அமெரிக்காவில் வாழ்ந்த யிட்டிஷ் மொழிக் கவிஞர் அன்னா மார்கொலின். இவரது இயற்பெயர் ரோஸா லேபென்ஸ்பாம். பெலாரஸின் ப்ரிஸ்க் நகரில் 1887-ல் இவர் பிறந்தார். மத நம்பிக்கையுள்ள யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மதச் சாயம் அதிகம் இல்லாத கல்வியை அன்னா பயின்றார். இளமைப் பருவத்தை எட்டியபோது அளவில்லாத வசீகரத்தைக் கொண்டிருந்தார். காதல் அனுபவங்களும் உண்டு. அன்னாவுக்குப் பதினெட்டு வயதானபோது மேற்படிப்புக்காக நியூயார்க்குக்கு அனுப்பப்பட்டார். அவரது காதலைப் பிரிப்பதற்காக அன்னாவின் தந்தை போட்ட திட்டம்தான் மேற்படிப்பு.
நியூயார்க் வந்துசேர்ந்த அன்னா படிப்பைவிடப் படைப்புலகத்தின் மீதே அதிக ஈடுபாடு செலுத்தினார். அங்குள்ள யிட்டிஷ் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளுடன் பழகினார். வெவ்வேறு புனைபெயர்களில் கதைகளும் எழுதினார். இதற்கிடையே காதல், மண உறவு, ஓர் ஆண் குழந்தை என்றெல்லாம் அசுர வேகத்தில் அவரது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் அவரது மகனை அவனது தந்தையிடமே பாலஸ்தீனத்தில் விட்டுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய அன்னா 1913-லிருந்து நிரந்தர அமெரிக்கவாசியாக ஆகிவிட்டார். தன் மகனை அதற்குப் பிறகு எப்போதுமே அவர் பார்க்கவில்லை; அவனைப் பற்றிப் பேசவும் இல்லை. ஆனால், தன்னுடன் மகன் இருக்கும் புகைப்படத்தை அன்னா ரகசியமாக வைத்திருந்தார் என்று அவரின் கடைசி வாழ்க்கைத் துணையான ரூவன் அய்ஸ்லாண்டு குறிப்பிட்டிருக்கிறார்.
1913-ல் அமெரிக்காவுக்கு நிரந்தரமாகத் திரும்பிவிட்ட அன்னா, அப்போது தொடங்கப்பட்டிருந்த யிட்டிஷ் மொழி செய்தித்தாள் ஒன்றின் பெண்கள் பக்கத்தில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றார். 1920-ல் கவிதைகள் வெளியிட ஆரம்பித்தபோதுதான் அன்னா மார்கொலின் என்ற புனைபெயரை முதன்முதலில் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு அவருக்கு இந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
தன் வாழ்நாளில் ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை மட்டுமே அன்னா வெளியிட்டிருக்கிறார். முதல் தொகுப்பு 1929-ல் வெளியானது. அந்தத் தொகுப்புக்குப் பிறகு அவர் எட்டுக் கவிதைகள் மட்டுமே எழுதினார். அப்புறம் கவிதை எழுதவேயில்லை. எனினும், இருபதாம் நூற்றாண்டு யிட்டிஷ் இலக்கியத்தில் அவருக்குத் தனித்த இடம் கிடைத்திருக்கிறது என்பது அவரது எழுத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது.
இருமுறை தோல்வியடைந்த மண வாழ்க்கைக்குப் பிறகு நீடித்த ஓர் உறவை யிட்டிஷ் மொழிக் கவிஞர் ரூவன் அய்ஸ்லாண்டுடன் அன்னா ஏற்படுத்திக்கொண்டார். இறுதிவரை இந்த உறவு நீடித்தது. முதல் தொகுப்புக்குப் பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரிடமிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டு 1952-ல் தனது 65-வது வயதில் அன்னா மார்கொலின் மரணமடைந்தார். உலக அளவில் சில லட்சம் பேரே பேசும் யிட்டிஷ் மொழியின் சிறு வானம் மேலும் அழகாகும்படி தனது விண்மீன்களை அதற்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் அன்னா.
2005-ல் ஷிர்லே குமோவின் மொழிபெயர்ப்பிலும் தொகுப்பாக்கத்திலும் வெளியான ‘டிரங்க் ஃப்ரம் த பிட்டர் ட்ரூத்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து இங்கே கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆண்டுகள்
தீவிரமாய் நேசிக்கப்பட்ட
ஆயினும் இன்னும் திருப்தியுறாத பெண்கள்போல்
சிரிப்பும் சினமுமாக வாழ்ந்து கழிக்கும்
தீயும் சிலமான்கல்லுமாகக்* கண்கள் சுடரும்
பெண்கள்போல்-
இப்படித்தான் இருந்தன ஆண்டுகள்.
அவை யாவும்
சதுக்கத்தில் ஹாம்லட் நாடகத்தைச் சுரத்தில்லாமல் நடித்துக்கொண்டிருக்கும்
நடிகர்களைப் போன்றவையும்கூட,
பெருமை பேசும் நாட்டில்
புரட்சியின் குரல்வளையை நெரிக்கும்
பெரும் நிலப்பிரபுகளைப் போன்றவையும்.
பாருங்கள் எந்த அளவுக்குக் கீழ்ப்படிகின்றன அவையெல்லாம் இப்போது,
என் கடவுளே, உடைத்துநொறுக்கப்பட்ட பியானோ போல ஓசையற்று,
ஒவ்வோர் அடியையும் ஏளனத்தையும்
கொஞ்சல் போல் ஏற்றுக்கொண்டு,
உன்னைத் தேடியபடியே, ஆனால் உன்மீது நம்பிக்கை இல்லாமல்.
- *சிலமான்கல்: agate, இயற்கையில் கிடைக்கும் ஒருவகைக் கல்.
இதை ஆபரணங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
நாட்களினூடாகக் கடந்தோம்
புயல் புரட்டிப்போட்ட பூங்காக்களைக் கடப்பதுபோல்
நாட்களினூடாகக் கடந்தோம்.
பூத்துக்கொண்டு, முதிர்ந்துகொண்டு; வாழ்வினதும் மரணத்தினதும் விளையாட்டில் இப்படியாகத் தேர்ச்சி பெற்றுகொண்டு.
மேகங்கள், விரிந்த வெளி, கனவுகள் எல்லாம் எங்கள் சொற்களில் இருந்தன.
சரசரக்கும் கோடைக் காலப் பூங்கா ஒன்றின்
அசைந்துகொடுக்காத மரங்கள் நடுவே ஒட்டி ஒரே மரமானோம்.
மாலைப் பொழுதுகள் விரித்தன தம்முடைய அடர்ந்த நீலத்தை,
காற்றினதும் வீழும் விண்மீன்களினதும்
வலிக்கும் உச்சத்தைத் தொட்ட விருப்பத்துடன்,
சடசடக்கும் இலைகளினதும் புற்களினதும் மாறும் ஒளிர்வுடன், கொஞ்சும் ஒளிர்வுடன்,
நாம் நம்மைக் காற்றோடு நெய்துகொண்டோம், நீலத்துடன் இழைந்துவிட்டோம்
குதூகலப் பிராணிகள்போலவும் சாமர்த்தியமான, விளையாட்டுத்தனமான கடவுளர்கள் போலவும்.
ஆயாசம்
இன்றைக்கு எனக்கு ஒரே ஆயாசம்.
யாரோ ஒருவரின் அதீதமான பார்வையின்
கூரிய குரல்களால் புண்பட்டுப் போயிருக்கிறேன்.
ஆயினும் செவியுறுகிறேன் ஒரு சொல்லை
என்னுள் ஒளிர்ந்தொளிரும் ஒரு சொல்லை.
இருள் பரவுகிறது அறைக்குள்,
இரவின் நிழல்கள்
மங்கிய, சாயங்காலச் செந்நிறத்தின் மேல்.
இன்று மரணம்பற்றி நெடுநேரம் சிந்தித்தேன்.
என் அறையின் அமைதி
ஒரு கறுப்பு வெல்வெட்டின் ஸ்பரிசம்போல.
கண்ணாடியின் கனத்த நீர்ப் பரப்புக்குமேல் தெரியும் பளபளப்பு
வெல்வெட்டின் கறுப்பு மினுமினுப்பைப் போல.
நீருக்குள் மரணிப்பது வெகு சுலபம் என்று
சொல்வார்கள்.
ரொம்பவும் களைப்பாக இருக்கிறது.
(கவிதைகள் ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பு: ஆசை)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago