பத்து வருடங்கள் மென்பொருள் பொறியாளாராகப் பணிபுரிந்தவர் மாயா நாராயணன். தன் இரண்டு வயது மகனுக்காக, லட்ச ரூபாய் வருமானம் தந்த புராஜெக்ட் மேனேஜர் பதவியைத் துறந்தார். மாயாவின் இந்தத் திடீர் முடிவு அவரது அலுவலகம், நண்பர்கள், குடும்பத்தாரிடையே பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. தான் பெரிதும் நேசித்த வேலையில் மிகவும் திறமையோடு செயல்பட்ட மாயா இப்படியொரு முடிவு எடுக்க என்ன காரணம்? தன்னால் பணியிடத்திலும் குழந்தையிடமும் முழுக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் உணர்ந்தார். குழந்தை பிறந்தும் வேலையைத் தொடர்ந்த மாயா, வேலை நிமித்தமாக அவ்வப்போது வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. அலுவலகம் முடிந்து வீட்டில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நேரத்திலும் பணியிடத்தில் இருந்து அவசர அழைப்பு வரும். இதுபோன்ற பல சிக்கல்கள்தான் அவரை இந்த முடிவுக்குத் தள்ளின.
பிரபல ரேடியோவில் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுத் தலைவராக இருந்த கார்த்திகாவும் தனது இரண்டவாது மகள் பிறந்தவுடன் வேலையை விடும் நிலை ஏற்பட்டது. 6 நாட்கள் அலுவலகம், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று எந்தப் பொது விடுமுறை நாளுக்கும் விடுப்பு இல்லாத ஊடகத்துறையில் வேலையைத் தொடர்வதால் தன் இரண்டு குழந்தைகளையும் முழுமையாகக் கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற தவிப்பிலேயே தன் வேலையை விட அவர் முடிவு எடுத்தார்.
இது மாயா, கார்த்திகா ஆகியோரின் கதை மட்டுமல்ல. தம் துறையில் சாதித்த, சாதிக்க நினைத்த பெண்கள் பலரும் பேறு காலத்துக்குப் பிறகு எடுத்த முடிவு இதுதான். படிப்பு, உயர் பதவி, பணிக்கு ஏற்ற திறமை, அதிக சம்பளம் ஆகிய எதுவுமே இந்தப் பெண்களை இந்த முடிவிலிருந்து தடுப்பதில்லை. குழந்தைக்காக வேலையைத் தூக்கி எறிந்த எல்லாப் பெண்களின் அடிமனதிலும் வீரியத்துடன் இருப்பது தாய்மை மட்டுமே.
குழந்தையே உலகம்
குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தம் குழந்தையை, வீட்டிலுள்ள பெரியோரிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் பலர் இருந்தாலும், தானே தன் குழந்தையை பார்த்து வளர்க்கும் ஆசையில் தன் கனவுகளுக்குப் பூட்டுப்போட்டுவிட்டு அவர்களின் நிழலாக உலா வர நினைக்கும் அம்மாக்களும் இங்கு இருக்கிறார்கள். குழந்தையின் சின்னச் சின்ன அசைவுகள் முதல், அதன் மழலைப் பேச்சு, தவழ்ந்து வரும்போது ஏற்படும் பரவசம், தத்தி நடக்கும் அழகு, பள்ளிக்குச் செல்லும் பொலிவு, அன்பு முத்தம் என்ற அற்புதமான தருணங்களைப் பிஞ்சுகளுடன் உடனிருந்து ரசிக்க விரும்பும் அம்மாக்கள் அதிகமாகவே உள்ளனர்.
இதற்கு மாறாக, பிஞ்சுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் அம்மாவின் மனம் ‘குழந்தை சாப்பிட்டானா?’, ‘பத்திரமாகப் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டாளா?’ என்று பதைபதைத்துக் கொண்டிருக்கும் நிலைதான் பெரும்பாலும் உள்ளது. இத்தகைய தவிப்பால் பணியில் முழுக் கவனம் செலுத்த முடியாமால் பல பெண்கள் திண்டாடுகிறார்கள். குழந்தையைப் பள்ளி, பாட்டு, நடனம், ஓவியம், விளையாட்டு முதலான பயிற்சி வகுப்புகளுக்குத் தானே அழைத்துச் செல்வதில் பேரானந்தம் அடைவதாகவே பல அம்மாக்கள் கூறுகின்றனர்.
குடும்பம், அலுவலக ஒத்துழைப்பு
இன்றைய காலகட்டத்தில் பெண்களை நன்கு படிக்க வைக்கும் பெற்றோரும் சரி, கணவன்களும் சரி, அவள் உயர் பதவியில் பணிபுரிவதைப் பெருமையாகவே நினைக்கிறார்கள். பலர் தம் துணைவியருக்கு உறுதுணையாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் குழந்தை என்று வரும்போது, அவர்களை விட்டுகொடுத்துவிட பெண்களின் மனது சுலபமாக முன்வருவதில்லை. இதற்குப் பல காரணிகள் உள்ளன.
பல அலுவலகங்கள், மூன்று மாதப் பேறு கால ஓய்வுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண்களை மற்ற பணியாளர்கள் போல்தான் நடத்த விரும்புகிறது. இதில் தவறு ஒன்றும் இல்லை. என்றாலும், போக்குவரத்து நெருக்கடியில் பயணம் செய்து அலுவலகம் சென்று, குறைந்தது எட்டு மணி நேரமாவது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் சோர்வையும் மறந்து, குழந்தையை வாரி அணைத்து கொஞ்ச ஆவலுடன் போகும்போது, அந்த குழந்தை தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் உடைந்துபோய் விடுகிறார்கள் அம்மாக்கள்.
பணியைத் தொடர ஏற்ற துறைகள்
வேலை செய்யும் பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் இந்த நிலை என்று சொல்லிவிட முடியாது. அரசுத் துறை, வங்கித் துறை, ஆசிரியர் பணி, வழக்கறிஞர்கள், மனிதவள மேம்பாடு போன்ற சில துறைகளைச் சேர்ந்த பெண்கள் குழந்தை பிறப்பிற்குப் பின்பும் பணியினை தொடர்வது ஆய்வுகள் மூலம் தெரிகிறது. இந்தப் பணிகளில், அலுவலக நேரமும், வேலையின் இயல்பும் பெண்களுக்குத் தோதாக அமைந்துவிடுகின்றன.
வார இறுதி விடுமுறை, 6-8 மணி பணி நேரம், தேவையான அளவு விடுப்பு எடுத்துக்கொள்ளும் சலுகைகள், பெரிய அளவில் பணி அழுத்தமில்லாமை என்றெல்லாம் இதற்குப் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கும் மற்ற துறைகளான மார்கெட்டிங், ஐ.டி., விற்பனைத்துறை, விளம்பரத்துறை, ஊடகம், பிசினஸ் அனாலஸிஸ், பி.பி.ஓ., இதிலெல்லாம் ஒரு பெண் தாயாகிய பின் தொடர்வது அசாத்தியமாகிவருகிறது.
12 மணி நேரம் வரை பணி நேரம், திடீர் வெளியூர்ப் பயணம், இரவு ஷிப்டுகள், பதவி உயர உயரக் கூடுதல் பணி அழுத்தம் இவையெல்லாம் குழந்தையுடன் உள்ள பெண்களைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன என்றே சொல்ல்லாம்.
குழந்தையுடன் செலவிடும் நேரத்தை எண்ணி மகிழ்ச்சியடையும் பெண்களின் மனதின் ஓரத்தில், மீண்டும் பணிக்குச் செல்ல விரும்பும் ஆசை அவ்வப்போது எட்டி பார்க்கத்தான் செய்கிறது. “குழந்தை பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும்போதுதான் தன் கனவைப் பற்றிச் சிந்தித்து, மீண்டும் வேலை தேடலாமா என்று பல பெண்கள் யோசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் பணி இடைவெளி காரணமாக வேலை கிடைப்பது மிகவும் கடினம் ஆகிவிடுகிறது” என்று கூறுகிறார் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்.
இது போன்ற பெண்களுக்காகவே பிரத்யேகமாக ‘ப்ளெக்ஸி கேரியர்ஸ்’ என்ற திட்டத்தின் மூலம், பல துறை நிறுவனங்களுடன் விவாதித்து, இப்பெண்களுக்காகப் பகுதி நேர வேலைவாய்ப்பையும் வீட்டிலிருந்தே பணி செய்யும் ஏற்பாட்டையும் ஏற்படுத்திவருகிறார், அவ்தார் கேரியர் என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான சௌந்தர்யா.
பெண்கள் எல்லாத் துறைகளிலும் காலூன்றி வெற்றிகரமாகத் திகழ்ந்துவரும்போது, தாய்மை என்ற அவளின் ஒரு பகுதி அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சௌந்தர்யா இந்த முயற்சியைச் செய்துவருகிறார். இந்த முயற்சியைப் புரிந்துகொள்ளும் நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைக்கின்றன. தேவைப்படும்போது, அதாவது குழ்ந்தைகள் வளர்ந்த பின், மீண்டும் முழு நேரப் பணிக்குத் திரும்ப இந்த அனுபவம் உதவியாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பு ஒரு பெண்ணின் வாழ்வில் அற்புதமான உணர்வைத் தரும் பகுதி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதுவே பெண்ணின் திறமையை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் சுவராக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னால் இயன்றதைச் செய்து, ஒரு பெண் தன் பணித் திறனையும் சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்துவிடாமல் இருப்பது முக்கியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago