புத்தகங்களின் பாதுகாவலர்

“நூலகர் பணி என்பது வெறுமனே புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து, திரும்பவும் வாங்கி வைப்பது மட்டும் அல்ல, அந்த நூல்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் கடமையும் பொறுப்புணர்வும் சேர்ந்தது” என்கிறார் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி நூலகர் லட்சுமி.

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்தால் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா எனும் மின்னணு ஊடகத்தின் விளைவாக இணையம், சிடி-ரோம், மின் இதழ் என்கிற புதிய வடிவங்களில் தகவல்களைத் தெரிந்துகொள்கிறோம். தற்போது டிஜிட்டல், வெர்சுவல் என கணினிமயமாக்கப்பட்ட நூலகங்கள் அனைத்து பகுதியிலும் பிரபலமாகி வருகின்றன. இந்த மின்னணு யுகத்தில் புத்தகங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

அவற்றைப் படிக்கிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. ஆனாலும் புத்தகங்களின் மீதான தன் ஈடுபாட்டையும், அவற்றை நவீன வடிவத்துக்கு மாற்றும் தன் ஆர்வத்தையும் சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் செயல்பட்டுவருகிறார் லட்சுமி.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் லட்சுமி, அங்கிருக்கும் சமய நூலகத்துக்குச் செல்லத் தவறுவதில்லை. அப்போதுதான் அங்கு தமிழ், கிரந்தம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மதம், கலாச்சாரம், ராமாயணம், மகாபாரதம், ஆகம வேதங்கள் என அரிய நூல்களின் தொகுப்பு 2 ஆயிரத்து 600-க்கும் அதிகமாக இருந்துள்ளதை அறிந்தார். நூற்றாண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த அந்த நூல்களில் பெரும்பாலானவை சிதிலமடைந்து, தூசிபடிந்து கையில் எடுத்து புரட்டிப் படிக்க முடியாத நிலையில் இருந்திருக்கின்றன.

இத்தகைய நூல்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினர் படித்து பயனடையும் வகையிலும் இ-புத்தகமாக மாற்ற வேண்டும் என தான் வேலை பார்க்கும் கல்லூரி நிர்வாகத்தில் லட்சுமி கூறியுள்ளார். அவர்களும் அனுமதி கொடுத்ததுடன், ரூ.7 லட்சம் பணஉதவியும் செய்துள்ளனர்.

இதையடுத்து கோயில் நிர்வாகத்துடன் பேசி அனுமதி பெற்ற லட்சுமி, கடந்த பிப்ரவரி மாதம் 3 மாணவர்களுடன் சேர்ந்து புத்தகங்களை ஸ்கேன் செய்து, ‘பிடிஎப் ஃபைல்’ ஆக மாற்றும் பணியைத் தொடங்கினார். பழைய மாடல் ஸ்கேனரில் புத்தகத்தை வைத்து அழுத்தினால், புத்தகத்துக்கு சேதம் ஏற்படுவதுடன் காலதாமதம் ஆகுமென கருதிய இக்குழுவினர், ரூ.1 லட்சம் மதிப்பில் நவீன ரக ஸ்கேனர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நவீன ஸ்கேனரில் புத்தகத்தின் பக்கங்களைத் திறந்து வைத்தாலே போதும், டேபிள் லேம்ப் போன்ற வடிவில் உள்ள விளக்கு ஒளியில் பக்கங்கள் ஸ்கேன் ஆகிவிடுகின்றன.

“முக்கியமானதாகக் கருதப்பட்ட 750 புத்தகங்களை இதுவரை ஸ்கேன் செய்து இ-புத்தகமாக மாற்றியுள்ளனர். இதில் அரங்கநாதர் குறித்த பாத்மோத்ச புராணம், காந்திஜியின் முழு தொகுப்பு ஆகியவை அடங்கும். வரும் 2016-ம் ஆண்டில் அனைத்து புத்தகங்களும் இ-புத்தகமாக மாற்றப்பட்டு சிடி பேக்கேஜாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கிவிடுவோம்” என்கிறார் லட்சுமி.

இத்தகைய அரிய தகவல்கள் மற்றும் புத்தகங்களைப் பக்தர்கள் எளிதில் படித்து அறிந்துகொள்ள வசதியாக கோயில் இணையத்தில் வெளியிடும் முயற்சியில் நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறதாம். தொடர்ந்து திருவனைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மற்றும் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை இ-புத்தகமாக மாற்றித்தர இருக்கிறார்கள்.

“தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில் நூலகங்களில் இதுபோன்ற பழமையான புத்தகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இ-புத்தகமாக மாற்ற அந்தந்த பகுதியில் உள்ள நூலகர்களும், சமூக அமைப்புகளும் கைகோக்க வேண்டும்” என்கிறார் நூலகர் லட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE