‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ எனும் சொல் வழக்கு உள்ள தமிழகத்தில்தான் ‘சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்ற சொல் வழக்கும் இருக்கிறது. அதேபோல ‘ஆமை புகுந்த வீடு நன்றாக இருக்காது’ என்ற சொல் வழக்கும் பிரபலம். நமக்குச் சுற்றுச்சூழல் பற்றியோ அல்லது பெண்கள் பற்றியோ எந்தப் புரிந்துணர்வும் இல்லை என்பதையே மேற்கண்ட சொல் வழக்குகள் காட்டுகின்றன. இன்றைக்கே இப்படி என்றால், 80-களில் நிலைமை எப்படியிருந்திருக்கும்? அந்தப் பின்னணியிலிருந்து ‘இந்தியாவின் முதல் பெண் ஊர்வனவியலாளர்’ உருவாவது சாதாரண விஷயமல்ல!
பாம்புப் பண்ணை நாட்கள்
1959-ம் ஆண்டு பிறந்தவர் விஜயா. நண்பர்களுக்கு விஜி. 1975-ம் ஆண்டு சென்னை எத்திராஜ் கல்லூரியில் விலங்கியல் மாணவியாக இருந்தபோது, சென்னை பாம்புப் பண்ணையில் தன்னார்வலராகச் சேர்ந்தார். இயல்பிலேயே காட்டுயிர்கள் மீது ஆர்வம் கொண்டிருந்ததால், ஒவ்வொரு வார இறுதியிலும் பாம்புப் பண்ணைக்குச் சென்று உதவிகளைச் செய்துவந்தார். அமெரிக்கப் பெண் விலங்கியலாளர் டயான் ஃபாஸ்ஸி மீது மிகுந்த ஆர்வமும் மரியாதையும் கொண்டவராக இருந்தார் விஜி. எனவே, அவரைப் போலவே விலங்கியல் துறையில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அதனால் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் இருளர் மக்களுடன் இணைந்து பாம்பு, பல்லிகளைத் தேடியலைந்தார். பின்னர் பட்டம் பெற்று, பாம்புப் பண்ணையில் முழு நேரப் பணிக்குச் சேர்ந்திருந்தார்.
ஆமை வணிகத்துக்கு அடி
ஒருமுறை கிண்டி சிறுவர் பூங்காவிலிருந்து தப்பிய சில முதலைகள், அருகிலிருந்த ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் புகுந்துவிட்டன. அவற்றை மீட்க, ரோமுலஸ் விட்டேகரின் தலைமையில் சென்ற குழுவில் விஜியும் இருந்தார். முதலைகளைத் தேடியபோது, ஓரிடத்தில் நூற்றுக்கணக்கான ஆமை முட்டைகளைக் கீரிப்பிள்ளைகள் மறைத்து வைத்திருந்தன. உடனே அங்கு ஆமை முட்டையிட்ட இடத்தின் அளவு, எத்தனை முட்டைகள் இருக்கின்றன போன்ற தகவல்களைப் பதிவுசெய்யத் தொடங்கினார் விஜி. ஆமைகளுடனான முதல் அறிமுகம் இப்படித்தான் அவருக்கு அமைந்தது.
அந்த நேரம் ‘உலக நன்னீர் ஆமையினங்களைப் பாதுகாக்கும் சங்கத்தின் நிபுணர் குழு’வில் பணியாற்ற விஜிக்கு வாய்ப்பு வந்தது. அப்போது அவருக்கு 22 வயது! உடனடியாக அந்தப் பணியை ஏற்றுக்கொண்ட அவர், ஆய்வுக்காக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றார். மேற்கு வங்கத்தில் இறைச்சிக்காக ஆமைகள் கொல்லப்படுவதையும் அதற்குத் தனியாகக் கடைகள் இருப்பதையும் ஒளிப்படங்களாகப் பதிவுசெய்தார். இதுகுறித்து, ‘இந்தியா டுடே’ இதழில் ஒளிப்படங்களோடு கட்டுரை வெளியானது. அதைப் பார்த்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இது ஆமை வணிகத்துக்கு விழுந்த முதல் பெரிய அடியாக அமைந்தது.
படம்: செழியன்
ஆமைகளைத் தேடி
1911-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹெண்டர்சன், கேரள மாநிலத்தின் கவளை எனும் இடத்தில் இரண்டே இரண்டு பிரம்பு ஆமைகளை இனங்கண்டார். அதற்குப் பிறகு சுமார் 67 ஆண்டுகளுக்கு அந்தப் பிரம்பு ஆமை இனம் யாராலும் பதிவு செய்யப்படவில்லை. அந்த இன ஆமை இன்னும் உயிருடன் இருக்கிறதா, இருந்தால் எப்படிக் காப்பாற்றுவது என்பதே நன்னீர் ஆமை பாதுகாப்பு நிபுணர் குழுவின் முதன்மை நோக்கமாக இருந்தது.
“இந்தப் பணியில் பேரார்வம் கொண்ட விஜி, கேரளத்தின் சாலக்குடியில் உள்ள காடர் இனப் பழங்குடிகளின் உதவியுடன் 1982-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் பிரம்பு ஆமைகளைக் கண்டுபிடித்தார். அது அவருக்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது” என்று விஜி குறித்த ஒரு கட்டுரையில் சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஜானகி லெனின் குறிப்பிட்டுள்ளார். இன்றுவரையிலும் விஜி பற்றித் தெரிந்து கொள்வதற்கு நம்மிடையே இருக்கும் ஒரே ஆவணம், ஜானகி லெனின் ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்தக் கட்டுரைதான்!
அந்த ஆமைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கேரளத்தில் நடுக்கானி எனும் இடத்தில் உள்ள குகை ஒன்றில் பல நாட்கள் தங்கியிருந்து தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் விஜி. அங்கு சுமார் 125 ஆமைகளுடன் தன் வாழ்க்கையை நகர்த்திவந்தார். இந்த ஆமைகள் முதன்முதலில் தென்பட்ட கவளை எனும் இடத்திலிருந்து 200 கி.மீ. தெற்காகவும், 200 கி.மீ. வடக்காகவும் ஓர் எல்லையை வகுத்தார் விஜி. அந்த எல்லை, கேரளத்தின் நெய்யாறு சரணாலயத்திலிருந்து கர்நாடகத்தின் அகும்பே வனப் பகுதி வரைக்கும் விரிந்திருந்தது. இந்த எல்லைக்குள் அடங்கிய பகுதியை, பிரம்பு ஆமைகள் வாழும் பகுதியாக அறிவித்தார் விஜி.
எதிர்பாராத முடிவு
அந்த ஆய்வுப் பணியின்போது அவருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் ரூபாய் 900. இந்தப் பணத்தைக் கொண்டு பெரிய ஆய்வுக் கருவிகளை வாங்க முடியாது. வசதியில்லாத காரணத்துக்காக, ஆய்வை விட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்த அவர், தானே சில மாற்று வழிகளைக் கண்டுபிடித்தார். ஆமை ஓட்டின் மீது ஒரு நூலை ஒட்டி, அந்த நூல் தடத்தை வைத்து, ஆமையின் நடவடிக்கைகளை அறிந்தார் விஜி.
உயிரியல் ஆராய்ச்சியில் பரிசோதனைக் கூட ஆய்வு, கள ஆய்வு என இரண்டு வகை உண்டு. கள ஆய்வைத் தேர்ந்தெடுத்த மிகச் சிலரில் விஜியும் ஒருவர். அவரது களஆய்வு ஈடுபாட்டைப் பார்த்த, நன்னீர் ஆமையினப் பாதுகாப்பு நிபுணர் குழு தலைவர் எட்வர்ட் மால், கிழக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்க விஜிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு 1984-ம் ஆண்டு விஜி அமெரிக்கா சென்றார். கள ஆய்வுகளுக்காக இந்தியா வந்து சென்றபடி இருந்தார்.
1987-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா வந்த அவர், அதன் பிறகு அமெரிக்கா திரும்பவே இல்லை. தான் நேசித்த ஆமைகளுடன் எந்தக் காட்டில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டாரோ, அதே காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்றுவரையிலும் அந்த மர்மம் தீர்க்கப்படவே இல்லை. அவர் இறந்தபோது வயது 28!
விஜியின் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட அறிவியல் உலகம், அவர் ஆய்வு செய்துவந்த பிரம்பு ஆமைகளுக்கு, விஜியின் பெயரையே சூட்டியது. ‘ஹியோசெமிஸ் சில்வட்டிக்கா’ என்ற அறவியல் பெயரால் முன்பு அழைக்கப்பட்டுவந்த அந்த ஆமைகள், தற்போது ‘விஜயாசெலிஸ் சில்வட்டிக்கா’ எனப்படுகின்றன. இந்த அங்கீகாரம் 2006-ம் ஆண்டில் கிடைத்தது. அவரது நினைவைப் போற்றும் விதமாக, சென்னை முதலைப் பண்ணையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
‘பிரம்பு ஆமை என்பது ஒரு தனித்துவமான இனம் (மோனோடிபிக் ஜீனஸ்). அந்த ஆமையைப் போல வேறோர் இனத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதுபோலவே விஜயாவும் இருந்தார். அவரைப் போல ஓர் ஊர்வனவியலாளரை நம்மால் இனி பார்க்க முடியாது’ என்று எழுதியுள்ளார் ஜானகி லெனின். அது உண்மைதானே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago