நாம் இந்தப் பூமியில் பிறக்கிறோம், இறக்கிறோம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டக் காலத்தில் உண்பது, உறங்குவது தவிர வேறென்ன செய்தோம்? உண்மையில் நாம் நினைப்பது போல வாழ்க்கையை அதன் அர்த்தத்துடன் வாழ்கிறோமா? இப்படியொரு கேள்விதான் இல்லத்தரசியாக இருந்தஸ்ரீமதியை தொழில்சார்ந்தும், சமூக அக்கறையுடனும் இயங்க வைத்திருக்கிறது.
பூர்விகம் தமிழ்நாடு என்றாலும் தந்தையின் பணி காரணமாக ஹைதராபாத்தில்தான் ஸ்ரீமதியின் இளமைக்காலம் கழிந்தது. கட்டுப்பெட்டித்தனங்கள் எதுவும் இல்லாத குடும்பப் பின்னணி,ஸ்ரீமதியை சிறு வயதில் இருந்தே மூன்றாம் கோணத்தில் சிந்திக்க வைத்தது. பள்ளி என்பது படிப்பதற்கான களம் மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொண்டார். கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறார். தேசிய மாணவர் படையில் தன்னை இணைத்துக் கொண்டு முழுமூச்சுடன் பயிற்சி எடுத்தார். சிறந்த சீனியர் அண்டர் ஆபிசராக இருந்ததால், ஆந்திர மாநிலத்தின் சார்பில் என்.சி.சி பிரதிநிதியாக டெல்லி சென்றார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருக்கும் என்.சி.சி பிரதிநிதிகளில் ஒருவர் மட்டுமே குழுத்தலைமை ஏற்க முடியும். ‘வேர்டு ஆஃப் கமாண்ட்’ எனப்படும் உறுதிமொழியை அவர்கள்தான் எடுக்க வேண்டும். உயரம் குறைவாக இருந்ததாலேயேஸ்ரீமதிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தன் முன் வைக்கப்பட்ட சவால்களை எல்லாம் உடைத்தெறிந்து, அவரே இறுதியில் குழுவை வழிநடத்திச் சென்றார். அந்த வெற்றிதான் எதையும் எதிர்த்துப் போராடும் உறுதியை அளித்ததாக ஸ்ரீமதி சொல்கிறார்.
முயற்சி என்னும் மந்திரம்
“எதையும் ஏன், எப்படி, எதுக்குன்னு கேள்வி கேட்டே எனக்குப் பழகிடுச்சு. அதனால முடியாதுங்கற வார்த்தையைப் பயன்படுத்தறதுக்கு முன்னாடி நூறுமுறையாவது முயற்சி செய்து பார்ப்பேன். என்.சி.சி-யில நான் முதல் மாணவியா இருந்ததால, முதல்வர் முன்னால பாராசூட்டில் இருந்து குதிச்சு சல்யூட் அடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. அதேபோல அணிவகுப்பின் போது கையில் வாளேந்திக்கிட்டு போற முதல் வாய்ப்பும் எனக்கே கிடைச்சுது. என் திறமைகளைப் பார்த்து தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லாமலேயே ராணுவத்தில் சேரும் வாய்ப்பும் கதவைத் தட்டுச்சு. ஆனா அந்த ஆர்வமும் முனைப்பும் நானே எதிர்பார்க்காத வகையில் திசைமாறிடுச்சு” என்று தன் வாழ்க்கைப் பயணம் மாற்றுப் பாதையில் சென்றதைப் பகிர்ந்து கொண்டார்.
கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போதே குடும்பச் சூழ்நிலைகளால் ஸ்ரீமதிக்கு திருமணம் நடந்தது. சென்னைக்கு மருமகளாகக் குடியேறுகிறார். கூட்டுக்குடும்பம், குழந்தை என ராணுவத்துக்கும் என்.சி.சி-க்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வேறொரு உலகத்துக்குள் தன்னைப் புகுத்திக் கொள்கிறார்.
பாதை மாறிய பயணம்
“ராணுவ அதிகாரியோ, இல்லத்தரசியோ... என் கதாபாத்திரம் எதுவா இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கணும். அதுதான் என் கொள்கை. மருமகளா, மனைவியா, அம்மாவா என் கடமையை முழுமனதுடன் செய்தேன். என் மகள் ஓரளவுக்கு வளர்ந்ததும்தான், நான் படித்த படிப்பும் கடந்து வந்த அனுபவங்களும் பரணில் போடப்பட்டு இருக்கேன்னு தோணுச்சு. எனக்குத் தெரிஞ்ச திறமைகளை மூலதனமா வைத்து சின்னதா பொட்டிக் ஆரம்பிச்சேன். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். என் நண்பரோட சேர்ந்து கிட்டத்தட்ட 55 ஃபேஷன் ஷோக்களுக்கு கோரியோகிராஃபிங் செய்து கொடுத்தேன். 6 விளம்பரப் படங்கள் இயக்கினேன். என்னை வேறு தளத்துக்கு அழைச்சுட்டுப் போனது என் கணவரின் சுற்றுலா ஆர்வம்தான்” என்று சஸ்பென்ஸ் வைத்துத் தொடர்ந்தார்.
“என் கணவர் அடிக்கடி சுற்றுலா செல்வார், எங்களையும் அழைச்சுட்டுப் போவார். என்னோட பரேடில் கலந்துக்கிட்ட என்.சி.சி தோழியை ஒரு சுற்றுலா மாநாட்டில் சந்திச்சேன். அவ ஒரு சுற்றுலா பத்திரிகையின் ஆசிரியரா இருந்தாள். அவதான் அமெரிக்காவில் நடக்கும் சுற்றுலா மாநாடு பத்தி எனக்குச் சொன்னாள். நானும் அதற்கு விண்ணப்பிச்சேன்.
தென்னிந்தியாவில் இருந்து நான் மட்டுமே தேர்வானேன். ஆனா அங்க எல்லாத்தையும் சும்மா சுத்திப் பார்ப்பதைத் தவிர எனக்கு வேறொண்ணும் தெரியலை. அப்போதான் அங்கே நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்டாலைப் பார்த்தேன். விஞ்ஞானிகள் மட்டுமே நாசாவுக்குச் செல்ல முடியும்ங்கற என் நம்பிக்கை எத்தனை தவறுன்னு அப்போதான் புரிஞ்சது. எங்க ஊர்ல இருந்து மாணவர்களை சுற்றுலா அழைச்சுட்டு வரலாமான்னு அவங்ககிட்டே கேட்டேன். அவங்க பல நிபந்தனைகளை சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டுக்கிட்டு சென்னை வந்தேன். 2010-இல் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆனா நான் எதிர்பார்த்த அளவுக்கு எதுவுமே நடக்கலை” என்று தன் நிறுவனம் ஆரம்பத்தில் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னார்.
வருமானம் இல்லாத தொழில்
“இங்கே ஆர்வம் இருக்கிற அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. ஆரம்பத்தில் யாருமே வரலை. கிட்டத்தட்ட லட்சத்தைத் தாண்டுற கட்டணம்தான் முதல் காரணம். ஆனா அமெரிக்கா போயிட்டு வர்ற 12 நாள் சுற்றுலாவுக்கு இதைவிட குறைவா செலவிட முடியாதே. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கூல்ல இருந்தும் காலேஜ்ல இருந்தும் பேசினாங்க. கல்வியோட மாணவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் சுற்றுலாவா இது இருக்கணும்னு நினைச்சேன். அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களோட பேசி, சிறப்பு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன்.
கடந்த மூன்று ஆண்டுகள்ல கிட்டத்தட்ட 850 குழந்தைகளுக்கும் மேல் நாசாவுக்குச் சுற்றுலா அழைச்சுட்டுப் போயிருக்கோம். சிறந்த பெண் தொழில்முனைவோரா நான் தேர்ந்தெடுக்கப்பட்ட விழாவுக்குப் போயிருந்தேன். அங்கே என் நிறுவனத்தின் வரவு செலவைப் பார்த்தவங்க, ‘எல்லாம் சரி... வருமானம் எங்கே?’னு கேட்டாங்க. என்னால சிரிக்க மட்டும்தான் முடிஞ்சது” என்று சொல்லும்ஸ்ரீமதி, பள்ளி மாணவர்களின் அறிவியல் திறமையை ஊக்குவிக்கும் விதமாக ‘இளம் விஞ்ஞானி’ நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டதை பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
ஒலிம்பிக் போட்டியின் போது நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 குழுக்களில் ஸ்ரீமதி தலைமையிலான கலைக்குழுவும் ஒன்று.
பெண்ணுக்கும் உரிமை உண்டு
பெண் சிசுக்கொலை, பெண்கள் மீதான வன்முறை இவற்றை எதிர்க்கும் வகையில் குறும்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். படிப்பு மட்டுமே அளவு கோல் இல்லை என்று சொல்லும்ஸ்ரீமதி, தன் நிறுவனத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்.
“எல்லா வேலைக்கும் இன்ஜினியரிங் முடிச்சவங்கதான் வேணும்னா, படிக்காத திறமைசாலிங்க எங்கே போவாங்க? என்கிட்டே இருக்கற குழந்தைகள், படிச்சவங்களைவிட நல்லா வேலை செய்வாங்க. இங்கிலீஷ்ல கொஞ்சம் தடுமாறுவாங்க. அதுக்கும் கோச்சிங் கிளாஸ் அனுப்பறேன்” என்று அக்கறையுடன் சொல்கிறார். சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். அரவாணிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்காக அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். விரைவில் அந்தக் கனவும் மெய்ப்படும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்ஸ்ரீமதி. சரியான இலக்கை நோக்கி எய்யப்படும் அம்புகள் ஒருபோதும் தவறுவதில்லைதானே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago