முதலீடு செய்வதற்கு ஏற்ற துறையும் தெரிந்துவிட்டது. நிறுவனத்தையும் முடிவு செய்துவிட்டோம். எப்போது வாங்குவது, எவ்வளவு வாங்குவது? முதலீட்டைப் பொறுத்த அளவில் இது மிக மிக முக்கியமான கேள்வி. இதைக் கணிக்க முடியாமல்தான் பலரும் பங்குச் சந்தையில் நஷ்டப்பட்டு விட்டேன் என்று புலம்புகிறார்கள்.
அந்தச் சூட்சுமத்தை நாம் கொஞ்சம் பிடிக்கப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக முதலீட்டு வீடியோ விளம்பரங்களில் பொடி எழுத்துகளிலும் ஆடியோ விளம்பரங்களில், ‘சந்தை முதலீடு என்பது ஏற்ற, இறக்க அபாயங்களுக்கு உட்பட்டது. இதனால் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது!’ என்று வேகமாகவும் சொல்லப்படும் எச்சரிக்கை வாசகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
பங்குச் சந்தை முதலீடு என்பது எப்போதுமே பெரும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டின் ஒரு பகுதியை இதில் செய்யுங்கள் என்று சொல்வதன் காரணமும் அதுதான்! முதலீடு செய்வதற்கு ஏற்ற துறையையும் நிறுவனத்தையும் முடிவு செய்துவிட்டோம். எப்போது வாங்குவது, எவ்வளவு வாங்குவது?
எதிர்நீச்சல் பாணி
இங்குதான் முதலீட்டு ஞானி வாரன் பஃபெட் மந்திரம் துணைக்கு வருகிறது. எல்லோரும் வெளியேறும் நேரத்தில் நீங்கள் உள்ளே செல்லுங்கள். அதாவது சந்தை இதற்கு மேல் ஏற்றம் பெறாது, இதுதான் சந்தையின் உச்சபட்ச லாபம் என்ற மனநிலையோடு முதலீட்டாளர்கள் வெளியேறும் நேரத்தில் நாம் உள்ளே நுழைய வேண்டும். அதேபோல இதுதான் மிகச் சரியான நேரம், இதற்குக் கீழே சந்தை செல்லாது, இனி ஏற்றம்தான் பெறும். நாம் உள்ளே நுழைய இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முதலீட்டாளர்கள் முடிவுசெய்து, உள்ளே வரும்போது நாம் கையிலுள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேற வேண்டும். இதுதான் அவர் சொல்லும் மந்திரம். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் பொதுபுத்திக்கு எதிராக நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான்!
மாற்றி யோசிப்பதுதான் முதலீட்டின் அடிப்படையான குணம். எல்லோரும் விற்கும்போது நாம் வாங்க வேண்டுமானால் நம் இலக்கு இன்னும் உயரத்தில் இருக்க வேண்டும். அதற்குத் தகுதியான நிறுவனமாக நாம் தேர்வு செய்யும் நிறுவனம் இருக்க வேண்டும். அப்போது நம் முதலீடு புத்திசாலித்தனமாக இருக்கும்.
இதற்கு மேல் சந்தை உயராது என்று எல்லோரும் முடிவெடுக்கும்போது, நாம் எப்படி இன்னும் உயரும் என்ற இலக்கை யோசிக்க முடியும்? நிச்சயமாக முடியும். நல்ல வலுவான அடித்தளம் கொண்ட நிறுவனமாக இருந்தால் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு எளிதில் பலியாகாது. நிதானமாக ஏறும், நிதானமாக இறங்கும். சந்தை சரியும்போது இதுபோன்ற நிறுவனங்கள் ஓரளவுக்குக் குறைவான விலையில் வர்த்தகமாகும். சந்தை உச்சத்தில் இருக்கும்போது விற்றால் நம் பங்குகளின் விலையும் அதிகமாக இருக்கும் என்ற அடிப்படை விதியின்படி முதலீட்டாளர்கள் விற்பார்கள். ஆனால், நாம் வாங்கத் தீர்மானித்திருக்கும் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் சந்தை சரிவில் இருந்து மீளும்போது, சட்டென்று பழைய நிலைக்கு ஓடி வந்துவிடும். அதனால் நமக்கு லாபம்தான்! அதேதான் விற்கும்போதும். நம் முதலீட்டை விற்க முடிவெடுக்கும்போது சந்தை ஏறுமுகத்தில் இருந்தால், பலரும் ஆர்வமாக முதலீடு செய்ய உள்ளே வருவார்கள். நம் பங்குகளுக்கு நாம் சொல்லும் விலை கிடைக்கும்.
மனோதிடம் என்னும் மந்திரம்
இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் செயல்படுத்துவது அத்தனை எளிதில்லை. ஏனென்றால் நாம் பங்குகளை வாங்கிய பிறகு இன்னும் விலை குறையலாம். அடடா, இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் குறைந்த விலையில் வாங்கியிருக்கலாமே என்று நினைக்கக் கூடாது. அதற்கான மனோதிடம் இருக்க வேண்டும். அதேபோல நாம் விற்ற பிறகு அந்தப் பங்குகளின் விலை கூடலாம். அப்போது, நாம் இன்னும் கொஞ்சம் காத்திருந்து விற்றிருந்தால் இன்னும் லாபம் பார்த்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால், நாம் திட்டமிட்ட இலக்கு இது. இதை அடைந்துவிட்டோம் என்ற மனநிறைவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மனநிலையை அடைவது மிகக் கஷ்டம். அதனால்தான் இந்த விஷயத்தைச் செயல்படுத்துபவரை ஞானி என்கிறோம். நாம் அந்த ஞான நிலையை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். சரியான நேரத்தில் வாங்குகிறோம், சரியான நேரத்தில் விற்கிறோம். இதில் தெளிந்துவிட்டோம். ஆனாலும் மனதின் மூலையில் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதைச் சரி செய்வது எப்படி?
எப்போது வாங்குவது என்ற கட்டத்தைத் தாண்டிவிட்டோம். அடுத்து எவ்வளவு வாங்குவது என்ற கேள்விக்கான பதிலில்தான் வருத்தத்தைச் சரி செய்ய முடியும். உங்களிடம் நூறு பங்குகள் இருக்கின்றன என்றால் எழுபத்தைந்து பங்குகளை உச்சபட்ச விலையில் விற்பனை செய்யுங்கள். மீதமுள்ள இருபத்தைந்து பங்குகளைக் கொஞ்சம் காத்திருந்து விற்பனை செய்யுங்கள். அதிக விலையில் விற்க முடிந்தால் நல்லது. ஒருவேளை விலை சரிந்துவிட்டாலும் பெரிய நஷ்டமில்லை என்ற நிலையில் விற்றுவிடலாம்.
அதேபோல வாங்கும்போதும் நூறு பங்குகள் வாங்கத் திட்டமிட்டால் முதலில் அறுபது பங்குகளை வாங்குங்கள். அடுத்து இருபது பங்குகளை வாங்குங்கள். அடுத்து இன்னும் இருபது பங்குகளை வாங்குங்கள். இப்படி ஆவரேஜ் செய்து பங்குகளை வாங்கும்போது நாம் இன்னமும் லாபகரமாக இந்த முதலீட்டைச் செய்திருப்போம்.
சந்தையின் எதிர் திசையில் பயணித்துத்தான் முதலீடு செய்ய வேண்டுமா? அப்போதுதான் லாபம் பார்க்க முடியுமா? சந்தையோடு இணைந்து பயணித்தால் லாபம் கிடைக்காதா? அதைப் பற்றியும் பார்க்கலாம்.
(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago