படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கு ஆண் கடவுளர்களையும் இதர துறைகளுக்குப் பெண் கடவுளர்களையும் நியமித்த மனிதர் யாரோ? இந்தச் சமூக அமைப்பின் ஆண், பெண் பாரபட்சம் தாங்கிய அதே வேலைப் பிரிவினைதான் அரசியல் அதிகாரத்துக்கு வந்த பெண்களுக்கும் வழங்கப்பட்டது. சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை போன்ற துறைகள்தான் அரசியல் அதிகார மையங்களைச் சென்றடைந்த பெண்களுக்கு அதிகபட்சமாகக் கிடைத்தன. நிதித்துறை போன்ற முக்கியமான துறைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டனவா என்பது ஆய்வுக்குரியது. அத்தி பூத்தாற்போல் எங்காவது நிகழ்ந்திருக்கலாம்.
அத்தி பூத்ததோ, காய்த்ததோ?
தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி, இந்தியாவின் முதன்மை அமைச்சராக, பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்ட அதிசயம் 1966-ல் நிகழ்ந்தது. இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஒரு பெண் பிரதமர்! இந்தியாவின் ஆணாதிக்க அரசியல் நிலைமைகள் அனைத்தும் இதன் மூலம் தகர்ந்துவிட்டதாக நினைக்க முடியாது.
அவரது குடும்பப் பின்னணி, கட்சிக்குள் அவர் வகித்த செல்வாக்கு இவை யாவும் அத்தகைய பதவியை வழங்கியிருக்கலாம். சுதந்திரப் போராட்டப் பாரம்பரியமும் நேருவின் மகள் என்பதும் கூடுதலான தகுதியைப் பெறும் காரணிகளாக இருந்திருக்கலாம். அரசியலுக்குள் நுழைகிற பெண்கள் அனைவருக்கும் இப்படியான உயரமும் அங்கீகாரமும் வாய்ப்பதில்லை. ஆனால் இந்திரா காந்தியின் வருகை, பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்த பார்வையை விசாலமாக்கியது.
நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு முன்புவரை அரசியல் ஆளுமையாகவும் அசைக்க முடியாதவர் என்ற பிம்பத்தோடும் வலம்வந்தவர் இந்திரா காந்தி. 17 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தவர். ‘துணிச்சல் மிகுந்தவர்’ என்ற புகழாரம் கிராமங்கள் வரை எட்டியிருந்தது. சரசுவதி, லட்சுமி, அபிராமி போன்ற பெயர்களுக்கு மத்தியில் பிரியதர்ஷினி, இந்திரா போன்ற பெயர்கள் தவிர்க்க முடியாமல் வகுப்பறைகளின் வருகைப் பதிவேட்டில் இடம்பிடித்துக்கொண்ட நேரமது.
என்னதான் அவர் அரசியல் தலைவராக விளங்கினாலும் அவருக்குள் ஒரு குடும்பத் தலைவி இருக்கவே செய்கிறார் என்ற கண்டுபிடிப்புகள்கூட அப்போதைய அரசியலில் அதிகம் பேசப்பட்டன. என்றாலும் அதிகாரத்தில் இருப்பவர்களை அரசியல் நடவடிக்கைகளோடும் அவர்களது கொள்கைகளோடும்தான் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இவரது ஆட்சியின் கீழ் ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். ஆனால் வாக்குறுதிகள்தான் வெளியேறின. வறுமை மக்களோடுதான் அமர்ந்திருந்தது.
மிசா காலம் இந்தியாவின் இருண்டகாலம் என்றே வர்ணிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை 356 பிரிவைப் பயன்படுத்தி கலைத்தார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் ஒன்றுதிரண்டு வெகுண்டெழுந்தார்கள் .
அரசியலில் சாதனைகளும் சறுக்கல்களும் ஆண், பெண் என்பதால் மட்டுமே ஏற்படுவதில்லை. அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி அமைப்பின் கொள்கைகளே அவற்றைத் தீர்மானிக்கின்றன. பொற்கோயில் ராணுவ நடவடிக்கை பின்னாளில் பல விளைவுகளை உருவாக்கியது. இந்திராவின் மரணத்துக்கும் அது காரணமாக அமைந்தது.
மூன்று நாட்கள் துக்கத்தில் கிராமங்கள்தோறும் பெண்கள் ஓலமிட்டு அழுததை ஒலிப்பெருக்கி அறிவித்துக்கொண்டே இருந்தது. ஏற்ற இறக்கமான அரசியல் சூழல். நேர், எதிர்மறையான விமர்சனங்கள். இவற்றுக்கு மத்தியில் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு அவசியமான, மதச்சார்பற்ற, சமத்துவக் கருத்துக்கு உயிரூட்டிய இந்திரா காந்தி என்ற 67 வயதான பெண்ணின் உடல் 29 குண்டுகளால் சல்லடைபோல் துளைக்கப்பட்டது. இந்த மரணம் அவர் மீதான பெரும் இரக்கத்தைப் பெண் என்ற முறையில் அதிகப்படுத்தியது.
ஒரு பெண் அரசியல் தலைவரின் மரணம் என்பது பெண்களின் அரசியல் நுழைவுக்கான முற்றுப்புள்ளி அல்ல. பிரதமரிலிருந்து ஜனாதிபதி, முதலமைச்சர், அமைச்சர்கள் என உள்ளாட்சி அமைப்புகள்வரை தடைகள் பல கடந்த பெண்களின் பயணம் இன்று தொடங்கிவிட்டது.
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago