மாதவிடாய் விடுப்புத் திட்டத்தை வரவேற்கலாமா?

By என்.கெளரி

உலகில் ஜப்பான், தைவான், தென்கொரியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்புத் திட்டம் (Menstrual Leave Policy) அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம், ‘கோஎக்ஸிஸ்ட்’ என்ற பிரிட்டன் நிறுவனம் மாதவிடாய் விடுப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பு பலதரப்பிலும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பின் தேவை, தேவையின்மை குறித்த விவாதத்தை உருவாக்கியது. அப்போது, இந்தியாவிலும் ‘மாதவிடாய் விடுப்புத் திட்டத்துக்கான’ தேவையைப் பற்றிய குரல்கள் ஒலித்தன.

அதற்குப் பிறகு, கடந்த ஜூலை மாதம், நேபாளத்தில் இயங்கும் ‘சஸ்டோ டீல்’ (Sasto Deal) என்ற நிறுவனம், மாதவிடாய் விடுப்புத் திட்டத்தை அமல்படுத்தியிருப்பதைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. இப்போது இந்தியாவில் ஹைதராபாதைச் சேர்ந்த ‘இன்டஸ்ட்ரிஏஆர்சி’ (IndustryARC) என்ற நிறுவனம் மாதவிடாய் விடுப்புத் திட்டத்தைக் கடந்த மூன்று மாதங்களாகச் செயல்படுத்திவருவது தெரியவந்திருக்கிறது.

இந்த விடுப்புத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர், இந்நிறுவனம் கிட்டத்தட்ட நூறு பெண்களிடம் ஓர் ஆய்வை நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் மாதவிடாய்ச் சுழற்சியைப் பற்றிய பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதில் பணி நாட்களில் மாதவிடாயை எதிர்கொள்வதில் இருக்கும் பலவிதமான சிக்கல்களைப் பெரும்பாலான பெண்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். மாதவிடாய்க்கு முந்தைய நிலை (Premenstural Syndrome), முதல் இரண்டு நாட்களில் இயல்பான பணித் திறமையை வெளிப்படுத்த முடியாத நிலை போன்ற பிரச்சினைகளை அவர்கள் கூறியிருக்கின்றனர். அத்துடன், இந்தக் காரணங்களால் பலமுறை விடுப்பு எடுத்திருப்பதையும் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆய்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ‘மாதவிடாய் விடுப்புத் திட்டத்தை’ ‘ஊழியர்களின் வழிமுறைகள் கையே’ட்டிலும் இணைத்திருக்கிறது இந்நிறுவனம். இதன்படி, மாதத்தில் இரண்டு நாட்கள் பெண் ஊழியர்கள் இந்த ‘எம்.எல்.’(ML) விடுப்பை எடுத்துக்கொள்ளமுடியும். இந்த விடுப்பு, சம்பள விடுப்பா, சம்பளமற்ற விடுப்பா என்பது ஊழியர்களின் விடுப்பு இருப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த விடுப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த மூன்று மாதங்களில், நாற்பது சதவீதப் பெண் ஊழியர்கள் இதைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்நிறுவனம். இதன்மூலம், மாதவிடாய் வலியைத் தாங்கிக்கொண்டு, பணிக்குக் கட்டாயமாக வர வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது ‘இன்டஸ்ட்ரிஏஆர்சி’. பல பெண்கள் மாதவிடாயை நேரடிக் காரணமாகக் கூறி விடுப்பு எடுப்பதை இன்னும் பெரிய சங்கடமாகவே நினைக்கின்றனர். அப்படியே இந்தக் காரணத்தைக் கூறி, அவர்கள் விடுப்பு எடுத்தாலும் அதனால் அலுவலகங்களில் தேவையற்ற கேலி, கிண்டல் பேச்சை எதிர்கொள்கின்றனர். இந்தச் சங்கடங்களையெல்லாம் மாதவிடாய் விடுப்புத் திட்டத்தால் ஓரளவுக்கு நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.

இந்த விடுப்புத் திட்டத்தைப் பின்பற்றிவருவதில் உலக நாடுகளில் ஜப்பான்தான் முன்னோடி. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, 1947-ல் வகுத்த தொழிலாளர்கள் தரச் சட்டத்தின்படி (Labour Standards Law), மாதவிடாய் விடுப்புத் திட்டம் ஜப்பானில் அமலுக்கு வந்தது. இன்றுவரை, இந்தச் சட்டம் அங்கே தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இந்த முன்னுதாரணம், மற்ற இந்திய நிறுவனங்களிலும் பின்பற்றப்பட்டால் பெண்கள் மாதவிடாயை மனஅழுத்தம் இல்லாமல் எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் ஒருசில பெண்கள், ‘மாதவிடாய் பெரிய பிரச்சினையில்லை; அந்த நேரத்தில் எந்தச் சிறப்பு சலுகைகளும் வழங்கத் தேவையில்லை’ என்ற கருத்தை இந்த விடுப்புத் திட்டம் பற்றி கடந்த மார்ச் மாதம் எழுந்த விவாதத்தின்போது தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று இந்தியாவில் ஐம்பது சதவீதத்துக்கு அதிகமான பெண்கள் ரத்தசோகையாலும், நான்கில் ஒரு பெண் ‘பிசிஒஎஸ் (Polycystic Overy Syndrome) எனப்படும் ‘ஹார்மோன்’ சமமின்மை பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு மாதவிடாயைச் சமாளிப்பது எளிதான விஷயமில்லை என்பதுதான் நிதர்சனம். இந்தியாவில் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கினால், வலியையும் அசௌகரியத்தையும் சகித்துக்கொண்டு வேலை பார்க்கும் சூழலிலிருந்து பெண்கள் விடுபடுவதற்கான சாத்தியம் உருவாகும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்