பக்கத்து வீடு: கேத்ரின் 261

By எஸ். சுஜாதா

பாஸ்டன் மாரத்தான் போட்டியில் 1967-ம் ஆண்டு முதல் பெண்ணாகக் கலந்துகொண்டு ஓட்டத்தை முழுமையாக நிறைவுசெய்த கேத்ரின் ஸ்விட்சர், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாரத்தானில் ஓடி சாதனை படைத்திருக்கிறார்!

120 ஆண்டுகளாக பாஸ்டன் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றுவந்தாலும் 45 ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த அனுமதிக்குக் காரணமானவர் கேத்ரின் ஸ்விட்சர்.

ஓடியதால் கிடைத்த வெற்றி

இருபது வயது கேத்ரினுக்கு ஓடுவதில் ஆர்வம் அதிகம். ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட மாரத்தான் போட்டிகளில் தானும் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் மாரத்தானில் பெண்களால் ஓட முடியாது என்பதால் அனுமதியில்லை என்று காரணம் சொன்னார்கள். பெண் என்ற ஒரே காரணத்துக்காக அனுமதி மறுக்கப்பட்டதை கேத்ரினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1967-ம் ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் கே.வி. ஸ்விட்சர் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். பெயரைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 261 என்ற எண்ணில் களத்தில் வீரர்களுடன் நின்றார் கேத்ரின். போட்டி ஆரம்பமானது. மனம் நிறைய மகிழ்ச்சியோடு இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். சில மைல் தூரத்துக்குப் பிறகு கேத்ரினைக் கண்டுகொண்ட அதிகாரிகள் ஆத்திரமடைந்தனர். அவரைப் பிடித்துத் தள்ளினர். அவர் அணிந்து வந்த எண்ணைப் பறிமுதல் செய்தனர். அந்தக் காட்சிகள் ஒளிப்படங்களில் பதிவானதும் பின்னர் பெண்ணுரிமைப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றப்போவதும் அப்போது யாருக்கும் தெரியாது.

என்ன நடந்தாலும் ஓடுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று உறுதியாக இருந்தார் கேத்ரின். தன்னுடைய நண்பரின் உதவியால் மீண்டும் எழுந்து ஓட ஆரம்பித்தார். 4 மணி 20 நிமிடங்களில் மாரத்தான் தூரத்தைக் கடந்தார். இதே மாரத்தான் போட்டியில் கிப் பாபி என்ற பெண்ணும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யாமல் முழு தூரத்தையும் கடந்தார். அதிகாரபூர்வமாகப் பதிவு செய்து ஓடிய முதல் பெண் என்ற பெருமை கேத்ரினுக்குக் கிடைத்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட இரண்டு பெண்களும் மாரத்தான் தூரத்தை முழுமையாகக் கடந்து, பெண்களாலும் ஓட முடியும் என்று உலகத்துக்கு அறிவித்தார்கள்.

பாஸ்டன் அத்லெடிக் அசோஸியேஷனின் இயக்குநர் வில் க்ளோனி, “பெண்களால் மாரத்தானில் பங்கேற்க முடியாது. ஏனென்றால் மாரத்தான் விதிகள் அப்படி இருக்கின்றன. விதிகளை மீறும்போது சமூகம் குழப்பமடையும். நான் புதிய விதிகளை உருவாக்க மாட்டேன். ஆனால் பெண்கள் பங்கேற்பதற்கு முயற்சி செய்வேன். மாரத்தானில் அங்கீகாரமற்ற ஆண், பெண் யாருக்கும் இடமில்லை. இந்தப் பெண் என் மகளாக இருந்திருந்தால் தண்டித்திருப்பேன்” என்றார்.

கேத்ரினும் இன்னும் சில பெண்களும் தொடர்ந்து மாரத்தானில் பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்று போராடினார்கள். அதன் விளைவாக 1972-ம் ஆண்டு முதல் பெண்கள் மாரத்தானில் அனுமதிக்கப்பட்டார்கள்.

திறமைக்கு அங்கீகாரம்

17 ஏப்ரல் 2017. எழுபது வயது கேத்ரின் களத்தில் இருந்தார். 50 ஆண்டுகளுக்கு முன் இதே மாரத்தானில் அங்கீகாரம் மறுக்கப்பட்டவர், இன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்த்து மழையில் மகிழ்ச்சியுடன் ஓடினார். 4 மணி 45 நிமிடங்களில் இலக்கை எட்டினார். முதல் ஓட்டத்தைக் காட்டிலும் இன்றைய ஓட்டத்துக்கு 25 நிமிடங்களே அதிகமாகியிருந்தன!

முதல் முறை கேத்ரினுக்கு ஒதுக்கப்பட்ட 261 என்ற எண் இந்த முறை கிப் பாபிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கேத்ரின் ஓட்டத்தை நிறைவு செய்தவுடன், அந்த எண் கேத்ரினுக்கானது என்றும் கேத்ரினின் பொன்விழா ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்த எண்ணை இனி யாருக்கும் வழங்கப் போவதில்லை என்றும் மாரத்தான் கமிட்டி அறிவித்தது. மாரத்தான் வரலாற்றிலேயே 61 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற ஜானி கெல்லியைக் கவுரவிக்கும் விதத்தில் 61 என்ற எண்ணை யாருக்கும் வழங்குவதில்லை. தற்போது கேத்ரின் அந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறார்.

“நான் முதல் முறை ஓடிக்கொண்டிருந்தபோது என் தலையில் யாரோ சிலர் அடித்தனர். திரும்பிப் பார்த்தால் கொடூரமான முகங்கள் என்னைக் கோபமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. நறநறவென்று பற்களைக் கடித்தனர். ஒருவர் என் தோள்பட்டையைப் பிடித்துத் தள்ளினார். இன்னொருவர் பின்புறத்தில் அடித்தார். மற்றொருவர் எண்ணைக் கொடுத்துவிட்டு, போட்டியிலிருந்து வெளியேறு என்று கத்தினார்.

பெண்ணாலும் மாரத்தானில் ஓட முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. என்னைக் கோமாளி என்று நினைத்தனர். அது தவறு என்று நிரூபிப்பதற்காகவே மீண்டும் எழுந்து ஓடினேன். தடைகளை உடைத்து ஓடிய அந்த ஓட்டம்தான் இன்று பல்லாயிரக்கணக்கான பெண்களை மாரத்தானில் ஓட அனுமதித்திருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளில் பெண்கள் குறித்த சிந்தனையும் ஓரளவு மாறியிருக்கிறது. இது போன்ற மகிழ்ச்சியான தருணம் வேறு இல்லை!” என்ற கேத்ரின், இதுவரை 30 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். 261 Fearless என்ற அமைப்பை ஆரம்பித்து, பெண்களுக்குத் தடகளப் பயிற்சிகளை அளித்து, தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டிவருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்