பேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன்

By பிருந்தா சீனிவாசன்

மனதுக்கு வாஞ்சையான வார்த்தைகளைவிட, அசல் வாழ்க்கையைச் சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். வலிமை நிறைந்த வார்த்தைகளால் அசல் வாழ்க்கையைச் சொல்கிறவர் அருந்ததி ராய்.

இலக்கியத்துக்காக உலக அளவில் அளிக்கப்படுகிற புக்கர் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர், அதுவும் மிகச் சிறிய வயதில்! எழுதிய முதல் நாவலே அருந்ததிக்கு உலக அங்கீகாரத்தைக் கொடுத்துவிட்டது. ‘புதிதாக எதையுமே நான் எழுதிவிடவில்லை. என் கண்ணெதிரில் நடப்பதை எனக்கே உரிய மொழியிலும் நடையிலும் சொன்னேன்’என்று உறுதிபடச் சொல்கிறார் இந்த யதார்த்தவாதி.

‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’என்கிற இவருடைய முதல் நாவலுக்குப் பிறகு வேறெந்த நாவலும் இதுவரை வெளிவரவில்லை. ஏன் என்று கேட்கிறவர்களுக்கு, ‘நியுயார்க் டைம்ஸ்’இல் இப்படி பதில் சொல்லியிருக்கிறார் அருந்ததி. “ஏன் அதற்குப் பிறகு எதுவுமே எழுதவில்லை என்று பலர் கேட்கிறார்கள். எழுத்து என்றால் நாவல் மட்டும்தானா? இதுவரை நான் எழுதியவை எல்லாம் எழுத்து இல்லையா?”

அம்மாவின் வழியில்

மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகர். 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம். எழுத்தையும், போராட்டத்தையுமே தன் அடையாளமாகக் கொள்ளப்போகும் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சோம்பலுடன் அந்த ஊரை எட்டிப் பார்த்தது சூரியன். அந்தச் சூரியனின் பிரகாசிப்பையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டதுபோல கேரள கிறிஸ்தவ அம்மா மேரி ராய்க்கும் வங்க அப்பாவுக்கும் பிறந்தார் அருந்ததி.

காதலித்துக் கரம் கோத்த தம்பதி அவர்கள். முதல் குழந்தை பிறந்து, பெற்றோராகப் பதவி உயர்வு பெற்றதுமே தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிப் பிரிந்துவிட்டனர். அதனால் அம்மாவுடன் கேரளாவின் ஐமனம் கிராமத்தில் வளர்ந்தார் அருந்ததி. பெண்ணுரிமை இயக்கங்களில் அருந்ததி ராயின் அம்மா மேரி ராய் தீவிரமாக இருந்ததால், நினைவு தெரிந்த நாள் முதலாக அருந்ததிக்கும் சமூகத் தொடர்பு இருந்தது. தன் மகளுக்காகத் தந்தையுமான மேரி ராய், அருந்ததிக்குப் பொம்மைகளுடன் புத்தகங்களையும் வாங்கித் தந்தார்.

“நான் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த மிகச் சிறிய வயதில் என் அம்மா எனக்கு வாங்கித் தந்த முதல் புத்தகம், ‘எழுத்து சுதந்திரம்’. அதுதான் என் எழுத்துலகப் பயணத்தின் முதல் கல். எந்தக் கருத்தையும் பயமில்லாமல் எழுதச் சொன்னார் அம்மா.

என் புத்தகத்தில் நான் எழுதிய ஒரு வரி, எனது ஐந்தாவது வயதில் எழுதியது என்று சொன்னால் நம்புவீர்களா? நான் படித்த ஆஸ்திரேலி யன் மிஷனரியில் இருந்த ஒரு டீச்சர் எப்போது என்னைப் பார்த்தாலும், ‘உன் கண்ணில் சாத்தான் இருப்பதை நான் பார்க்கிறேன்’என்று சொல்வார். அந்த வார்த்தைகளுக்குப் பதிலடியாக, அப்போது நான் யோசித்து வைத்திருந்த வார்த்தைகளை என் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்” என்கிறார் அருந்ததி.

மனிதர்களைப் படிப்போம்

தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் புத்தகம் வாசிக்கிறார் அல்லது மனிதர்களைப் படித்துக்கொண்டிருக்கிறார் அருந்ததி. “நம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுத வேண்டிய எத்தனையோ சங்கதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியான கண்கொண்டு பார்க்கத் தொடங்கினாலே போதும். வார்த்தைகளுக்காகத் தவம் இருக்கத் தேவையில்லை” என்று தெளிவாக விளக்கம் கொடுக்கிற அருந்ததி, தனது பெரும்பாலான பொழுதை மனிதர்களுடனான உரையாடல்களில் கழித்திருக்கிறார்.

டெல்லியில் உள்ள கல்லூரியில் படித்தபோது கற்களை அடுக்கிக் கட்டடங்கள் கட்டும் படிப்புக்கு இடையில், சொற்களைச் செதுக்கிக் கவிதைகள் எழுப்பினார். இடையே காதல் மலர்ந்து, திருமணத்தில் முகிழ்ந்தது. ஒரு கட்டடக் கலைஞருட னான இவரது முதல் திருமணம் வெறுமையை ஏற்படுத்த, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது விவாகரத்து.

