படித்தவர்கள் விவசாய வேலைகளைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் பிருந்தா தேவி மாற்றிக் காட்டியிருக்கிறார். ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு, சிறந்த வீட்டுப் பண்ணைகளை உருவாக்கி, விவசாயம் சார்ந்த தொழில்களில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் பிருந்தா தேவியைத் தேடி விருதுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
ஈரோடு பங்களாபுதூரைச் சேர்ந்த பிருந்தா தேவி, உழைப்பாளர்களுக்கே உரிய எளிமையோடு காட்சியளிக்கிறார். ”நாங்கள் கூட்டுக் குடும்பமாக இருக்குறோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. 10 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவர்றோம். என் பிறந்த வீடும் விவசாயக் குடும்பம்தான். என் புகுந்த வீடும் விவசாயக் குடும்பம்தான். அதனால் எனக்கு விவசாய வேலை ஒண்ணும் கஷ்டமா இருந்ததில்லை. எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையா பிரிச்சு, ஒண்ணா சேர்ந்து உழைக்கிறோம். இந்த வேலைகளை வழிநடத்தற பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கார் என் கணவர். நான் கல்யாணமாகி வந்தபோது என் மாமனார் 10 மாடுகளை வச்சிருந்தார். அதை முறையாகப் பராமரிச்சதால், அதிகப் பால் உற்பத்தியாளர் விருதை ஆவின் அவருக்கு வழங்கியது. அதை ஏன் இன்னும் விரிவா செய்யக் கூடாதுன்னு நினைச்சேன். குடும்பத்தினரோடு பேசினேன். மாடுகளை வாங்கினோம். இப்ப எங்க வீட்டுப் பண்ணையில் 65 மாடுகள் இருக்கு. 35 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் என்று ஒரு நாளைக்கு 300 லிட்டர் பால் விற்பனை செய்யறோம்” என்று பிருந்தா தேவி சொல்லும்போது, கூட்டு உழைப்பின் மகத்துவம் புரிகிறது!
பால் வருமானம் மட்டுமின்றி, மாட்டின் சாணத்தைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து, ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இவர்களின் நிலங்களுக்கும் இந்த உரங்களைத்தான் பயன்படுத்திக்கொள்கிறார். பசுஞ்சாணம், கோமியம், பால், தயிர் பயன்படுத்தி பஞ்சகவ்யம் தயாரித்து, ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்துவருகிறார்.
விவசாயத்தை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், பல்வேறு உப தொழில்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் கோபியில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான மைராடா வேளாண் அறிவியல் நிலையம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டதால், பிருந்தா தேவி சிறந்த விவசாயியாகவும் விருதுகளை நோக்கியும் பயணிக்க ஆரம்பித்தார்.
“என்னுடைய சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் பின்னால் என் கணவர் ஈஸ்வரமூர்த்தியின் விவசாய அறிவும், மச்சினர் தங்கவேலின் வேளாண் பொறியியல் படிப்பும் பெரும்பங்கு வகித்திருக்கிறது” என்று சொல்லும் பிருந்தா தேவியும் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவரது வளர்ச்சியில் மைராடா வேளாண் மையம் பெரிய அளவில் உதவியிருக்கிறது. பரண் மேல் ஆடு வளர்ப்புத் திட்டத்துக்கான பயிற்சியை இங்குதான் பெற்றிருக்கிறார். 10 அடி உயரத்தில், நான்கு அடிக்கு மேல் பண்ணை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்துவருகிறார். 10 ஆடுகளில் ஆரம்பித்த ஆடு வளர்ப்பு, இன்று 180 ஆடுகளாகப் பல்கிப் பெருகியிருக்கின்றன. ஓர் ஆடு இரண்டு ஆண்டுகளில் 6 குட்டிகள் போடும். ஒரு குட்டி ஆறு மாதத்தில் 20 கிலோ வரை வளரும். கிலோ 250 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து, இவர் பண்ணைக்கே வியாபாரிகள் வந்து, வாங்கிச் செல்கிறார்கள். பரண் மேல் ஆடு வளர்ப்பதால், அதன் கழிவுகள் கீழே தேங்கும். அதனைக் கொண்டு ஆர்கானிக் உரம் தயாரித்து, தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். 60 நாட்டுக்கோழிகளையும் இவரது பண்ணையில் வளர்க்கிறார்.
பிருந்தா தேவி குடும்பத்தாரின் வீட்டுப் பண்ணைகளைப் பார்வையிட்ட மகேந்திரா நிறுவனம், சிறந்த பண்ணையாளர் விருதை வழங்கிக் கவுரவித்துள்ளது. ஆஸ்பி (ASPEE) விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினர், பிருந்தா தேவியின் ஆடு வளர்ப்பு முறையைப் பார்வையிட்டனர். தேசிய அளவில் பெண்கள் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் ஆடு வளர்ப்புக்கான எல்.எம்.படேல் விருதை, கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற விழாவில் வழங்கி, 1 லட்சம் ரூபாய் பரிசையும் அளித்தனர்.
“இன்று விவசாயம் எளிதான விஷயமாக இல்லை. ஆனாலும் புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு, விவசாயம் சார்ந்த வேலைகளையும் சேர்த்துச் செய்யும்போது, வானம் பொய்த்தாலும் நஷ்டத்திலிருந்து தப்பிவிடலாம் என்பது எங்கள் அனுபவங்களில் கண்டுகொண்ட உண்மை. இளம் தலைமுறையினர் விவசாய வேலைகளுக்குத் தைரியமாக வரலாம். எனக்குக் கிடைத்த விருதுகளை விவசாயப் பணிகளைச் செய்துவரும் அனைத்துப் பெண்களுக்குமான விருதாகவே கருதுகிறேன்” என்ற பிருந்தா தேவி, பண்ணை வேலைகளில் மூழ்கினார்.
படங்கள்: ஆர்.ரவிச்சந்திரன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago