துறுதுறுவென்று விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை, சற்றுச் சோர்வாக உட்கார்ந்து விட்டாலே பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியாது. இளம் பிஞ்சுகள் பாலியல் வன்முறைக்கு இலக்காவதை என்னவென்று சொல்வது?
பெங்களூருவில் ஒரு தனியார் மழலையர் பள்ளியில் படித்துவந்த மூன்று வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார் அங்கு பணிபுரிந்த மஞ்சுநாத். சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தை, “அம்மா எனக்கு பாத்ரூம் போகும் இடத்தில் வலிக்குது” என்று சொல்லியிருக்கிறாள். பதறிய பெற்றோர் தொடர்ச்சியாகக் குழந்தையிடம் கேள்விகள் கேட்டதில், மஞ்சுநாத் தனி அறைக்கு அழைத்துச் சென்று தன்னிடம் மிக தவராக நடந்து கொண்டதாகச் சொல்லியிருக்கிறாள். அதை கேட்ட பெற்றோர் உறைந்துபோனார்கள்.
உடனே பள்ளி முதல்வரிடம் முறையிட்டனர். குற்றம் செய்த நபர் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினர். ஆனால் பள்ளி முதல்வர் அதனைச் செய்ய மறுத்தார். குழந்தைக்கு நடந்த சம்பவத்தை, மஞ்சுநாத் உட்பட ஒவ்வோர் ஆசிரியரிடமும் சொல்லச் சொல்லி, பெற்றோரை மிகவும் காயப்படுத்தினர்.
வேறுவழியின்றி பெற்றோரே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மஞ்சுநாத் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டிருக்கிறார் பள்ளி முதல்வர். பெற்றோர் திடமாக மறுத்துவிட்டனர். விஷயம் வெளியில் தெரிந்து, மற்றக் குழந்தைகளின் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
“குற்றவாளி மஞ்சுநாத்தைக் கைது செய்ய வேண்டும். மற்றக் குழந்தைகளுக்கு ஏதாவது பாலியல் சீண்டல் நடைபெற்றிருக்கிறதா என்பதைக் கண்டறிய மனநல நிபுணர்கள் குழந்தைகளிடம் கலந்துரையாடல் செய்து, உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும். அதுவரை சம்பந்தப்பட்ட பள்ளி தற்காலிகமாகச் செயல்படக் கூடாது” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் உடனடியாகக் குற்றவாளி மஞ்சுநாத்தைக் கைதுசெய்தனர். பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளிடம் விசாரணை செய்ததில், மஞ்சுநாத் பல குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. தற்போது மஞ்சுநாத் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி முதல்வர் வீணா, மூத்த அதிகாரி பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஏதோ பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவமாக நாம் கடந்துவிட முடியாது. நம் வீட்டுக்கு வரும் செய்தித்தாள்களில் ஏதோ ஒரு பக்கத்தில், ஏதோ ஒரு பகுதியில் இரண்டு வயது, நான்கு வயது, ஏழு வயது குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதைப் பற்றி தொடர்ந்து படித்துவருகிறோம். அப்படியான செய்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது மிகவும் ஆபத்தானது.
சென்னை போரூரில் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட ஏழு வயது ஹாசினிக்கும் எண்ணூரில் குப்பைத் தொட்டில் வீசப்பட்ட இரண்டு வயது ராதிகாவுக்கும் நாம் என்ன நியாயம் செய்யப் போகிறோம்?
குழந்தையைத் தெய்வமாகக் கருதும் இதே நாட்டில்தான், கடந்த 2011-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 7,112 ஆயிரம் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 33,098 ஆயிரம் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்ற செய்தி நம் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதுபோன்ற கொடூரச் செயல்கள் பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பெற்றோர் கூடுதல் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை தலைவர் தேன்மொழி, “பெற்றோர் இருவரும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சமூக அமைப்பு மாறியுள்ளது. குழந்தைகளிடம் பேசுவதற்குக்கூட பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பள்ளியிலிருந்து குழந்தை வந்தவுடன் பாட்டு, டியூஷன், யோகா வகுப்புகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். பெற்றோர் வேலையிலிருந்து திரும்பியவுடன் குழந்தைகளுக்கு இரவு உணவு கொடுத்து, உடனடியாகத் தூங்க வைத்துவிடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தாலும் அதைத் தன் பெற்றோரிடம் சொல்வதற்கான அவகாசம் கிடைப்பதில்லை. பெற்றோர் கண்டிப்பாகக் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கிப் பேச வேண்டும்.
பேசுவது இயல்பாக இருக்க வேண்டும். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டை விளையாடிக்கொண்டே, அன்றைக்கு நடந்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பதின்பருவ குழந்தைகளிடம் நண்பர் மாதிரி பெற்றோர் பழகவேண்டியது அவசியம். குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தால், ‘நீ ஏன் அங்கே போனே? உன்னை யார் அவன்கிட்ட பேசச் சொன்னது?’என்றெல்லாம் பெற்றோர் பேசக் கூடாது. இதனால் குழந்தைக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும். பாலியல் சீண்டலுக்கு ஆளான சிறிய குழந்தைகளை, கலர் தெரபி போன்றவற்றில் ஈடுப்படுத்தினால், கசப்பான அனுபவத்திலிருந்து விடுபடுவார்கள். வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் ஆறுதலாகப் பேசி, அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லாம்” என்கிறார்.
மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “முதலில் மக்களிடம் மனமாற்றம் வரவேண்டும். நாட்டில் போதுமான அளவுக்குச் சட்டங்கள் உள்ளன. குழந்தைகளைப் பாதுகாக்கவே பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (pocso) உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நம் குழந்தைகள் மீது பல காலமாகவே பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுவருகிறது. ஆனால் இப்போதுதான் வெளியே தெரியவருகிறது. வெளி உலகத்துக்குத் தெரிய வராத குற்றங்கள் ஏராளமாக உள்ளன. குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு சமுதாயத்தின் தார்மீகக் கடமை” என்கிறார்.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என முந்தைய தலைமுறை பார்த்து வளர்ந்த கூட்டுக் குடும்ப முறை இன்றைக்குச் சாத்தியமில்லை என்ற நிலை வந்துவிட்டது. இந்த இயந்திரமயமான வாழ்க்கையில் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் தனிமையில் தள்ளப்படுபவர்கள் குழந்தைகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
“பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரம் அதிகமானால் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சூழல் குறைந்துவருகிறது என்று அர்த்தம். அனைவரையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த நம் சமுதாயம் தற்போது எல்லோரையும் சந்தேகப்பட்டு, யாரிடமும் பேசாதே என்று சொல்லிக் கொடுக்கும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள்தான் பலவீனமானவர்களாக உள்ளனர். அவர்களிடம் எளிதாகத் தவறு செய்துவிடலாம் என்று குற்றம் செய்ய நினைப்பவர்களின் மனநிலை உள்ளது.
ஒரு குழந்தை நமக்கு எதிரில் இருக்கிறது என்றால் அதைப் பாதுகாக்கும் பொறுப்பு அருகில் குடியிருப்பவர்களுக்கும் உள்ளது. குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, நம் அனைவருடைய கடமை என்ற மனநிலை உருவானால்தான் குழந்தைகள் மீதான குற்றங்கள் ஓரளவாவது குறையும்” என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா. நம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago