பெண்ணும் ஆணும் ஒண்ணு 10: சடங்குகளில் இருந்து வெளியே வருவோம்

By ஓவியா

வீட்டைத் தாண்டி வெளி உலகம் என்று பரவலாக அறிமுகப்படுத்தப்படும் முதல் இடம் கோயில்தான். அதிலும் கிராமங்கள் கோயில்களுடன் இறுகப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. கோயில்களின் நடைமுறையையொட்டி வீட்டுக்குள்ளும் சடங்கு, சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மதம், சாதி என்ற அமைப்போடு ரத்தமும் சதையுமாக நமது மனிதர்களை இவையே இணைக்கின்றன. சிறுதெய்வ வழிபாடு குறிப்பாகக் கிராமங்களில் நமது மக்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது. அல்லது அதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில் சிறுமியர் எவ்வாறு உள்ளே கொண்டுவரப்படுகிறார்கள்?

வீட்டுக்குள் சுருங்கும் எல்லை

வீட்டில் அவள் ஏற்றும் விளக்கே அவளின் முதல் எல்லையைத் தீர்மானிக்கத் தொடங்குகிறது. விளக்கேற்றும் நேரத்தில் பெண் வீட்டுக்குள் இருக்க வேண்டும். தாய் தன் மகளுக்கு எப்படிச் சமையலையும் வீட்டு வேலைகளையும் சொல்லித்தர வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதேபோல் தனது குடும்ப பாரம்பரியச் சடங்கு, சம்பிரதாயங்களையும் மகளின் மூளைக்குள் ஏற்றுவதோடு, அதைச் செய்வதற்கான பயிற்சியையும் தரத் தொடங்குகிறார். “வேறு சாதிப் பெண் வந்தால் எங்க வீட்டுக்குச் சரிப் படாது” என்று நமது பெண்களைச் சொல்லவைப்பதும் இதுதான். சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு பெண்ணின் நேரமும் பண்டிகைகள், விரதங்கள், சடங்குகள் போன்ற சங்கிலியின் மூலமாக இந்தச் சாதிய அமைப்புடன் இறுக்கிக் கட்டப்படுகிறது.

உளவியல் சிக்கலின் முதல் புள்ளி

கிராமக் கோயில்களில் இப்போதும்கூட அம்மன்களே தெய்வங்கள். ஆனாலும் பூசாரிகளாக ஆண்களே இருக்க முடிகிறது. சில இடங்களில் விதிவிலக்காகப் பெண்கள் இருக்கிறார்கள். முக்கியமாக முளைப்பாரி, பூச்சட்டி எடுப்பது, விளக்கு பூஜை ஆகியவற்றில் பெண்கள் சிறுவயதிலிருந்தே ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் உச்சபட்சமாக ஏழெட்டு வயதுப் பெண்கள் முதற்கொண்டு கோயில்களில் சாமியாடப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் பையன்கள் சாமியாடுவதில்லை. பெண் குழந்தைகளே சாமியாடியாகிறார்கள்.

பெண் குழந்தைகள் நலனுக்காகத் தற்போது நூற்றுக்கணக்கான அமைப்புகள் செயல்படுகின்றன. ஆனால், பெண் குழந்தைகள் சாமியாடுவதால் ஏற்படும் பாதிப்பை, மருத்துவப் பிரச்சினையாக யாரும் முன்வைப்பதில்லை. உண்மையில் சடங்குகளோடு தங்களை மிக ஆழமாகப் பிணைத்துக்கொள்கிற பெண்கள், தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் மிகுந்த உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், பெரியாரைத் தவிர வேறு யாருக்கும் இந்த அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிற துணிச்சல் வரவில்லை.

தீய வழிகாட்டும் திரைப்படங்கள்

‘தெய்வ வாக்கு’ என்று ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது. நல்ல வாக்கு சொல்பவள் என்ற பெயரில் மக்களின் மூட நம்பிக்கைக்குப் பலியாகும் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி அந்தப் படம் பேசியது. கிட்டத்தட்ட அந்த ஒரு படம்தான், அந்தக் கோணத்தில் பேசியிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அந்தப் படமும், இதைத் தவறு என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியாமல் தடுமாறியே நின்றது.

தமது அடிமை வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாகப் பெண்கள் மாற்றிக்கொள்வதை நோக்கி, பெண்களை இவை மிக நுட்பமாகப் நகர்த்திக்கொண்டு போகின்றன. தங்களது அடிமைத்தனத்தை எப்படி நேசிப்பது என்று இந்தப் பண்டிகைகளும் திருவிழாக்களும் பெண்களுக்குக் கற்றுத் தருகின்றன.

‘உலகில் முதலில் தோன்றிய அடிமைத்தனம் பெண்ணடிமைத்தனம்தான். ஆனால், வெற்றி பெற்றவர்களாகிய ஆண்களுக்கு முடிசூட்டுகின்ற வேலையைப் பெண்கள் தாராளச் சிந்தையுடன் மேற்கொண்டார்கள்’ என்று தனது ‘குடும்பம் தனிச்சொத்து அரசு’ நூலில் அறிஞர் ஏங்கெல்ஸ் சொல்கிறார்.

அவர் குறிப்பிட்ட அந்த முடிசூட்டுகின்ற வேலையைத்தான் இந்தப் பண்டிகைகளை, சடங்குகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெண்கள் இன்றுவரை நிறைவேற்றிவருகிறார்கள். இதற்கு மிகச் சிறப்பான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், சுமங்கலி பூஜையைச் சொல்லலாம். ஒவ்வொரு பெண்ணும் சுமங்கலியாகச் சாக வேண்டுமென்று பூஜை செய்கிறார். இதன் பொருள் என்ன? தன் கணவன் மரணமடைவதற்கு முன்பாகவே தான் இறந்துவிட வேண்டும் என்பதுதான். சுமங்கலி பூஜை நடத்தப்பட்டுக்கொண்டிருந்தால், விதவைக் கொடுமை எப்படித் தீரும்?

நிம்மதிக்கு இடையூறு

இவற்றையெல்லாம்விடப் பெரிய கொடுமையாக இருந்த தேவதாசி முறையை நாம் ஒழித்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். ஆனால், அதற்கும் இடையூறுபோல் இப்போது கர்நாடகத்தில் குல்பர்கா மாவட்டம் சித்தாப்பூர் கிராமத்தில் பத்து வயசு சிறுமியருக்குப் பொட்டுக் கட்டிவிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி நம்மைத் தாக்குகிறது. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். கோயில்களில் நடன மாதராகச் சிறுமியர் பொட்டுக் கட்டி விடப்பட்டதை நிறுத்தி விட்டிருக்கிறோமே ஒழிய, திருவிழாக்களில் நடன மாதர்களை அழைத்து வந்து ‘ஆபாச நடனம்’ நடத்தும் முறையை நம்மால் நிறுத்த முடியவில்லை. இன்று இதே விஷயம் திரைப்படம், தொலைக்காட்சி வாயிலாக வீடுகளுக்குள் நுழைந்து திருவிழாக்களை முந்திக்கொள்கிறது. ஆனால், பெண் ஒரு பாலியல் பண்டமாக்கப்படுவது திருவிழாக்களின் தொடர்ச்சியாகவே திரைப்படங்களில் இடம்பெற்றது. அதனால்தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகும்கூட, ஏதோ ஓரிடத்திலிருந்து அது மீண்டும் வரத் துடிக்கிறது.

விட்டு விடுதலையாவோம்

எப்படி அம்மன் கோயில்களில் சிறுமியர் சாமியாடுகிறார்களோ, அதேபோல்தான் கிறிஸ்தவ ஜெபக் கூடங்களில், தர்காக்களில் அதிகமாகப் பேய் பிடிக்கப்பட்டவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள். பேயோட்டுகிறவர்கள் என்னவோ எல்லா இடங்களிலும் ஆண்கள்தான். அதிலும் இஸ்லாமிய சிறுமியர் மிக சிறு வயதிலேயே பர்தாவுக்குள் அனுப்பப்பட்டுவிடுகிறார்கள். வீட்டை விட்டு அவர்கள் வெளியே அனுப்பப்படும் ஒவ்வொரு முறையும் அவர்களது திரை அவர்களுடன் பயணிக்கிறது. ‘நீ பெண்… உனது நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன’ என்பதை இதைவிட அழுத்தமாக ஒரு குழந்தையின் மனதில் எழுத முடியுமா?

இப்படி மத நம்பிக்கைகளால் மன வியாதிக்கு ஆளாகிறவர்கள் பெரும்பகுதியும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்ற விஷயத்தையே பேசாமல், பெண்ணுரிமையைப் பற்றி யாரும் சிந்தித்துவிட முடியாது. இதுதான் மதமென்றால், இதை ஏன் பெண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று கேட்டார் தஸ்லிமா நஸ்ரின். இந்தச் சடங்குகள், பண்டிகைகளிலிருந்து விடுதலை அடையாமல் பெண்கள் விடுதலை அடைய முடியாது என்றார் பெரியார்.

(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச்செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்