எப்போதும் புதுமைப் பெண்களே!

By செய்திப்பிரிவு

அக்டோபர் 5-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி மெரின் ஜோசப்புக்கு நேர்ந்த அனுபவம் குறித்து எழுதியிருந்தோம். பெண்கள் என்னதான் படித்து, பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தாலும் அவர்கள் அழகுப் பதுமைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறார்களா என்று கேட்டிருந்தோம். அதற்கு நம் வாசகர்களிடம் இருந்து வந்து குவிந்த கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு...

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பிய சாதனையிலும் பெண் விஞ்ஞானிகளின் பங்கு குறிப்பிடும்படி இருக்கிறது. அறிவும் திறமையும் ஒருங்கே பெற்ற பெண்களை இந்தச் சமூகம் அங்கீகரித்து வரவேற்கிறது. ஆணாதிக்கச் சமூகத்துக்கு அடங்கி ஒடுங்கி இருந்த காலத்தில் வேண்டுமென்றால் பெண்களை அழகுப் பதுமைகளாகப் பார்த்திருக்கலாம். இது சாதிக்கும் பெண்களின் யுகம் என்பதைப் புரியாமல் சிலர் அவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசலாம். ஆனால் அதையும் கடந்து பெண்கள் சாதிப்பார்கள்.

- மா. பழனி, பென்னாகரம், தருமபுரி.

நளினமும் அழகும் பெண்களின் உடைமைகளே. ஆனால் அதை பொது இடத்தில், பொதுப் பார்வையில் காட்சிப் பொருளாக்குவது நியாயமா? அதைப்பற்றி பெண்களும் கவலைப்படுவதில்லை. விண்ணில் பறந்து சாகசம் செய்யும் பெண்மையை வியக்கலாம். ஆனால் அவர்களே விளம்பரம் என்னும் மாயைக்குள் விழுந்துகிடந்தால்? எழுத்தில், பேச்சில், சிந்தனையில் இப்படி எதிலுமே பெண்கள் போதையூட்டும் போகப்பொருளாகவே சித்திரிக்கப்படுகிறார்கள். இதைப் பெண்கள் போராட்ட உணர்வோடு எதிர்கொள்ளுதல் வேண்டும்.

- சின்னை வெங்கட்ராமன், சேலம்.

அவ்வையார், காரைக்கால் அம்மையார், எம்.எஸ் அம்மா போன்றோர் முதுமையில் கொள்ளை அழகுடன் இருந்தார்கள். ஆண்டாளும் மீராவும் இளமையில் பேரழகுடன் இருந்தார்கள். அதற்காக அவர்களை இந்தச் சமூகம் அழகுப் பதுமைகளாகவா பார்த்தது? இன்றைய கால மாற்றத்தாலும் கலாச்சார சீரழிவாலும் உயர் பதவியில் இருக்கும் பெண்களைக்கூட உடல்ரீதியாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. பாரதியாரின் கவிதைகளில் நிரந்தர இடம்பிடித்திருக்கும் பெண்கள் எப்படி அழகுப் பதுமைகளாக இருக்க முடியும்?

- எஸ். தங்கம், நங்கநல்லூர், சென்னை.

பெண்களின் அழகைக் கேவலமாக விமர்சிக்கும் வீணர்களை எத்தனை பாரதி வந்தாலும் திருத்தவே முடியாது. சமையலறையில் வெந்து புழுங்கும் பெண்களுக்கு மத்தியில் மெரின் ஜோசப் போன்ற சாதனைப் பெண்களைப் பாராட்டாவிட்டால்கூட பரவாயில்லை. தூற்றாமல் இருக்கலாம். பெண்கள் மீது விழும் இதுபோன்ற அற்பப் புழு விமர்சனங்கள் அவர்களின் சூரியப் பிரகாச வெற்றியில் கருகிப்போகும்.

- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

சோப்பு விளம்பரங்களில் தொடங்கி ஆண்கள் பயன்படுத்தும் ஷேவிங் கிரீம் விளம்பரங்கள் வரை அனைத்தும் பெண்களின் திறமை, படிப்பையா பறைசாற்றுகின்றன? அங்கே அவள் அழகுப் பதுமையாகத்தானே சுருங்கிப் போகிறாள்? அதையும் தாண்டி பெண்கள் சாதித்தால் அவர்களையும் அழகு சார்ந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பதை என்ன சொல்வது? ஒரு ஆண் ஜெயித்தால் சக நண்பர்கள் பாராட்டுவார்கள். இங்கே ஒரு பெண் ஜெயித்தால் அதில் ஏதோ ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவே இன்னொரு பெண் நினைக்கிறாள். இந்தப் போக்கும் மாறியே ஆகவேண்டும்.

எஸ். மங்கையர்க்கரசி, நெய்வேலி.

உயிரைத் திண்ண மாக மதித்துப் பணிபுரிந்தாலும், நேரம், காலம் பார்க்காமல் உழைப்பைக் கொட்டினாலும், தகுதி மூலம் உயர்பதவிகளை அடைந்தாலும் இந்தச் சமூகம் சில சாட்டை வார்த்தைகளாலேயே அவர்களை முடக்கிப்போட்டுவிடுகிறது. ‘சிரித்துப் பேசியே காரியம் சாதித்துக் கொள்வாள்’ என்ற ஆணின் வார்த்தைகளைத் தோற்கடித்துவிடும் அளவுக்குப் பெண்களின் வார்த்தைகளும் வலம் வரும். ஒவ்வொரு பெண்ணும் இதுபோன்ற விமர்சனங்களைத் தாங்கித்தான், தாண்டித்தான் சாதிக்க வேண்டியிருக்கிறது. இதில் சமத்துவமமாம், சமநீதியாம்.

- ஜே.சி. ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை.

அடுப்படியில் மட்டுமே முடங்கிவிடாமல் பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் சாதித்துவரும் நிலையில், பெண்களை மட்டம்தட்டுவதும் புறம்பேசுவதும் நகைப்புக்குரியது. பெண்கள் சூடிய வாகைகள் எல்லாமே அவர்களின் திறமையாலும் உழைப்பாலும் பெற்றவையே தவிர அவர்களின் புற அழகினால் வாய்த்தவை அல்ல. பெண்களின் உயர்வைச் சகிக்க முடியாமல் வெறும் பொறாமை உணர்வில் அபத்தமாகச் சிந்திப்பதைக் கைவிட வேண்டும்.

- லலிதா சண்முகம், உறையூர், திருச்சி.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும்போது திறமை மட்டுமே முக்கியத்துவம் பெறும். அழகு அங்கே இரண்டாம்பட்சம்தான். ஆனால் திறமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அழகைப் பற்றிப் பேசும் அநாகரிக மனிதர்களை உதறித்தள்ளிவிட்டு அடுத்தகட்டத்துக்குப் பயணிப்பதே சிறந்தது.

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர், சென்னை.

ஆண்கள் திறமையாலும் பெண்கள் அழகாலும் முன்னேறுகிறார்கள் என்பது திறமையற்றவர்களால் சொல்லப்படும் வெற்று கோஷம். இதைப் பொருட்படுத்தாமல் பெண்கள் தங்களது பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும். வெறும் அழகால் யாராலும் இங்கு ஜெயிக்க முடியாது. திறமையே ஒரு அழகென்பது ஜெயித்தவர்களுக்குத் தெரியும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

அத்துமீறி ஆட்டம்போடும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகத்தான் இதை நினைக்கத் தோன்றுகின்றது. பெண் விடுதலை குறித்த சிந்தனையோ அக்கறையோ துளியளவும் இல்லாமல், அடக்கியாளத் துடிக்கும் ஆண்களிடம் அடிமைகளாக இருப்பதே தங்களுக்குப் பெருமையெனக் கருதி, ஆணாதிக்கச் சிந்தனை கொண்டோருக்கு உறுதுணையாக இருக்க விரும்பி, பெண்களை மட்டம்தட்டும் கமெண்ட்களை எழுதிக் கொண்டிருக்கும் பெண்களை என்னவென்பது?

- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.

பெண்கள் இன்று அனைத்து துறையிலும் முத்திரை பதித்து வரும் வேளையில் சில பெண் பித்தர்களின் உளறல்களை வைத்து பெண்ணிற்கு உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை என கூறுவது தவறு. வெள்ளைச் சட்டையில் பட்ட கரும்புள்ளி பளிச்செனத் தெரிவதைப் போல, பெண்களின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் ஆங்காங்கே நடைபெறும் பெண்களுக்கு எதிரான ஒரு சில செயல்பாடுகளை பூதாகரமாக காட்டி பெண்ணை பணிக்குச் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியே இப்படிப்பட்ட கருத்துத் திணிப்புகள்.

- ச. கிறிஸ்து ஞானவள்ளுவன், வேம்பார்.

பெண்கள் தங்களது திறமையால் முன்னேறும்போது பலவிதமான கசப்பான அனுபவங்களைச் சந்திக்கின்றனர். தங்களால் சாதிக்கமுடியாததை பெண்கள் சாதிப்பதைப் பார்த்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒருசிலர் கேலி செய்வதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவே கூடாது. சமுதாயத்தில் தங்களது திறமை, படிப்பு ஆகியவற்றால் பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருக்கும் பெண்களே இதற்கு எடுத்துக்காட்டு.

- பானு பெரியதம்பி, சேலம்.

காலம் எத்தனை மாறினாலும் சமூக வரலாற்றில் பெண்களுக்கான பிம்பம் மட்டும் மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது. நவீனப் பெண்கள் நவீனமுறையில் அடிமைப்படுத்தப் படுகின்றனர். மற்றபடி, பெண்விடுதலை என்பது இங்கு சொல்லளவில்கூட அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சமையல் அறையில் முடங்கியும், கணவன் சொல்லைத் தட்டாமலும் வாழும் பெண்களையே பத்தினிகளாகக் கொண்டாடுபவர்களாக நாம் மாறி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயிற்று. காலந்தோறும் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பெண்களை ஒருபடி கீழே வைத்துப் பார்க்கும் ஆணாதிக்க மனோபாவத்திலான சமூகத்தின் நிலைப்பாட்டில் கொஞ்சமும் மாற்றம் இருக்காதோ எனும் அச்சம் நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கிறது.

- முருகவேலன், கோபிசெட்டிப்பாளையம்.

மானுட நாகரிகத்தின் உச்சத்தை அடைந்துவிட்டோம் என அறைகூவல் விடுக்கும் இந்நூற்றாண்டில்தான் பெண்கள் இன்னும் புற அழகினைச் சார்ந்தே முன்னிறுத்தப்படுகிறார்கள். திறமைகளை மீறி அழகு மட்டுமே தகுதியாக பார்க்கப்படுவது இன்றைய கணினி நிறுவனங்கள் முதல் கல்விக்கூடங்கள் வரை நிதர்சன உண்மை. இத்தடைகளை எல்லாம் மீறியே சாதாரண பெண்ணின் திறன் வெளிவர வேண்டி உள்ளது. இதில் முக்கிய உண்மை பெண்களே இத்தகைய மனநிலை கொண்டிருப்பதுதான். தான் பெண் என்பதையே ஒரு தகுதியாகக் கொண்டு தன் சுய லாபத்தை அடைய எண்ணுவதும் நிகழ்கிறது.

- மோனிகா மாறன், வேலூர்.

நாம் நம் நாட்டை தாய்த் திருநாடு என்கிறோம். நதிகளுக்குப் பெண்கள் பெயரை வைத்திருக்கிறோம். பெண்களைத் தெய்வமாக வழிபடுகிறோம். தாய்மையை போற்றிக் கொண்டாடுகிறோம். ஆனால் நடைமுறையில் பெண்களை இந்தச் சமூகம் அழகுப் பதுமைகளாகக்கூட பார்க்கவில்லை, அடிமைகளாகத்தானே பார்க்கிறது. ஐந்து வயது சிறுமியும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். ஐம்பது வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள்.

இவ்வளவையும் தாண்டி உயர் பதவிக்கு வரும்போது அவர்களைப் பற்றிய விமர்சனம் மிகவும் அநாகரிகமாகத்தான் இருக்கிறது. இப்படி விமர்சிப்பவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. பெண்கள் எந்த உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பழக வேண்டும், என்ன படிக்க வேண்டும், எந்த வேலைக்குச் செல்லவேண்டும் என்று கருத்து சொல்வதை விட்டு விடுங்கள். அது எங்களின் உரிமை, அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

- ராஜ புஷ்பா, கும்பகோணம்.

ஒரு பெண் எப்போதுமே பெண் என்ற ஒரே காரணத்துக்காகவே மட்டம் தட்டப்படுகிறாள். அதுவும் சில சமயம் பெண்களாலேயே. இந்தச் சமூகம் பெண்ணை எப்போதுமே அழகான ஒரு கண்ணாடிப் பதுமையாகவேதான் கையாளுகிறது. பலமுறை அவளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நொறுங்கச் செய்கிறது. இதை அந்தக் கண்ணாடிப் பதுமைகள் உணர்வதே இல்லை என்பதுதான் கொடுமை. ஒரு பெண் படித்து சமூகத்தில் பொறுப்பான ஒரு பதவிக்கு வருவது சாதாரண விஷயமில்லை. அதன் பின்னணியில் அவள் எதிர்கொண்ட அவமானங்கள், வேதனைகள், புறக்கணிப்புகள், வலிகள் என்று எத்தனையோ விஷயங்கள் வடுக்களாக இருக்கும்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE