மாவீரர் அலெக்சாண்டர் வாழ்க்கை வரலாற்றில் மிக முக்கியமான கட்டம் அவர் தன்னை ‘ஜூபிடர் அம்மனின் (கிரேக்கப் பெண் தெய்வம்) மகன்’ என்று அறிவித்துக்கொண்டதைச் சொல்வார்கள். அப்படித் தன்னை அவர் அறிவித்துக்கொண்டதன் மூலமாகத் தன் படை வீரர்களிடம் அவர் அதிகமாகச் செல்வாக்கு செலுத்த முடிந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
எனவே, யார் இங்கு கடவுள் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தையின் பிஞ்சுக் கைகளைக் கூப்பச் செய்து ‘சாமி கும்பிடு’ என்று சொல்லிக் கொடுக்கும் போது அந்தக் குழந்தையின் முன்னால் காட்டப்படும் முக்கிய தெய்வம் ஆண் வடிவத்திலேயே இருக்கிறது. அலெக்சாண்டர் காலத்தில் ஒரு பெண் தெய்வத்தின் மகனாகவே அவர் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், ஆண் கடவுள்கள் பெண் கடவுள்களின் இடத்தை எடுத்துக்கொண்ட பிறகு ஜூபிடர் அம்மனிலிருந்து நம்ம மாரியாத்தாவரை பின் வரிசைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். பெண்ணின் தலைமைக்கு இது அடிப்படையான சவால். குழந்தைகளின் மனதில் ஆண்தான் தலைவன் என்று முதலில் பதிவாகிற இடம் இதுதான். பெண்களை முற்றிலுமாகப் புறக்கணித்து நிற்கும் ஒற்றைக் கடவுள்களும் கடவுளின் மனைவியராகவும் துணைக் கதாபாத்திரங்களாகவும் பெண்களை வைத்திருக்கும் மதங்களும் சமுதாயத்தில் ஆண்தான் தலைவன் என்பதை நிலைநிறுத்தும் புனைவுகளே.
வாழ்க்கை முழுவதும் கடவுள் மீதான ஆராதனை என்பது உண்மையில் சமுதாயத்தில் ஆண் தலைமை மீதான ஆராதனையாகவே தொடர்கிறது. கற்பிக்கப்படும் புனிதங்கள், ஏற்றப்படும் நம்பிக்கைகள், கொண்டாடப்படும் பண்டிகைகள் என அனைத்தும் ஆணின் தலைமையிலான சமுதாயக் கோட்டையை அழுத்தமாகக் கட்டியெழுப்புகின்றன.
அடுத்துத் தொடங்குகிறது பள்ளி வாழ்க்கை. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களுக்கெனவும் சிறுமிகளுக்கெனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எதற்காக இந்தத் தனிப் பள்ளிகளும் கல்லூரிகளும்? ஒரு பாலர் மட்டுமே பயிலும் கல்விக்கூடங்கள் தேவையா? டாக்டர் முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். அவர் கல்லூரியில் பயில விண்ணப்பித்தபோது அவர் மட்டுமே பெண். அப்போது அது பெரிய அளவில் விவாதத்துக்குள்ளானது.
கல்லூரியில் பெண்கள் தங்கள் மகன்களுடன் சேர்ந்து படித்தால் தங்கள் மகன்கள் கெட்டுவிடுவார்கள் என்றும் தங்கள் பையன்களுக்கான விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் சில பெற்றோர் அச்சுறுத்தினார்களாம். இப்படிப் பெண்கள் பையன்களைக் கெடுத்துவிடுவார்கள் அல்லது பையன்களால் பெண்களுக்கு ஆபத்து என்பதான அச்சமும் கருத்தும் உண்மையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களைவிட ஆபத்தானவை.
மாணவர்களைப் பிரிப்பது சரியா?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்களையும் ஆண்களையும் பிரித்துவைப்பதன் மூலமாகத்தான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று நாம் நம்புவது உண்மையென்றால், சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறையை நாம் எந்தக் காலத்திலும் ஒழித்துவிட முடியாது அல்லது குறைத்துவிட முடியாது. குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டணை தீர்ப்பு எழுதிய மை உலர்வதற்குள் அடுத்த வன்முறைக் காட்சி அரங்கேறி, ஊடகங்களுக்குத் தீனியாக உலா வருகிறது.
பெண்கள் படிக்கவே முன்வராத காலத்தில் அவர்களை உள்ளிழுப்பதற்காக மகளிர் கல்லூரிகள் தொடங்கப்பட்ட வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் அதனை எத்தனை காலம் தொடரப் போகிறோம்? சரி கல்லூரிகளை விடுங்கள். நர்சரி பள்ளிகள் ஏன் பிரிக்கப்பட்டிருக்கின்றன? ஏன் குழந்தைகள் வளர்வதற்கு முன்பாகவே அவர்களுக்குப் பெரியவர்களின் பாத்திரத்தை நாம் அளிக்கிறோம்?
அரசுப் பள்ளி ஆசிரியரும் ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ கல்வி இயக்கத்தின் செயல்பாட்டாளருமாகிய சுடரொளி பேசும்போது ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
“நாங்கள் பிரித்து உட்காரவைக்காவிட்டாலும்கூடப் பையன்களும் பெண் பிள்ளைகளும் தனித்தனியாகத்தான் உட்காருகிறார்கள். இது குறித்து விவாதம் எழுப்ப நினைத்து அவர்களிடம் ஏன் இப்படிப் பிரிந்து உட்காருகிறீர்கள், சேர்ந்து உட்காருங்கள் என்று சொன்னேன். அதற்கு ஒரு பையன், “வேண்டாம் டீச்சர், எதுக்கு வம்பு? அப்புறம் தெரியாம கை கால் பட்டுட்டாகூட பொம்பிளைப் பிள்ளையை இடிச்சுட்டான்னு சொல்லுவாங்க. அதுக்குப் பயந்துதான் நாங்க தனியா உட்காருகிறோம்” என்று சொன்னான். இங்கு பெண் குழந்தைகளுக்குக் குழந்தைப் பருவம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது”.
அம்மாவுக்கு எத்தனை தோசை?
பத்தாண்டுகளுக்கு முன்புவரை நம்முடைய பாடத் திட்டம் பெண்ணை இரண்டாம் தரமாக்குவதாகவே அமைந்திருந்தது. அதற்கும் முன்பு அது சாதிய, வர்ண வேறுபாட்டைக்கூட இயல்பானதாகக் கற்பிக்கும் விதமாகவே அமைந்திருந்தது. உதாரணமாக முன்பெல்லாம் பாடப் புத்தகங்களில் அம்மா தோசை சுடுவார், அப்பா செய்தித்தாள் வாசிப்பார். பையனுக்கு மூணு தோசை, பெண்பிள்ளைக்கு இரண்டு தோசை, அப்பாவுக்கு நாலு.
ஆனால் தோசை சுடும் அம்மாவுக்கு மூணு தோசை போன்ற கருத்தெல்லாம் இடம்பெற்றிருந்தன. குடும்பத் தலைவர் அப்பா என்று ஆணி அடித்தது போல் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இப்போது அந்த நிலையிலிருந்து ஒரு மாற்றமிருக்கிறது. அதாவது இன்று பாடத் திட்டங்களில் பெரும் மாற்றமிருக்கிறது. ஆனாலும் அந்த மாற்றங்கள் அதற்குரிய சாதகமான விளைவுகளைப் போதுமான அளவில் தரவில்லை என்றே தோன்றுகிறது. ஏன்?
(இன்னும் தெறிவோம்)
கட்டுரையாளர்: பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago