களம் புதிது: பயந்தால் ஜெயிக்க முடியாது! - திருச்சி மத்தியச் சிறையின் முதல் பெண் அதிகாரி

By அ.வேலுச்சாமி

1865-ம் ஆண்டு திருச்சி மத்தியச் சிறை கட்டப்பட்டது. 2,517 கைதிகளை அடைக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 150 வயதைத் தாண்டி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. இந்தச் சிறையின் முதல் பெண் கண்காணிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நிகிலா நாகேந்திரன். எளிமையான பேச்சு, அன்பான அணுகுமுறை, உதவும் எண்ணம் போன்றவற்றால் சிறைத்துறை காவலர்கள், பணியாளர்களிடம் மட்டுமின்றி, கைதிகளிடமும் இவருக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது.

பெண்களுக்குச் சவால் மிகுந்ததாக விளங்கும் சிறைத்துறையைத் தேர்வு செய்தது எப்படி?

நன்னடத்தை அலுவலராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்காக 2 முறை தேர்வு எழுதினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அந்தச் சமயத்தில், சிறை அலுவலர் பணிக்கான தேர்வும் நடைபெற்றது. அதில் பங்கேற்று தேர்ச்சி பெற்றதால், இந்தத் துறைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. இது நான் எதிர்பாராத ஒன்று.

சிறைக்குள் எந்த மாதிரியான பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன?

சிறைக்குள் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என்று நூற்றுக்கணக்கானோர் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் ஒரே நோக்கம் இங்கிருந்து நல்லபடியாக விடுதலையாகிச் செல்ல வேண்டும் என்பதுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுக் குற்றம் புரிந்து, தண்டனை பெற்றவர்கள். இதுபோன்றவர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது ஏதாவது காரணங்களைக் கூறிச் சாப்பிட மறுப்பது, காவலர்களுடன் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் இறங்குவார்கள். கைதிகளின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும்கூட, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தினாலே பிரச்சினை முடிந்துவிடும்.

திருச்சி மத்தியச் சிறையின் முதல் பெண் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதும் என்ன நினைத்தீர்கள்?

கிளைச் சிறைகளிலும் மாவட்டச் சிறைகளிலும் ஏற்கெனவே ஜெயிலராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் எனக்கு மேல் ஒருவர் கண்காணிப்பாளராக இருப்பார். ஆனால் பதவி உயர்வு மூலம் திருச்சி மத்தியச் சிறைக்குக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டபோது மகிழ்ச்சி ஏற்பட்டபோதிலும், மிகப்பெரிய சிறையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற லேசான தயக்கமும் இருந்தது. எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டு பொறுப்பை ஏற்றேன். அப்போதுதான், இந்தச் சிறையின் முதல் பெண் கண்காணிப்பாளர் நான் என்ற விவரம் தெரியவந்தது. இது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, பணியை மேலும் சிறப்பாகச் செய்ய ஊக்குவித்தது.

இதுவரை ஆண் கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கைதிகள், தற்போது உங்களுக்கு எந்தளவுக்குக் கட்டுப்படுகிறார்கள்?

கைதிகளிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ, அப்படித்தான் அவர்களும் நம்மிடம் நடந்துகொள்வார்கள். அவர்களும் மனிதர்கள்தான். நாம் முதலில் அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். இதுவரை யாரையும் நீ, வா, போ என்று ஒருமையில் பேசியதில்லை. நாள்தோறும் ரவுண்ட்ஸ் செல்லும்போது கைதிகளைச் சந்தித்துப் பேசுகிறேன். அவர்களின் குறைகளைக் கேட்டு, சட்டத்துக்குட்பட்டு, முடிந்தவரை உடனுக்குடன் செய்து கொடுக்கிறேன். இதனால் அவர்களும் எனக்கு மதிப்பளிக்கின்றனர்.

சிறை நிர்வாகத்தில் சவால்கள் என்னென்ன?

கைதிகள் தற்கொலை செய்துகொள்வதும், தப்பிச்செல்வதும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டாலே போதும். நிர்வாகம் சிறப்பாக அமைந்துவிடும். சில கைதிகள் அதிக மன அழுத்தத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து, தினமும் கண்காணித்து கவுன்சிலிங் அளிக்க வேண்டும். இதுதவிர, கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையேயான ஈகோவால் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரும். உடனடியாகச் சரியாகிவிடும். காவலர்கள், கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால், நிர்வாகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். அதன் பின் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

சிறைச்சாலை பற்றி சிறு வயதில் என்ன நினைத்தீர்கள்?

கல்லூரியில் படிக்கும் வரை தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே சிறையைப் பார்த்துள்ளேன். சிறை என்றால் அங்கு கைதிகளைக் கட்டி வைத்து அடிப்பார்கள், கொடுமைப்படுத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மகாநதி படத்தில் வரும் காட்சிகளைப் பார்த்த பிறகு, சிறை மீதான பயம் அதிகரித்தது. ஆனால், பணிக்கு வந்து நேரில் பார்த்த பிறகுதான் இது கொடுமைப்படுத்தும் இடமல்ல, குற்றம் செய்தவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம் என்று தெரிந்தது.

உங்கள் குடும்பத்தினரிடம் ஒத்துழைப்பு கிடைக்கிறதா?

சிறைக்குள் பணி என்பதால் ஆரம்பத்தில் ஒரு வித அச்சம் இருந்தது. இப்போது அந்தநிலை மாறிவிட்டது. என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றனர். குடும்பத்தினருடன் நீண்ட நேரம் செலவிட முடிவதில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு உண்டு. கணவரின் முழு ஒத்துழைப்பு இருப்பதால்தான், ஒரு வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் பணிக்கு வர முடிகிறது.

சிறைத்துறைப் பணியில் உங்களுக்கு கிடைத்த திருப்தி என்ன?

நிர்வாக ரீதியாக ஒவ்வொரு நாளும் முழுத் திருப்தியுடனேயே பணிபுரிகிறேன். எனினும், ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டுக் கைதியாகச் சிறைக்குள் வந்துவிட்டால், அவரது குழந்தைகளின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடுகிறது. அதுபோன்ற குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களின் படிப்புச் செலவுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவிவருகிறேன்.

சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பயப்படக்கூடிய நிலை வரும். ஆனால், பயந்தால் ஜெயிக்க முடியாது. தைரியமாகத் துணிந்து செயல்பட வேண்டும். சிறைத் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும், அதில் நாம் நடந்துகொள்ளும் அணுகுமுறையைக் கொண்டே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

மேலும்