பெண்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று தொடங்குகிற எல்லோரும் ஆண்களிடம் இருந்துதான் தொடங்கு கிறார்கள். ஆண்களின் சாதனைகளை விஞ்ச வேண்டும், ஆண்களைப் போல் சுதந்திரமாக இருக்க வேண்டும், ஆண்களுக்கு நிகராகச் சமூகத்தில் வாழ வேண்டும் என ஒவ்வோர் இடத்திலும் பெண்கள் அடைய வேண்டிய இலக்காக முன்னிறுத்தப்படுபவர்கள் ஆண்களே.
நானும் ‘பெண் விடுதலை’ பேசத் தொடங்கிய காலத்தில், ஆண்களுக்கு நிகராகப் பெண்ணும் உயர்வதே, பெண் விடுதலையின் அடிப்படை என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் பெண், தன்னுடைய முழுமையை வெளிக்கொண்டு வருவதே உண்மையான பெண்ணியம் என்ற புரிதலுக்கு இப்பொழுது வர முடிந்திருக்கிறது. பெண் கடக்க வேண்டியது ஆண்களின் சாதனைகளை அல்ல. மனித குலத்துக்கே முன்னோடிகளாக இருந்த தங்கள் ஆதித்தாய்களின் சாதனைகளை.
பெண் விடுதலையை, பெண் சமத்துவத்தைக் கோரும் யாருடைய இலக்கும், தன் முன்னால் இருக்கும் ஆண்களை மிஞ்சுவதாக இருக்க வேண்டியதில்லை. தன்னுடைய சக்தியை, ஆற்றலை, சுயத்தை வெளிப்படுத்துவதே பெண்களின் உண்மையான இலக்காகும்.
மரமும் அங்குசமும்
பெண்களின் முழுமையான விஸ்வரூபத்தை ஆதியிலேயே பார்த்த ஆண்கள், அச்சத்தில் மிரண்டு நின்றிருக்கிறார்கள். பெண்ணின் முழு ஆற்றலின் முன், தாக்குப்பிடிப்பது சாத்தியமில்லை என்பதைப் பல நூற்றாண்டு அனுபவத்தினால் அறிந்துகொண்ட ஆண்கள், பெண்ணை வசக்கிவைக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். பெண்ணைப் பலவீனமானவளாகவும் அவளுக்கென்று வரையறுக்கப்பட்ட கடமைகள், கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் ஆண்கள் புனையத் தொடங்கினார்கள்.
புனையப்பட்ட கதைகளைப் பெண்கள் மேல் திணிக்க ஆண்கள் தேர்ந்தெடுத்த ஆயுதமே குடும்பம் என்ற நிறுவனம். அன்பின்பாற்பட்ட பெண், குடும்பத்தைத் தன் தலை மேல் சுமக்கத் தொடங்கினாள். குடும்பம் என்ற அமைப்பைப் பெண் கட்டிக் காப்பதற்கு அடிப்படையாக இருந்தது, அவள் ஈன்றெடுத்த குழந்தைகளும் அவர்களின் நலன்களும். பெருமரத்தை ஒற்றைத் தும்பிக்கையில் முறித்துப் போடும் யானை, பாகனின் கையில் இருக்கும் ஈர்க்குச்சி போன்ற அங்குசத்துக்குப் பணிந்து, பயந்து நடப்பதுபோல், பெண்கள் நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.
பேரன்பின் அடையாளம்
ஆதி இனக்குழுக்களின் தாயாக, தலைவியாக இருந்து பெண் வழிநடத்தியிருக்கிறாள். அடர்ந்த காடுகளில் காட்டு விலங்குகளின் மீது பாய்ந்த முதல் ஆயுதம், பெண்ணின் ஆயுதமாக இருந்திருக்கிறது. துணிவும் வீரமும் கொண்டு இயற்கையோடு போராடியிருக்கிறாள். விதைகளிலிருந்து முளைத்தெழும் செடிகளைப் பார்த்து விவசாயத்தைக் கண்டடைந்திருக்கிறாள். பெரும் கூட்டம் நிறைந்த சமூகத்தின் தேவைகளை உற்பத்தியின் வாயிலாகவே பூர்த்தி செய்ய இயலும் என்ற அனுபவ அறிவு பெண்ணிடமிருந்தே வந்தது.
குகைகளிலும் பாறைகளிலும் ஓவியங்களை வரைந்ததிலும், கலைகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்ததிலும், சொற்களை உருவாக்கியதிலும் பெண்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. கலைக்கும் அன்புக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. கருக்கொள்ளுதலுக்கும் அன்பு செய்வதற்கும் தொடர்பிருக்கிறதா என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லையென்றாலும், பெண் இயல்பில் பேரன்பு மிக்கவள்.
பேராற்றல் மிக்கவள்
உலகத்தில் ஏராளமானவற்றை முதன்முதலாகச் செய்து காட்டிய நம் ஆதித்தாய்களே நமக்கான முன்னுதாரணங்கள். அவர்களின் பேராற்றலே என்னை மீண்டும் மீண்டும் வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களின் சுயமே இன்னும் வசீகரிக்கிறது. அவர்களின் சுதந்திரமே, முழுமையான சுதந்திரத்துக்கான இலக்கணமாக இருக்கிறது. பெண்ணின் முழுமையான சக்தியைப் பார்த்துப் பயந்த ஆண்களே, நம்மை ஒடுக்கப் பார்க்கிறார்கள். எங்கே மீண்டும் நம்மை விஞ்சிவிடுவார்களோ என்று பெண்ணின் நிஜ ஆளுமையை, பெண்களைவிட ஆண்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
பெண்களை முந்தவிடக் கூடாது என்ற பயம் ஆண்களைத் துரத்துகிறது. அந்தப் பயத்தை நான் ரசிக்கிறேன். எனவேதான், பெண்கள் மிஞ்ச நினைக்கும் இலக்காக ஆண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை.
ஏன் ஆணாக மாற வேண்டும்?
எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் சிறுகதை ஒன்றில்... பெற்றோருக்கு ஒரே மகள். அவளைத் தனித்துவம் மிக்கவளாக வளர்த்திருப்பார்கள். தந்தை இறந்துவிடுவார். மொத்த உறவினர் கூட்டமும் அந்த அப்பாவுக்குக் கொள்ளி போடும் முறையுள்ள பையன்கள் யார் யார் உறவில் இருக்கிறார்கள் என்று ஆலோசித்துக்கொண்டிருக்கும். அந்தப் பெண் ஓர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்வாள். உறவினர் கூட்டம் படபடப்பாக வெளியில் காத்துக்கொண்டிருக்கும். சிறிது நேரத்தில் கதவு திறந்து வெளியில் வரும் பெண்ணை, எல்லோரும் அதிர்ச்சியோடு பார்ப்பார்கள். அந்தப் பெண் தன் தந்தையின் வேட்டியை அணிந்துகொண்டு, கையில் கொள்ளிச் சட்டியை எடுத்துக்கொண்டு கொள்ளி வைக்கச் செல்கிறாள் என்று கதை முடியும்.
இந்தக் கதை முற்போக்கான கதையாகப் பேசப்பட்டது. எனக்கு இந்தக் கதையின் அடிப்படையே பிரச்சினையாக இருந்தது. அந்தப் பெண், ஓர் ஆணாகத் தன்னை வரித்துக்கொண்டு தந்தைக்குக் கொள்ளி போடச் செல்கிறாள். ஒரு பெண்ணாக இருக்கும்வரை அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமை, ஒரு வேட்டியைக் கட்டிக்கொண்டு வந்த பிறகு அவளுக்குக் கிடைக்கிறது என்பதை எப்படிப் பெண்ணுக்கான அங்கீகாரமாக ஏற்க முடியும்? பல நேரம் இப்படித்தான் நாம் ஆணாக மாறி, நம் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனப் புரிந்துகொள்கிறோம்.
ஆதித்தாய்களை விஞ்சுவோம்
ஆண்களைப் போல் உடை அணிந்துகொள்வதும், ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்கள் செய்வதுமே பெண்ணுக்கான சமத்துவம் எனக் கருதுவது நம் புரிதலின்மையைக் காட்டுகிறது.
பெண் தனித்துவமானவள். பேரன்பு நிறைந்தவள். பெரும் சக்தி கொண்டவள். உற்பத்தியின் மூலாதாரம். அவளுக்கு நிகர் அவளே. ஒவ்வொரு பெண்ணும் தன்னளவில் நிறைவானவள். பெண்ணின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த முனைவதே உண்மையான பெண்ணியம்.
நம் இலக்குகள் நம் ஆதித்தாய்களை விஞ்சுவதாக இருக்க வேண்டும்.
- கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago