“பொதுவா, எய்ட்ஸ் பாதிச்சவங்க தன்னோட பெயரோ போட்டோவோ பத்திரிகையில வர்றத விரும்ப மாட்டாங்க. ஆனா, நீங்க என் போட்டோவையும் பெயரையும் தாராளமா பத்திரிகையில போடலாம் சார். என்னுடைய வாழ்க்கை அனுபவம், துவண்டு கிடக்கிறவங்களுக்கு ஒரு உந்துதலா இருக்கணும்... தவறான பாதைக்கு போறவங்களால், அவங்களைச் சார்ந்தவங்க அடைகிற துன்பம் உலகத்துக்குத் தெரியணும்!’’ தன்னம்பிக்கை தளராமல் பேசுகிறார் தமிழ்!
பெற்றோரை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்பவர்களில், சிலர் மட்டுமே ஜெயிக்கிறார்கள்; பல பேருக்கு மணவாழ்க்கை சோபிப்பதில்லை. இதில் இரண்டாவது ரகம் தமிழ். காதலித்து கைப்பிடித்த கணவன் இவருக்கு தந்துவிட்டுப் போன மறக்க முடியாத பரிசு ஹெச்.ஐ.வி! 34 வயதில் கணவனை இழந்து, இளையோர் மத்தியில் இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் தமிழ்!
“திருச்சி லால்குடி பக்கத்துல தான் எங்க கிராமம். நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில. அப்பா அரசியல்வாதி; அம்மாவுக்கு அரசு உத்தியோகம். லீவு நாட்கள்ல அடிக்கடி சொந்த ஊருப்பக்கம் போவேன். அப்பத்தான் அவருக்கும் எனக்கும் காதல் மலர்ந்துச்சு. எங்க காதலுக்கு வீட்டுல எதிர்ப்பு. அதையும் மீறி 98-ல அவரும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்ப எனக்கு 18 வயசு.
கல்யாணத்துக்கு அப்புறம் தபால் மூலமா பட்டப்படிப்பு படிச்சேன். எல்லா காதலர்களையும் போல ஆரம்ப நாட்கள் எங்களுக்கும் இனிமையாத்தான் நகர்ந்துச்சு. அதுக்கு அடையாளமா அழகான ஒரு பெண் குழந்தைக்கு தாயானேன். அப்புறம்தான், என்னோட வாழ்க்கையில சூறாவளி சுழற்றியடிக்க ஆரம்பிச்சிது. பொண்ணு பொறந்த கொஞ்ச நாட்கள்லயே அவருக்கு அடிக்கடி முடியாம வர ஆரம்பிச்சுது. சோதிச்சுப் பாத்ததுல, அவருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருக்குன்னு சொல்லிட்டாங்க. என்னதான் தைரியமானவளா இருந்தாலும் நானும் பொண்ணு தானே. இடிஞ்சு போயிட்டேன்.
என்னை கல்யாணம் பண்ணிக்கிற துக்கு முந்தியே அவரு தவறான உறவுகளில் ஈடுபட்டுருக்காருன்னு தெரிஞ்சப்ப, ஆத்திரமும் அழுகையும் பொங்கிக்கிட்டு வந்துச்சு. நானும் அவரால ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கேன்னு தெரிஞ்சப்ப வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. மனுஷனுக்கு சோதனைகள் வருவது இயற்கைதான். ஆனால், எனக்கு மட்டும் சோதனையே வாழ்க்கை யாகிப் போச்சு. இனி வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறோம்.. குழந்தைக்கும் எதையாச்சும் வாங்கிக் குடுத்துட்டு செத்துப் போயிடலாம்னு முடிவு செஞ்சோம். அப்ப, திடீர்னு ஒரு யோசனை வந்து மகளுக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். அவளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாம பண்ணுன பாவத்துக்கு இந்தப் புள்ளைய ஏன் கொல்லணும்? இவளுக்காக நாம ரெண்டு பேரும் வாழ்றதுன்னு அப்ப முடிவெடுத்தோம்.
2000-ல் அடுத்த குழந்தை பிறந்தது. அடுத்த இருபதாவது நாளில் என் கணவர் இறந்துட்டார். அவர் போன 15-வது நாள் எனது இரண்டாவது குழந்தையும் கண்ணை மூடிருச்சு. அப்ப எனக்கு 23 வயசு. என்ன பண்றதுன்னு புரியல... மூத்த மகள தூக்கிக்கிட்டு பெத்தவங்கள பாக்கப் போனேன். அவங்க என்னைய படிஏத்தல. அவரோட வீட்டுலயும் என்னைய அடிச்சுத் துரத்தாத குறை! போக்கிடம் தெரியாமல் நானும் என் பிள்ளையும் நடுத் தெருவுல நின்னோம். என்னைப்பற்றி நான் கவலைப்படல. ஆனா, புள்ளைய வளத்து ஆளாக்கணுமே... நெஞ்சுல வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டு ஓட ஆரம்பிச்சேன். எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிகளைச் செய்யும் ஒரு தொண்டு நிறுவனத்திலேயே எனக்கு களப்பணியாளரா வேலை கிடச்சுது’’ தனது கடந்த காலத்தை தடதடவென கொட்டித் தீர்த்த தமிழ், நிகழ்காலத்தைப் பற்றியும் சொன்னார்.
“எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருந்தா லும் தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கிட்டா நீண்ட காலம் உயிர் வாழலாம்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். அதை என்னைப் போல பாதிக்கப்பட்ட மத்தவங்களுக்கும் புரிய வைச்சேன். 2002-ல் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தை திருச்சி மாவட்ட அளவில் தொடங்கினேன். தொடக்கத்தில் சிலர்தான் உறுப்பினரானார்கள். இப்ப, 2500 பேர் இருக்கிறார்கள். இதை நினைக்கும்போது, ஹெச்.ஐ.வி-யால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், தங்களை வெளிக்காட்டிக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள இத்தனை பேர் முன்வந்திருக்கிறார்களே என்ற மன நிம்மதியும் இருக்கு.
எய்ட்ஸால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்களிடம் உள்ள நோயை மனைவிக்கும் தந்துவிட்டுப் போகிறார்கள். இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு யாரும் உதவ முன்வருவதில்லை. அவர்களுக்கு சொத்துரிமைகூட மறுக்கப்படுது. இப்படி வரும் பெண்களுக்கு நாங்கள் சட்ட ரீதியான உதவிகளையும் செய்கிறோம். எய்ட்ஸ் பாதிச்சாலும் நல்ல உணவு, மன அழுத்தத்தை குறைப்பது, யோகா, தியானம் இவற்றால் ஆயுளை நீடிக்க முடியும். நான் இதைத்தான் பின்பற்றுகிறேன்.
கல்லூரியில் படிக்கும் பிள்ளை களே தவறான வழிகளுக்குப் போய் ஹெச்.ஐ.வி-யை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு இப்போது கவுன்சலிங் கொடுக்குறேன். இதுவரைக்கும் 15,500 பேருக்கு கவுன்சலிங் கொடுத்துருக்கேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்தேன். மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கும்போது என்னுடைய கதையைத்தான் உதா ரணமாகச் சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பேன். எய்ட்ஸ் எனக்கு நாள் குறிக்கும் வரை இந்தப் பணி தொடரும்’’ குரலை உயர்த்திச் சொன்னார் தமிழ்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago