நல்ல சேதி: தேடினாலும் கிடைக்காது!

By ம.சுசித்ரா

கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிய உதவும் தகவல்களையும் விளம்பரங்களையும் இனி இணையதளங்கள் தடுக்கும் என்று கூகுள், யாஹூ, மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

பாலினம் கண்டறிய உதவும் சாதனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான தகவல்களைத் தரும் தேடுபொறிகள் மீது 2008-ல் பாலின உரிமைகள் செயல்பாட்டாளர் சாபு மேத்யூ ஜார்ஜ் வழக்கு தொடுத்தார். அதனைத் தொடர்ந்து பாலினம் கண்டறிய வழிகாட்டும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி 2015 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இது தொடர்பான அத்தனை விளம்பரங்களையும் முற்றிலுமாகத் தடை செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

எங்கே போகிறோம்?

கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை மருத்துவர்கள் வெளிப்படுத்துவது 1994-லேயே தடை செய்யப்பட்டது. ஆனால் 2016-லும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி குற்றம் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகியும் இப்படியொரு சிக்கல் எழுந்திருப்பது ஏன்? இத்தனை தீவிரமாக இந்தச் சிக்கல் பார்க்கப்பட முதன்மையான காரணம், 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 944 பெண்கள்தான் உள்ளனர்.

கல்வியும் படிப்பறிவும் அதிகரிக்கும்போது பெண்களைச் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வும் எழும் என்கிற நம்பிக்கையை இந்தச் சம்பவம் சுக்குநூறாக்குகிறதல்லவா? நிச்சயமாக இணைய தளம் மூலமாகக் குழந்தைப் பேறு தொடர்பான தகவல்களைத் தேடுபவர்கள் ’மெத்தப் படித்தவர்’களாக இருக்க முடியும். அப்படியானால் அவர்களும் பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு வரவில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வு காட்டுகிறது!

அதிலும் இந்த இணையதளங்களின் கோர முகம் யாதெனில், அவை கருவில் வளர்வது ஆணா அல்லது பெண்ணா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதற்கான தகவல்களை அள்ளித் தெளிப்பதோடு நின்றுவிடுவதில்லை. மருத்துவமனையைக்கூடத் தேடிப் போகாமல் வீட்டிலிருந்தபடியே சுயமாகச் சோதனை செய்து கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டுபிடிக்க உதவும் சாதனங்களையும் அவை ஆன்லைனில் விற்கின்றன.

தீர்வைத் தேடி

பாலினத்தை அடையாளம் காண்பது தொடர்பான விளம்பரங்களையும் தகவல்களையும் தடைசெய்யத் தானியங்கி தடுப்பு (principle of auto block) என்கிற தொழில்நுட்பத்தை இந்த மூன்று நிறுவனங்களும் அமல்படுத்த உள்ளன. அதாவது, பாலினத்தைத் தேர்வு செய்தல் (Gender selection), பாலினத் தேர்வு சாதனங்கள் (Gender selection kits), பாலினத் தேர்வு சேவை (Gender selection service), பாலினத் தேர்வு மருத்துவமனைகள் (Gender selection clinics), பாலினத் தேர்வுக்கு உதவும் உத்திகள் (Gender selection techniques), மகப்பேறுக்கு முன்னதாகப் பாலினத்தைக் கண்டறிதல் (Prenatal sex selection), மகப்பேறுக்கு முன்னதாகப் பாலினத்தைக் கண்டறியும் சேவை (Prenatal sex selection service) உள்ளிட்ட 22 வார்த்தைகளை இனி இணையதளங்களில் தேடக் கூடாது. அப்படித் தேடும் பட்சத்தில் அவை தொடர்பான தகவல்கள் கிடைக்காது என்பது மட்டுமல்லாமல் அது சட்டப்படி குற்றம் என்கிற வரியும் திரையில் விரியும்.

இந்தப் போக்கும் சிக்கல்தான். ஏனெனில் பாலினத் தேர்வு தொடர்பான செய்திகளைத் தெரிந்துகொள்வதற்காகக்கூட அந்த வார்த்தைகளை விசைப்பலகையில் பதிவிடக்கூட முடியாது. ஆக ஒட்டுமொத்தமாக இது சம்பந்தமான தகவல்கள், செய்திகள் ஒடுக்கப்படுவதைத் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது.

உண்மையிலேயே பெண் சிசுக்கொலையையும் கருக்கொலையையும் தடுக்கச் சட்டமும் வழக்கமான கல்வியும் போதாது என்பதைத்தான் இவை நிரூபிக்கின்றன. பாலியல் சமத்துவம் நடைமுறைக்கு வர நாம் தொடங்க வேண்டிய இடம் எது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்