விருது வென்ற புத்தகம்

மண வாழ்க்கை முறிந்து போனாலும், முறியாத மனதுடன் மீண்டும் எழுத்தில் கவனம் செலுத்தினார் அருந்ததி. நிறைய கட்டுரைகள், விமர்சனங்களை எழுதிக் குவித்தார். புத்தகங்கள் வாங்கக் காசு வேண்டுமே? அம்மாவைத் தொல்லைப்படுத்த விரும்பாமல் டெல்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஏரோபிக்ஸ் வகுப்புகள் நடத்தி வருமானத்துக்கு வழி தேடிக்கொண்டார். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தார். தன் அலைவரிசையுடன் இணைந்துபோன இயக்குநர் பிரதீப்பை மணந்தார்.

தான் பார்த்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை எழுதுவது என்று முடிவு செய்தார். இவரது முதல் புத்தகம் வெளிவந்து அச்சு மை காய்வதற்குள் ஒரே மாதத்தில் 21 நாடுகளில் சுடச்சுட விற்றுத் தீர்ந்தது. புக்கர் பரிசையும் தட்டிச் சென்றது.

சமூக அக்கறை

இந்தப் புத்தகம் அருந்ததியின் சுயசரிதை என்று பலர் விமர்சனம் செய்தார்கள். “இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அத்தனை சுலபமில்லை. உண்மையின் சாரம் இல்லாமல் பொய்யாக எழுதிக் குவிப்பது எனக்குப் பிடிக்காது. உண்மையும் புனைவும் கலந்துதான் எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் புனைவாக இருந்தாலும், அது சொல்லும் உணர்வுகள் நிஜம்” என்று விளக்கம் அளித்துவிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டார் அருந்ததி.

மேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை எதிர்ப்புப் போராட்டத் தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு அணைக்காக 50 லட்சம் மக்களை ஆடு, மாடுகளைப்போல விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் என இவர் உரத்துக் கேட்டபோதுதான், பலரது கவனம் நர்மதை அணை மீது திரும்பியது.

ஒரு கட்டத்தில் நர்மதை அணை எதிர்ப்பாளர்களே இவரது நிலை குறித்து விமர்சிக்க, “நான் சத்தம் போட்டுப் பேசினால் தூங்கிக்கொண்டிருக்கிறவர்கள் விழித்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன், விழித்துக்கொள்ளட்டும் அத்தனை இந்தியர்களும்!” என பகிரங்கமாக அறிக்கைவிட்டு, எதிர்த்தவர்களின் வாயை அடக்கினார்.

அடக்குமுறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, மதத் தீவிரவாதத்தின் தோலை உரிக்கவும் தனது எழுத்துக்களை ஆயுதமாகப் பயன்படுத்தினார். தானும் களத்தில் இறங்கிப் போராடினார். இந்தியாவின் அணுஆயுதக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் ஆரம்பித்து, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ்ஷை ‘போர்க் குற்றவாளி’ என விமர்சித்தது வரை, இவரது நடவடிக்கைகள் அனைத்துமே பெரும் விவாதங்களுக்கு ஆளானவை.

உரிமைக்காகப் போராடுகிறவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும், அவர்களைச் சந்தித்து உண்மையை எழுதுவதில் அருந்ததி ராய்க்கு நிகர் அவரே. கேரளாவில் ‘ஆதிவாசி கோத்ரா மகா சபை’அமைப்பின் தலைவர்களைச் சிறையில் சந்தித்து எழுதியதில் தொடங்கி, மாவோயிஸ்ட்டுகளை அவர்களின் இடத்துக்கே சென்று பேட்டி கண்டு எழுதியது வரை, அனைத்துமே இவருடைய துணிச்சலான எழுத்துப் பணிக்கு சாட்சி!

2006ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘சாகித்ய அகாடமி’ விருதை, மறுத்துவிட்டார். “நான் எதிர்க்கும் அரசிடமிருந்தே எப்படிப் பரிசு வாங்கிக் கொள்வது?” என்பதே அவர் சொன்ன காரணம். “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும்போதுதான், அரசாங்கத்தில் நடக்கிற அநீதிகளைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்க முடியும். ஒரு பிரச்சினையைக் குறித்து நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அதற்கு நான் உடன்படுகிறேன் என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நான் பேசுகிறேன்” என்கிற அருந்ததி ராய், எந்த விமர்சனத்துக்கும் சோர்ந்து போவதில்லை.

தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளைக் கவனித்தும், அவற்றுக்கு மக்களின் தரப்பில் நின்று தன் விமர்சனங்களை முன்வைத்தபடியும் இருக்கிறார். காஷ்மீர் பிரச்சினை, அண்ணா ஹசாரேவின் இயக்கம், நரேந்திர மோடியின் அரசியல் நகர்வுகள் என்று இவர் கையில் எடுத்த அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே வித்தியாசமானவையாக இருந்தாலும், நாட்டில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள்.

“நான் ஒரு முறை எழுதியதை இன்னொரு முறை எழுதுவதே இல்லை. காரணம் எழுத்து என்பது சுவாசம். ஒரு முறை சுவாசித்துவிட்டு மீண்டுமொரு முறை அதே காற்றை சுவாசிப்பது சாத்தியமா?” என்கிற அவரது வார்த்தைகளே சொல்லி விடுகின்றன, அருந்ததியின் தீர்க்கமான பார்வையை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

3 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்