நினைவேந்தல்: தடை தகர்த்த நீதியரசி

By ஆதி வள்ளியப்பன்

இந்திய நீதித் துறை என்பது ஒரு இரும்புக் கோட்டை. அந்தக் கோட்டைக் கதவுகள் பெண்களுக்கு மிக அரிதாகவே திறக்கப்படுகின்றன. அந்தக் கதவு திறக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த முதன்மையானவர்களில் ஒருவர் லீலா சேத்.

இந்தியாவிலேயே முதன்முதலாகக் கேரள உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக அன்னா சாண்டி 1959-ல் நியமிக்கப்பட்டார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஃபாத்திமா பீவி (முன்னாள் தமிழக ஆளுநர்) நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அதற்கும் இரண்டு ஆண்டுகள் கழித்தே இந்திய உயர் நீதிமன்றம் ஒன்றின் தலைமைப் பொறுப்புக்கு ஒரு பெண் வர முடிந்தது. அவர்தான் லீலா சேத்.

பாரபட்சம் நிறைந்த இந்தியச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் சட்டத் துறையில், பெண்களுக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் மாயத் தடைகளைத் தகர்த்தவர் லீலா. அவருடைய 50 ஆண்டு காலச் சட்டப் பணியில் பல்வேறு முதன்மைகளுக்குச் சொந்தக்காரர்.

லண்டன் சாதனை

லீலாவின் 12 வயதிலேயே தந்தையை இழந்ததால், அவருடைய குடும்பம் நெருக்கடியில் தள்ளப்பட்டது. அப்போதே தன்னுடைய ஆளுமையை உறுதியானதாக மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தார். திருமணத்துக்குப் பிறகு லண்டனில் உள்ள பாட்டா காலணி மேம்பாட்டு அலுவலகத்தில் லீலாவின் கணவர் பிரேமோவுக்கு வேலை கிடைத்தது. உடன் சென்ற லீலாவுக்கு குழந்தையைப் பராமரிக்க வேண்டியிருந்ததால், வகுப்புகளுக்குச் செல்லாமலேயே படிக்க முடிவு செய்தார். அதன் காரணமாகவே சட்டப் படிப்பைத் தேர்வு செய்தார்.

அதேநேரம் லண்டன் சட்டத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த முதல் பெண் என்ற சாதனையை 1958-ல் நிகழ்த்தினார். 1959-ல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

அடுத்தடுத்த முதன்மைகள்

சட்ட விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை 1978-ல் அடைந்தார். 1991-ல் இமாச்சல பிரதேசத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய உயர் நீதிமன்றம் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் என்ற பெருமை லீலாவுக்குக் கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் அவர் மாறியிருக்கக்கூடும். 1988-ல் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நீதிபதி ஆர்.எஸ்.பதக், அவருக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக ‘அரசியலில்’ சிக்கி  அந்தப் பதவி அவருக்குக் கிடைக்காமல் போனது. இன்னமும்கூட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒரு பெண் ஆக முடியவில்லை என்ற நிதர்சனத்துடன் லீலா சேத்தின் சாதனைகளை மதிப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சமமான சொத்துரிமை

வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் சக ஆண்களைப் பாலினச் சமத்துவம் சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியவர் லீலா. கூட்டுக்குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை அளிக்க வகை செய்யும் இந்து சொத்துரிமைச் சட்டத்தில் திருத் தங்களை மேற்கொண்டதிலும், பெண் களுக்கான பரம்பரை சொத்துரிமையை நிலைநாட்டியதிலும் லீலா சேத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

நிர்பயா சம்பவம்

டெல்லியில் 2012 டிசம்பர் 16-ல் நிகழ்ந்த நிர்பயா சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி வர்மா தலைமையில் மூவர் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் லீலா. ஆணாதிக்கம் என்ற அடிப்படையை மாற்றும் வகையில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமென்று இந்தக் குழு பரிந்துரைத்தது. இதில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனை களை லீலா வழங்கியிருந்தார்.

மாற்றுப் பாலினர் உரிமைகள்

மாற்றுப் பாலினரின் உரிமைகளைத் தீவிரமாக ஆதரித்தவர் லீலா. மாற்றுப் பாலினரை உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளாகச் சித்தரித்துத் தீர்ப்பு வழங்கியதன் மூலம் மாற்றுப் பாலினர் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு எதிரான அவப்பெயரை, புறக்கணிப்பை நீக்கத் தீர்ப்பு தவறிவிட்டது என்று விமர்சித்தார். சட்டப் பிரிவு 377-க்கு எதிராகத் தன் கருத்துகளை வலிமையாகப் பதிவு செய்த லீலா, மாற்றுப் பாலினருக்கு அதிக அன்பு காட்டப்பட வேண்டுமென வழிமொழிந்தவர்.

பிரபல எழுத்தாளரும் தன்னை ஒரு ஆண் தன்பாலின உறவாளராக அறிவித்துக்கொண்டவருமான விக்ரம் சேத்தின் அம்மாவாக மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே லீலா இதற்குக் குரல் கொடுத்தார்.

உண்மை அஞ்சலி

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னும் ஆளுநர் உள்ளிட்ட பதவிகளின் மூலம் அரசின் சொகுசு வசதிகளை அனுபவிப்பது நம் நாட்டில் புதிதல்ல. அந்தப் பிரத்யேக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக லீலா சேத் இல்லை. அதிலிருந்தே, அவர் யார் பக்கம் நின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே எழுதப்பட்ட சட்டத்தை அப்படியே தூக்கிப் பிடிக்காமல், மக்களை எவ்வளவு மனிதத்துடன் வாழ அது அனுமதிக்கிறது என்பதன் அடிப்படையில் இந்தியச் சட்டங்களில் திருத்தங்களை லீலா வலியுறுத்திவந்தார். தான் பதவி வகித்த காலத்தில் முன்மாதிரித் தீர்ப்புகள், பரிந்துரைகளை வழங்கினார். தன் காலத்தை மீறிய தீர்க்கதரிசனப் பார்வையை அவர் கொண்டிருந்தார். இந்தியச் சட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிர்காலத்திலாவது நமது சமூகத்தை அனைவருக்கும் உரியதாக, சமமானதாக மாற்ற முயற்சிப்பது மட்டுமே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும்.

மூன்று புத்தகங்கள்

‘ஆன் பேலன்ஸ்’ (2003) என்ற சுயசரிதை, இந்திய அரசியல் சாசனத்தைக் குழந்தைகளுக்கு விளக்கும் ‘வீ, தி சில்ரன் ஆஃப் இந்தியா’ (2010), சட்டத்துக்கும் தனக்குமான ஊடாட்டம் தொடர்பாக ‘டாக்கிங் ஆஃப் ஜஸ்டிஸ்: பீப்பிள்ஸ் ரைட்ஸ் இன் மாடர்ன் இந்தியா’ (2014) ஆகிய மூன்று நூல்களை லீலா சேத் எழுதியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்