சமகாலத்தில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை நிரூபித்துவருகிறார்கள். கடின உழைப்பு தேவைப்படும் துறைகளில்கூடப் பெண் பணியாளர்கள், பெண் தொழில் முனைவோர் உருவாகிவருகின்றனர். டாடா நிறுவனம் தனது அபாயகரமான உற்பத்திப் பிரிவில் பெண்களை இதுவரை பணியமர்த்தியதில்லை. நூற்றாண்டு கண்ட அந்த நிறுவனத்திலேயே சமீபத்தில் அந்தப் பிரிவிலும் பெண்கள் நுழைந்துவிட்டனர். ஆனால் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சில துறைகளில் இப்போதும் பெண்கள் ஈடுபடவே முடிவதில்லை. அப்படியான துறைகளில் ஒன்று ‘பிராப்பர்டி டெவலெப்மெண்ட்’. கட்டுமானத் துறையில்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றனர். ஆனால் ‘பிராப்பர்டி டெவலெப்மென்ட்’ முழுக்க முழுக்க ஆண்களின் வசம்தான் உள்ளது.
ஆண்களால் மட்டுமே வெற்றிகாண முடியும் என்கிற அந்தத் துறையிலும் பெண் தொழில் முனைவோர் உருவாக முடியும், வெற்றிகரமாக இயங்க முடியும் என்கிறார் வேலஸ்ரீ. தனது ராம் ஈஸ்வர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மூலம் சென்னையின் புறநகரப் பகுதிகளில் பல லே அவுட்டுகள், கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இந்தத் துறையில் இவரால் எப்படி நிற்க முடிகிறது?
“முன்பு இருந்த நிலை கொஞ்சம் மாறிவருகிறது என்றாலும், கொஞ்சம் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். யாரை நோக்கி நமது வேலைகள் இருக்கின்றன என்பதில் தெளிவாக இருந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனாலும் இதை ஒரு சவாலாகத்தான் செய்துவருகிறேன்” என்கிறார் வேல.
இவரது சொந்த ஊர் நாகர்கோவில். படிப்பதற்காக 1997-ல் சென்னை வந்திருக்கிறார். இங்கு சித்தி வீட்டில் தங்கி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் எந்தத் துறையில் என்பதில் தெளிவில்லை. “சட்டம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனது தொடர்புகள் மூலம் சின்னச் சின்ன பிசினஸ் புராஜெக்ட்டுகள் செய்திருக்கிறேன். ஆனால் அதை நிறுவனம் என்கிற அளவுக்கெல்லாம் யோசிக்கவில்லை. சட்டப் படிப்புடன் எம்.பி.ஏ.வும் வைத்திருந்ததால் சில கார்ப்பரேட் நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினேன். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வேலைகள் சோர்வைத் தந்ததால் முழுமையாக தொழில்முனைவில் கவனம் செலுத்தினேன்” என்று தான் கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்கிறார் வேலஸ்ரீ.
ஏற்கெனவே இருந்த தொடர்புகளை மீண்டும் புதுப்பித்து, நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு துணிச்சலாக இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் வேல. சட்டம் பயின்றவர் என்பதால் ஆவணங்களைச் சரிபார்ப்பது, சட்டரீதியான சிக்கலைத் தீர்ப்பது போன்ற விஷயங்கள் இவருக்கு அத்துப்படி. நிர்வாகவியல் அனுபவமும் இருந்ததால் முறையான நிர்வாகத்தையும் தன்னால் கொண்டுவர முடிந்தது என்கிறார் மகிழ்ச்சியுடன்.
இதுவரை தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடிகளையும் சந்தித்ததில்லை என்று சொல்லும் வேலக்கு, அரசு அமைப்புகளில் இருந்து அனுமதி பெறுவதில் தாமதம், நீண்டகால நடைமுறைகள், அதிகப் போட்டி, லாப விகிதம் குறைவு போன்றவைதான் சவாலாக இருக்கின்றன.
இந்தச் சவால்களைக் கண்டு அவர் அயர்ந்துவிடவில்லை. “பிரச்சினை களைக் கண்டு விலகிச்செல்லாமல் அவற்றை எதிர்கொண்டு, சட்டரீதியாக அணுகுவதன் மூலம் சரிசெய்துவிடுகிறேன். தவிர யாருடனும் போட்டி போடுவதில்லை. இங்கு முக்கியத் தேவையே வெளிப்படையான அணுகுமுறைதான். நான் எனது வாடிக்கையாளர்களுக்கு அந்த நம்பிக்கையை அளிக்கிறேன். எந்த வகையிலும் வில்லங்கம் இல்லாத பத்திரங்கள், தவணை முறைத் திட்டங்களில் தெளிவான போக்கு என வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்” என்று சொல்லும்போது அவர் குரலில் அசாத்தியமான தன்னம்பிக்கை தொனிக்கிறது.
சட்டத் துறையில் உள்ள தொடர்புகளை வைத்துத் தனக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்ட வேலஸ்ரீக்கு இதுதான் பாதுகாப்பு தருகிறது. தனது திட்டங்கள் எல்லாமே நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இருப்பதும் தனக்குக் கைகொடுக்கிறது என்கிறார். ஐடி துறை சார்ந்தவர்களை மட்டுமே குறிவைக்காமல், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களைத் தன் வாடிக்கையாளர்களாக இவர் கருதுகிறார். தொழிலில் முனைப்புடன் சமூக அக்கறையும் கொண்ட வேலஸ்ரீ, சமூக நோக்கங்களுக்காகவும், குழந்தைகளின் கல்விக்கும் செலவிட்டுவருகிறார்.
தற்போது இந்தத் தொழிலுடன் கார்ப்பரேட் சட்ட ஆலோசனை, கட்டுமான வேலைகளிலும் கவனம் செலுத்துகிறார். ‘அன்னச்சாவடி’ என்கிற சமூக சேவை அமைப்பைத் தொடங்கும் முயற்சியும் இருக்கிறது என்று சொல்லும் வேலஸ்ரீ ஒரு விஷயத்தில் அசாத்தியமான தெளிவுடன் இருக்கிறார். “பெண்கள் எவ்வளவு படித்தாலும், திறமை இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தை நிர்வகிப்பது, குழந்தைகளைக் கவனிப்பது என்று சுருங்கிவிடக் கூடாது. குடும்பம் என்பது பெண்களுக்கு மட்டுமேயான கடமையில்லை. கணவன், மனைவி இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் எனது கணவரும் என்னை ஊக்குவிக்கவே செய்கிறார். குடும்பப் பொறுப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம்தான். அதற்காக நமக்கான கனவுகளை நாமே புதைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்கிறபோது நமக்குத்தான் குற்ற உணர்ச்சி உருவாகும்” என்கிறார் தீர்க்கமான குரலில்.
தன் தொழிலின் அடுத்த கட்டமாக ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரம், தனி வில்லா குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கிறார்.
பெண்கள் அதிகம் இல்லாத துறையில் கால் பதித்து வெற்றிபெற்றிருக்கும் வேலஸ்ரீ, குடும்பத்தையும் வேலையையும் சரியாகத் திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம், பல பெண் தொழில்முனைவோர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago