அறிவியல் துறையில் காலந்தோறும் பெண்கள்

By பிருந்தா சீனிவாசன்

ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் ஒரு விஞ்ஞானியின் படத்தை வரையச் சொன்னார்களாம். கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு மாணவர்கள், ஆண் விஞ்ஞானியின் படத்தையே வரைந்தார்கள். விதிவிலக்காக நூற்று சொச்சம் மாணவிகளும், 6 மாணவர்களும் மட்டுமே பெண் விஞ்ஞானியின் படத்தை வரைந்திருக்கிறார்கள். விஞ்ஞானிகள் என்றதுமே ஒரு ஆணின் பிம்பத்தை மட்டுமே ஆய்வுக்கூடத்துடனும் குடுவைகளுடனும் பொருத்திப் பார்க்கும் இந்த மனப்பான்மை எப்படித் தோன்றியது என்று தெரியவில்லை.

ஆனால் இதுபோன்ற பிற்போக்கு நினைப்புகள் ஆதியில் இருந்ததா? கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புதைபடிமம், அந்த நினைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அந்தப் படிமத்தில் சுமேரியாவைச் சேர்ந்த ஒரு பெண் மதகுருவின் உருவமும் பெண் மருத்துவரின் உருவமும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பண்டைய எகிப்தில் கி.மு. 2ஆம் நூற்றாண்டு மற்றும் அதையொட்டிய காலகட்டத்தில் மெரிட், ஜிப்போரா ஆகிய பெண் மருத்துவர்கள் இருந்திருப்பதற்கான ஆதாரமும் கிடைத்திருக்கிறது. ஒன்று இந்த மருத்துவர்கள் ஆண்களுடன் சரிசமமாக இணைந்து மருத்துவம் பயின்றிருக்க வேண்டும். இல்லையெனில் அந்தக் காலத்தில் பெண்களுக்குத் தனி கல்வி அமைப்புகள் இருந்திருக்க வேண்டும்.

மருத்துவத்தில் பெண்கள்

பல நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நாட்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியும் பெண்களின் பங்களிப்போடுதான் நடந்திருக்கிறது. பிதகாரஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் குழுவில் பெண்கள், ஆண்க ளுக்கு இணையாக அங்கம் வகித்திருக்கிறார்கள். சில நாடுக ளில் பெண் மருத்துவர்கள், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் ரோம் நகரில் பெண் மருத்துவர்கள், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் சிகிச்சையளிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது.

அதேபோல அலெக்ஸாண்டி ரியாவைச் சேர்ந்த மேரி என்கிற வேதியியல் வல்லுநர் சிற்சில கண்டுபிடிப்புகளையும் இந்த உலகிற்கு வழங்கியிருக்கிறார்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹைபாத்தியாவின் அறிவியல் பணி அளப்பரியது. இவர் தன் தந்தையின் வழிகாட்டுதலில், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த வகுப்புகளை நடத்தியிருக்கிறார். திரவங்களின் அடர்த்தியைக் கண்டறிவதற்கான கருவியையும், விண்ணில் நட்சத்திரங்களின் இடத்தைக் கண்டறியும் தொலைநோக்கியையும் ஹைபாத்தியா கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்து வந்த நூற்றாண்டு களில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து, முடிவில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றி ரண்டு பேர் மட்டுமே நிலைத்து நின்றனர்.

என்ன செய்யப் போகிறோம்?

இப்போதும் உலக அளவில் கணக்கெடுக்கும்போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டிய லில் பெண்களைத் தேட வேண்டியி ருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற்றோர்கள் தடுக்கிறார்களா? முழுவதுமாகத் தடுப்பதில்லை, ஆனால் அதற்கான எல்லையைச் சுருக்கிவிடுகிறார்கள். அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன் களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மை யில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. அந்த வரலாறு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதும், தடைகளை அகற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

உலகின் முதல் பெண் அறிவியல் வல்லுநர்

அறிவியல்முறைப்படி எதையும் சாதிக்கமுடியும் என்பதை முதலில் சாத்தியப்படுத்திக் காட்டியதும் ஒரு பெண்தான். இவர் தனது ஆராய்ச்சியை நறுமணங்களில் இருந்தே துவங்கியிருக்கிறார்.

சைப்ரஸ், பால்சம், பலவகை மூலிகைகள், மலர்கள், இயற்கை எண்ணெய்கள், பலவகை கொட்டைகள் இவற்றில் இருந்து நறுமணத் திரவத்தைப் பிரித்தெடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்ததும் இவர்தான்.

வேதியியல்கூடங்களும், ஆய்வக உபகரணங்களும் இல்லாத நாளிலேயே டிஸ்டிலேஷன் எனப்படும் காய்ச்சி வடித்தல் முறையைச் சாத்தியப்படுத்தியதும் அதே பெண்தான். பண்டைய மெசபடோமியாவில் வாழ்ந்த தாப்புச்சி என்னும் பெண்தான் உலகின் முதல் பெண் ஆய்வக வல்லுநர். அவரே தொழில்முறையாக மலர்களில் இருந்து நறுமணத் திரவியங்களை முதன்முதலில் வடித்தெடுத்தவர்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த கியூனிபார்ம் அட்டவணை, அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆய்வுக்கூட வல்லுநர் தாப்புச்சி மட்டுமே. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு இணையாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதனைகளைப் படைத்தவர் இவர்.

தாப்புச்சி, தனியொரு மனுஷியாக முன்னின்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். இவர் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் வேதியியல் ஆய்வுக்கூடத்தை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். பீங்கான் குடுவைகள், கிண்ணங்கள், இலைகளை அரைக்கப் பயன்படும் சிறிய உரல்கள் போன்றவற்றை வைத்து நறுமணத் திரவியத் தயாரிப்பு நடந்திருக்கலாம் என்பது அகழ்வாராய்ச்சியாளர்களின் கருத்து.

தாப்புச்சிக்குப் பிறகுதான் பல ஆண்கள், நறுமணத் திரவியங்கள் தயாரிப்பில் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனாலும் நறுமணத் திரவியங்களின் ஆதித்தாய் தாப்புச்சிதான். அவருடைய நினைவாக சில நறுமணத் திரவியங்கள் அவருடைய பெயரிலேயே உலாவருகின்றன.

இன்று எண்ணிடலங்கா நறுமணங்களில் செயற்கை திரவியங்கள் வந்துவிட்டன.

ஆனால் இயற்கையான, உடலுக்கு எந்த தொந்தரவும் தராத தாப்புச்சியின் நறுமணத் திரவியம் தனித்துவம் நிறைந்தது. அந்த செயல்முறையின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் மலர்களில் இருந்தும், பலவகை வாசனைப் பொருட்களில் இருந்தும் நறுமணத் திரவியங்கள் தயாரிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்