பங்குச் சந்தையில் வெற்றிகரமாக இயங்க ஞானியின் மனநிலை வேண்டும் என்று சொன்ன வாரன் பஃபெட் ஒரு ஞானிதான்! தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் விஷயத்தை மட்டுமே அவர் தன் தொழிலில் செயல்படுத்துவார். அவர் சொல்லும்
மந்திர வார்த்தைகளுக்காக முதலீட்டாளர் உலகமே காத்துக்கொண்டிருக்கும். நடைமுறைச் சாத்தியங்களோடு பேசக்கூடியவர். “ஷேவ் செய்வது நம் அன்றாடச் செயல்களில் ஒன்று. அதனால் பிளேடு தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வேன்” என்று சொல்லக்கூடியவர் அவர். இந்த யதார்த்தம் இருந்தால் நாமும் வெற்றி கரமான முதலீட்டாளராக இருக்க முடியும்.
வாரன் பஃபெட்டிடம், “ஐடி துறை பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறதே, நீங்கள் ஏன் பில்கேட்ஸின் நிறுவனத்தில் முதலீடு செய்வதில்லை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நான் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தும் சூழல் வரும்போது பார்க்கலாம்” என்றார். அதுபோலவே பின்னாளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு முதலீடு செய்தார்.
வாழ்க்கைதான் வழிகாட்டி
எந்த மாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்பதை நம் தினசரி நடவடிக்கையில் இருந்தே முடிவுசெய்யலாம். காலையில் பல் துலக்குகிறோம், குளிக்கிறோம். அதற்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை நாம் கவனிக்க வேண்டும். சொந்த வீடாக இருந்தால் அதைக் கட்டிய நிறுவனம் எப்படிப்பட்டது என்று கவனிக்க வேண்டும். வீட்டிலிருந்து புறப்பட்டு எதில் போகிறோமோ அதுவும் கவனிக்க வேண்டிய விஷயம், ஆட்டோமொபைல். அலுவலகத்தில் கணினி பயன்படுத்துகிறோம். அந்தக் கணினி நிறுவனமும் நம் கவனத்தில் இருக்க வேண்டும்.
இப்படிக் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை நாம் ஏதாவது ஒருவகையில் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் கைகோத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதை நிறுவனமாகப் பார்க்காமல் துறையாகப் பார்த்தால் இன்னும் எளிமையாக இருக்கும்.
நுகர்பொருள் விற்பனைத் துறை, கட்டுமானத் துறை, ஆட்டோமொபைல் துறை, வங்கித் துறை, ஹோட்டல் துறை, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று எல்லாமே நம் வாழ்க்கையோடு இணைந்தவை. இந்தத் துறைகளில் எந்த நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பார்த்தால் நம்மால் தெளிவான முதலீட்டு முடிவை எடுக்க முடியும். எது சிறப்பானது?
சரி, துறைகளை எளிதாக அடையாளம் கண்டுகொண்டு விடுகிறோம் என்றாலும் அதற்குள் சிறப்பான நிறுவனம் எது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? கொஞ்சம் பொறுமையோடும் தெளிவான பார்வை யோடும் பார்த்தால் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
நமக்குப் பரிச்சயமான வங்கியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். நமக்குக் கணக்கு இருக்கும் வங்கி என்றெல்லாம் பார்த்து சிறப்பான முதலீட்டைச் செய்ய முடியாது. எல்லா வங்கிகளையும் நோட்டம் பார்க்க வேண்டும். எல்லோருமே ஓரளவுக்கு ஒரே மாதிரியான திட்டங்களைத்தான் வைத்திருப்பார்கள். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுதான் வங்கிகளால் செயல்பட முடியும். ஆனால், அதைத்தாண்டி சில வங்கிகள் வாடிக்கையாளர் சேவையில் தனித்தன்மையோடு செயல்படுவார்கள். கவர்ச்சிகரமான டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளரை ஈர்த்து, தங்கள் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுவார்கள். அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் லாபமும் அதிகமாக இருக்கும். நாம் அதைக் கவனித்து வந்தாலே எந்த வங்கி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அந்த வங்கியின் பங்குகளை வாங்கிப்போட்டுவிட வேண்டியதுதான்.
அதிகபட்ச மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கி அரசு அறிவிப்பு வெளியிட்டபோது எல்லா வங்கிகளுமே திகைத்துதான் போய்விட்டன. ஒருசில வங்கிக் கிளைகளைத் தவிர்த்துப் பார்த்தால், வங்கிகளின் முயற்சி பாராட்டுக்குரியதாகவே இருந்தது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல வங்கிகள் செயல்பட்டன. அந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் போட்டாலே நாம் எந்த வங்கியில் முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்துவிட முடியும்.
செய்திகளும் உதவக்கூடும்
வங்கி போலவே நம் கண்முன்னே இருக்கும் பல துறைகளையும் கண்காணித்துப் பார்க்க நமக்குப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. செய்தித்தாளில் இருக்கும் ஒரு செய்தி நம் முதலீட்டு வாய்ப்பை உருவாக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற ஒரு செய்தி நம் முதலீட்டை ஆட்டோமொபைலில் செய்யலாமா, எண்ணெய் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாமா என்று முடிவெடுக்க உதவும். இந்த வழிகளில்தான் நாம் முதலீட்டு வாய்ப்பைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதில்லை. இதுவும் மிக முக்கியமான ஒரு வழி.
சரி, இப்போது துறையும் தெரிந்துவிட்டது, நிறுவனத்தையும் முடிவு செய்துவிட்டோம். எப்போது வாங்குவது, எவ்வளவு வாங்குவது? இது மிக முக்கியமான கேள்வி. இதற்கும் வாரன் பஃபெட் வார்த்தைகளே துணைக்கு வருகின்றன. அதைப் பற்றிப் பேசுவோம்.
(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago