகளைத் தத்தெடுத்ததன் மூலம், மடோனாவுக்கு இப்போ மொத்தம் 6 குழந்தைகள். இதில் 2 குழந்தைகள் அவர் பெற்றவை. 4 குழந்தைகள் மலாவி நாட்டைச் சேர்ந்தவை. ஏஞ்சலினா ஜோலி, மடோனா மாதிரி பிரபலங்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க அதிக ஆர்வம் காட்டறாங்க! தத்தெடுப்பதுங்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்!”

“ஆமாம், நல்ல விஷயம்தான். நம்ம நாட்டிலும் தத்தெடுக்கும் சிந்தனை பரவலானால் ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பெற்றோர் கிடைப்பாங்க. குழந்தைகளின் வாழ்க்கையும் மேம்படும். ஊருக்கு ஒரு செயற்கைக் கருத்தரிப்பு மையம் இருக்காது. குழந்தைக்காக எத்தனை பெண்கள் தங்கள் உடல்நலனைக் கெடுத்துக்கிறாங்க! பெற்றால்தான் குழந்தையா? பெறாமலே அருமையான தாய், தந்தையாக முடியுமே! குழந்தை இல்லாதவங்களும் ரெண்டாவது குழந்தையை விரும்பறவங்களும் தத்தெடுத்துக்கலாம். என் நண்பர் குடும்பம் ரெண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கு. இப்போ ஒரு பெண் அப்பாவைப் போலக் கணித விஞ்ஞானியாகணும்னு சொல்றா. இன்னொருத்தி அவ அம்மாவைப் போல கெமிஸ்ட்ரியில் கலக்கறாள்!” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“இப்பவே சொல்றேன் ஆன்ட்டி, நான் கண்டிப்பா ஒரு குழந்தையைத் தத்தெடுத்துப்பேன்” என்று கனிஷ்கா சொன்னவுடன் கைகொடுத்தார் கமலா பாட்டி.

“சவுதி அரேபியாவில் முதல் முறையா மகளிர் தினம் கொண்டாடியிருக்காங்க. சர்வதேச அளவில் பாலினச் சமத்துவம் அடிப்படையிலான தர வரிசையில் 145 நாடுகளில் 134-வது இடத்தில் உள்ளது சவுதி அரேபியா. அப்படிப் பின்தங்கியிருக்கும் ஒரு நாட்டுல முதல் முறையா மகளிர் தினம் கொண்டாடியிருக்காங்க. பிப்ரவரி 1 முதல் 4 வரை நடந்த கொண்டாட்டத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிரான கருத்தரங்குகள் நடந்தன. இதுல அரச குடும்பத்துப் பெண்களும் கலந்துக்கிட்டாங்க” என்றார் கமலா பாட்டி.

“அப்படியே பெண்களுக்குத் தர மறுக்கும் உரிமைகளையும் கொடுத்துட்டால் இன்னும் பாராட்டலாம். காஷ்மீரில் பனிக்காலத்துல விளையாடப்படும் ஸ்னோ ரக்பியில் இப்போ பெண்கள் அதிக அளவில் கலந்துக்கறாங்க. பள்ளி, கல்லூரி மாணவிகள் மத்தியில் இந்த விளையாட்டுக்குப் பெரிய வரவேற்பு. காஷ்மீரில் குளிர்கால விடுமுறைதான். ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த விளையாட்டுல இப்ப பெண்களும் கலக்கறாங்க. ஒரு வீராங்கனை, ‘எங்கப்பா ஆரம்பத்துல இதை ஏத்துக்கல. ஒருமுறை ஆடுகளத்துல நான் இருக்குற போட்டோவை பேப்பர்ல பார்த்துட்டு அரங்குக்கே வந்தார். தடைகளைத் தகர்த்தால் மட்டுமே மாற்றம் வரும்’ என்று சொல்லியிருக்கார்.”

“கரெக்ட்தான். வரும் ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கு. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்தில், ’பாலின சமத்துவத்தை நிலைநாட்ட கிரிக்கெட் ஒரு சிறந்த கருவியா இருக்கு. உலகம் முழுவதும் இந்த விளையாட்டுக்குப் பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அனைவரும் முழு மனதுடன் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று எழுதியிருக்கார் சச்சின் டெண்டுல்கர்” என்ற கனிஷ்கா, மூன்று சுக்கு காபியை வாங்கினாள்.

“துருக்கியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறாள் 11 வயது ஹாம்டு சேனா பில்ஜின். இவரது குடும்பத் தொழில் ஆடு மேய்ப்பது. ஹாம்டு ஆடு மேய்ப்பதுடன் விலங்குகளைப் பாதுகாக்கும் பணியையும் செய்துவருகிறாள். டாமி நாயின் துணையுடன் மலைப் பிரதேசத்தில் பனிக் குவியல்களுக்குள் ஆடுகளை மேய்த்துக்கொண்டு போகும்போது, ஒரு ஆடுக்குப் பிரசவம் நடந்திருக்கு. குளிரில் தாய் ஆடால் எழுந்து நடக்க முடியலை. குட்டிக்கும் நடக்க முடியலை.

என்ன செய்வதென்று யோசித்த ஹாம்டு, ரெண்டு பைகளை எடுத்துவந்தாள். ஒரு பையில் தாய் ஆட்டை வைத்து, தன் முதுகில் சுமந்துகொண்டாள். இன்னொரு பையில் குட்டியை வைத்து, நாயின் முதுகில் மாட்டிவிட்டாள். ரெண்டு பேரும் ஆடுகளை மேய்த்தபடியே அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தாங்க. அங்கே ஹாம்டுவின் அண்ணன், டாமியையும் அவளையும் பாராட்டி, படங்கள் எடுத்தான். விஷயம் இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் ஹாம்டுவும் டாமியும் பிரபலமாகிட்டாங்க!” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“அட! பதினோரு வயசுப் பொண்ணுக்கு எவ்வளவு சாமர்த்தியம்! அந்த நாயையும் ரொம்பப் பாராட்டணும். ரெண்டு பேரும் ரெண்டு உயிர்களைக் காப்பாத்திட்டாங்க!” என்று மகிழ்ச்சியோடு சொன்னார் கமலா பாட்டி.

“இன்னொரு நெகிழ்ச்சியான விஷயத்தைச் சொல்றேன். சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளின் பயணிகளும் அகதிகளும் அமெரிக்காவில் நுழைய தடைவிதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், பேஸ்புக் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தி எதிர்ப்புகளைக் காட்டிவருகின்றனர்.

சிகாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் யூதச் சிறுவனும் முஸ்லிம் சிறுமியும் தங்கள் அப்பாக்களின் தோளில் அமர்ந்தபடி, எதிர்ப்புப் பதாகைகளைப் பிடித்தபடி நட்புடன் பேசிக்கொண்டிருந்த காட்சி எல்லோரையும் கவர்ந்துவிட்டது. இந்தச் சிறுவர்களின் அப்பாக்களும் மிகவும் அன்புடன் பேசிக்கொண்டனர். அங்கேயிருந்தவர்கள், ‘இரண்டு அற்புதமான மனிதர்களும் அவர்களின் குழந்தைகளும் பேசிக்கொண்ட காட்சி அழகாக இருந்தது. அதில் யூதர், முஸ்லிம் எல்லாம் தெரியவேயில்லை’ என்று சொல்லிப் பெருமிதப்பட்டிருக்கிறாங்க” என்று கல்பனா ஆன்ட்டி சொல்லிக்கொண்டிருந்தபோதே கமலா பாட்டி எழுந்தார்.

மூவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்