வானவில் பெண்கள்: பதக்கங்களைக் குவிக்கும் பாக்ஸிங் சிங்கங்கள்!

By வி.சீனிவாசன்

உலக அளவில் பிரபலமான விளயாட்டுகளில் ஒன்று ‘பாக்ஸிங்’. பெயரைக் கேட்டாலே மனதில் அதிர்வலையை உண்டாக்கும். பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கோ சொல்லவே வேண்டாம். வீணை, பரதம், பாட்டு போன்ற வகுப்புகளுக்குச் செல்ல மகள் சென்றால் போதும்; அடிதடி சண்டை விளையாட்டுகள் பக்கம் தலைவைத்தும் படுக்கக் கூடாது என்ற மனப் போக்கே இன்றளவும் பல பெற்றோரிடம் நிலவுகிறது.

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தையும், பெங்களூருவில் ஐடி பெண்ணுக்கு நேர்ந்த அநியாயத்தையும் டிவியில் பார்த்துக் கொந்தளிக்கும் பெற்றோர்கள் ஏனோ தம் மகள் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. இதுபோன்ற சமூகச் சூழலில், ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் தம் மகள்களின் வளைகரங்களில், பாக்ஸிங் கிளவுஸுகளை அணிவித்து மகிழ்கிறார்கள். மாநில, தேசிய அளவிலான தங்கப் பதக்கங்களை வென்றிட உறுதுணையாக இருக்கிறார்கள்.

சேலம் ஆற்றோரத் தெருவைச் சேர்ந்த பி.சந்தியா தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவி. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, ஆட்டோ ஓட்டுநரான தன் தந்தை பாஸ்கரின் ஊக்கத்தால் பாக்ஸிங் வகுப்பில் சேர்ந்தார்.

“எனது ஒவ்வொரு அடியும் எதிராளியை மிரளவைக்கும். முகத்தில் குத்தினாலும்; குத்து வாங்கினாலும், கைதட்டல் கிடைக்கும். சண்டை தெரியும் என்ற கர்வப் பார்வையே நெருங்க வரும் ஆண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தற்காப்புக் கலை பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சந்தியா.

ஆறு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த ரூரல் நேஷனல் லெவல் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மாநில அளவில் பத்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். “தேசிய, ஆசிய, ஒலிம்பிக் அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்ப் பெண்களின் வீரத்தை நாடறியச் செய்து, இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் நிலைநாட்டுவதே எனது அடங்காத ஆசை’’ எனக் கண்களில் நம்பிக்கையொளி படர சந்தியா பேசி முடித்தார்.

சேலம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சவும்யாவும், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவருடைய தந்தை யுவராஜூம் ஆட்டோ ஓட்டுநர்தான். நான்கு ஆண்டுகளாக பாக்ஸிங் போட்டியில் பங்கேற்றுவரும் சவும்யா, மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான பாக்ஸிங் போட்டிகளில் கலந்துகொண்டு 10-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

“பொதுவாக கராத்தே, குங்ஃபூ வகுப்பில்கூடப் பெண்கள் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். பாக்ஸிங் என்றால்தான் காத தூரம் ஓட்டம் பிடிப்பார்கள். ஆனால், பிற போட்டிகளைக் காட்டிலும் பாதுகாப்பானதும்; எளிதில் கற்றுக்கூடியதுமான விளையாட்டே பாக்ஸிங்” என்கிறார் சவும்யா. தலைக் கவசம், பற்களுக்கான கவசங்களுடன் பாக்ஸிங் பயிற்சி பெறுவதால், கண்ட இடத்தில் அடி விழும் என்ற பயம் தேவையில்லை. இடுப்புக்கு மேல் பகுதி மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியது என்கிறபோது, இலக்கைக் கணித்து, லாவகமாக விளையாடி, பரிசுகளையும் பதக்கங்களையும் குவிக்கலாம். உற்சாகமாக விளையாடி, நல்ல பேர் வாங்க நிறைய வாய்ப்பு உள்ளது பாக்ஸிங்கில். நடுநிசியில், தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு சாலையில் அச்சமின்றி மூதாட்டி என்று நடந்துசெல்கிறாரோ அன்றுதான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்ததாகப் பொருள் என மகாத்மா காந்தி கூறிய சுதந்திர இந்தியாவைப் படைக்க வேண்டுமென்றால், தற்காப்புக் கலையில் பெண்களின் பங்களிப்பு நூறு சதவிகிதமாக மாற வேண்டும்” என்கிறார் ஆர்வம் பொங்கும் குரலில் சவும்யா.

படங்கள்: எஸ்.குருபிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்