பருவத்தே பணம் செய்: முதலீட்டுக்கு ஏற்ற நிறுவனம் எது?

By சி.முருகேஷ்பாபு

முதலீடு செய்வதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்று தோன்றலாம். எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் சந்தைச் செயல் பாடுகளைக் கணக்கிட இரண்டு வழிமுறைகள் உண்டு. முதலாவது ஃபண்டமண்டல் அனாலிசிஸ், இரண்டாவது டெக்னிகல் அனாலிசிஸ். இந்த இரண்டிலும் தெளிவு இருந்தால் நம்மால் முடிவுகளை எளிதாக எடுக்க முடியும்.

ஃபண்டமண்டல் அனாலிசிஸ்

வார்த்தையிலேயே அதற்கான விளக்கம் இருக்கிறது. ஃபண்டமண்டல் அனாலிசிஸ் என்றால் அடிப்படையை அலசுதல் என்று அர்த்தம். ஒரு நிறுவனத்தின் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது முதல் விஷயம். அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது, அந்த நிறுவனம் எந்த மாதிரியான தொழிலை நடத்துகிறது, அந்தத் தொழிலில் அந்த நிறுவனம் வெற்றிகரமாக நடக்கிறதா இல்லையா, அந்த நிறுவனத்துக்கான திட்டங்கள் என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அந்த நிறுவனத்தின் வருமானம் எவ்வளவு, அதன் வரவு செலவு கணக்குகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது போன்றவற்றை அலசி ஆராயும்போதுதான் நம்மால் அந்த நிறுவனத்தின் தன்மையையும் அதன் வளர்ச்சியையும் ஆராய முடியும். அவற்றை வைத்து நம்மால் சில முடிவுகளை எடுக்க முடியும்.

இதில் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுவதோடு அந்த நிறுவனம் கொடுக்கும் டிவிடெண்ட், அந்த நிறுவனத்தின் சொத்துகள், அந்த நிறுவனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள என்ன விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது, அந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரப்போகும் புதிய தயாரிப்புகள் போன்ற பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவெடுக்க நமக்கு இந்த ஃபண்டமண்டல் அனாலிசிஸ் உதவி செய்யும்.

அப்படி அந்த நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்களை அலசி ஆராயும்போது இன்னொரு பக்கம் அதனையொட்டி அதே துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களையும் தெரிந்துகொண்டு எளிதாக முடிவெடுக்க முடியும். அதற்கும் இந்த அடிப்படை அலசல் உதவும்.

டெக்னிகல் அனாலிசிஸ்

அடிப்படை அலசல் கொஞ்சம் கட்டுப்பெட்டித்தனமானது என்றால் இந்த டெக்னிகல் அனாலிசிஸ் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது. டெக்னிகல் அனாலிசிஸ் என்பது பங்குகளின் விலை, சந்தையின் போக்கு போன்றவற்றின் அடிப்படையில் அமைவது. கணக்குகளும் சார்ட்டுகளும் இந்த டெக்னிகல் அனாலிசிஸ் முறைக்கு உதவிக்கு வரும். பங்குகளின் விலைப் பயணம் எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கிடுவதன் மூலம் நாம் சில முடிவுகளை எடுக்க முடியும். சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கு பயணிக்கும் வேகம் அதன் விலையைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒரு நிறுவனத்தின் பங்கு குறைந்த விலையாக என்ன அளவுக்கு சரிந்திருக்கிறது, அதிகபட்ச விலையாக என்ன உச்சம்வரை தொட்டிருக்கிறது என்பதை வைத்து அந்த நிறுவனப் பங்கின் தன்மையை முடிவுசெய்யலாம்.

நிறுவனத்தின் பங்கு விலை மட்டுமல்ல சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்தும் சில கணக்குகளைப் போட முடியும். சந்தைப் பயணம் ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறதா என்பதை வைத்தும் அந்த கிராஃபை வைத்தும் டெக்னிகலாக சில விஷயங்களைக் கண்டறிய முடியும்.

இந்த இரண்டு வகைகளில் நாம் அலசி ஆராய்ந்து எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற முடிவை நம்மால் எடுக்க முடியும்.

கணக்குகள் மூன்று விதம்

சரி, இப்போது பங்குகளை வாங்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். எப்படி முதலீடு செய்வது? அதற்கு நமக்கு என்னவெல்லாம் தேவை? மூன்று விதமான கணக்குகள் இருந்தால்தான் நம்மால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். முதலாவது வங்கிக் கணக்கு. அதாவது நாம் பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கும் பணத்தை வைத்திருக்கும் கணக்கு. அடுத்ததாக டிரேடிங் கணக்கு. நம் பங்கு பரிவர்த்தனையைச் செய்வதற்கு இந்தக் கணக்கு நிச்சயம் தேவை. மூன்றாவது டீமேட் கணக்கு. நாம் வாங்கிய பங்குகளை வைத்து பாதுகாப்பதற்கான கணக்கு இது.

இந்த மூன்று கணக்குகளும் இருந்தால்தான் நாம் பங்குகளில் முதலீடு செய்யமுடியும். இதில் முதல் கணக்கான பணம் வைக்கும் கணக்கை வங்கியில்தான் தொடங்க முடியும். மற்ற இரண்டு கணக்குகளையும் ஏதேனும் ஒரு பங்குத் தரகு நிறுவனத்தில் தொடங்க வேண்டும். இப்போது பல வங்கிகளே பங்குத் தரகு நிறுவனங்களை நடத்துகின்றன. அப்படிப்பட்ட நிலையில் மூன்று கணக்குகளையுமே ஒரே இடத்தில் தொடங்கலாம்.

வங்கிக் கணக்கைப் புரிந்துகொள்ள முடிகிறது. டிரேடிங் கணக்கு என்னும் பரிவர்த்தனைக் கணக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. மூன்றாவதாக என்ன அது டீமேட் கணக்கு?

முந்தைய காலகட்டங்களில் பங்கு பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் பத்திரங்களாக வழங்கப்பட்டன. அவற்றைப் பாதுகாத்து வைப்பதிலும் விற்பனை செய்வது, வாங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் நிறைய சிரமங்கள் இருந்தன. அதனால், அனைத்தையும் எலெக்ட்ரானிக்மயமாக்கி அந்தப் பங்குகளை வைத்துக்கொள்ள வசதியாக டீமேட் கணக்கு என்ற முறை கொண்டுவரப்பட்டது. இதனால் தரகு நிறுவனங்கள் பாதுகாக்கும் சுமையில் இருந்து விடுபட்டுவிட்டன.

நாம் பங்குகளை வாங்கப் போகிறோம். நேரடியாக நாமே வாங்கிவிடலாமே, எதற்காக நடுவில் தரகர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், பங்குப் பரிவர்த்தனை முழுவதும் தரகு நிறுவனங்களின் மூலமே நடைபெற வேண்டும் என்பது நியதி. அதுதான் விதிமுறை. இந்தப் பங்கு பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக, நெறிப்படுத்துவதற்காக செபி என்ற அமைப்பு செயல்படுகிறது.

சரி, அப்படியானால் ஒரு தரகு நிறுவனத்தைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்கிவிட வேண்டியதுதானே என்று நினைக்கிறீர்களா? அந்தத் தேர்வுக்கு ஒரு செக் லிஸ்ட் தருகிறேன், பார்த்துவிட்டுத் தீர்மானியுங்கள்.

என்ன செக் லிஸ்ட் அது? அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்