எங்க ஊரு வாசம்: கைகளில் மலரும் சிவந்த பூக்காடு!

By பாரததேவி

கல்யாணச் சந்தைக்குப் போவதால் வறுத்த பயறுகளைத் தின்பண்டமாகக் கொண்டுபோகக் கூடாது. அதனால் கடாப் பெட்டியை இடுக்கிக்கொண்டு நடந்தவர்கள், வழி நெடுக மரத்தில் இருந்து உதிர்ந்து பூமியில் கிடக்கும் அத்திப் பழம், ஆலம் பழம், மஞ்சனத்திப் பழங்களைப் பொறுக்கியெடுத்து, மடியில் வைத்துக்கொள்வார்கள். பிறகு ஊதி ஊதித் தின்றுகொண்டே போவார்கள். அதோடு கல்யாணம் வரையிலும் கருவாடு, உப்புக் கண்டம் என்று திங்கக் கூடாது என்பதால் போகும் வழியில் விளைந்திருந்த பச்சை மிளகாய், வெங்காயம் மட்டுமே இவர்களின் வெஞ்சனமாக இருந்தது.

வெயிலேறிக்கொண்டிருந்தது. இந்த மரக் கூட்டங்களிடையே வருவதற்கு சூரியனுக்கு எப்போதும் கொஞ்சம் அச்சம்தான். அதனால் தன் வெளிச்சத்தை மரங்களிடையில் சிறு சிறு வட்டங்களாகச் சிதறவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

சுரைக்காய் சுமந்தால் காசு

முதலில் அருணாச்சலத்துக்கும் பூங்கோதைக்கும்தான் கல்யாணம். கல்யாணத்துக்கு முதல் நாள் சிறுவர்கள் காடுகளை நோக்கி ஓடினார்கள். பிஞ்சையின் கரை சேர்ந்த சரிவுகளிலும், ஓடைகளிலும் காய்த்துக் கிடந்த சுரை, பூசணிக்காய்களை பெரிய ஆட்கள் பிடுங்கி ஒவ்வொன்றாகச் சிறுவர்களின் கையில் கொடுக்க, அவர்களுக்குப் பெருமையும் சந்தோஷமும் தாங்க முடியவில்லை. ஆசை ஆசையாகச் சுமந்துகொண்டு வந்து கல்யாண வீட்டில் போய் கொடுத்தார்கள். அந்தச் சிறுவர்களுக்கெல்லாம் ஓட்டை முக்காத்துட்டு (காலணா) பரிசாகக் கிடைத்தது. அவை சற்று நேரத்தில் பொட்டிக்கடை வைத்திருந்த அழகரின் கையில் கிடைக்க, அவை அச்சு வெல்லமாக மாறிச் சிறுவர்களைக் கும்மாளமிடவைத்தன.

ஊரெல்லாம் மணக்கும் பூண்டு ரசம்

சிறுவர்களுக்கு காய் பறித்துக் கொடுத்த பெரியவர்கள் பொட்டி பொட்டியாகக் கத்தரிக்காய், தக்காளிப் பழம், பச்சை மிளகாயோடு ஒற்றை வரப்பில் கல்யாண வீடு நோக்கி நடந்தார்கள். பத்து, பன்னிரெண்டு வயதுப் பெண்கள் வேலிகளைத் தேடிச் சென்று மடி நிறைய மருதாணி இலைகளைப் பறித்து வந்து குமரிகளிடம் சேர்த்தார்கள்.

கல்யாணத்துக்காகப் பச்சை கறிவேப்பிலையோடு சீரகம், மிளகு, பூண்டு, காயம், வத்தல் என்று ரசத்துக்காக உரல் உரலாகக் குமரிகள் இடிக்க, அதன் வாசம் ஊருக்குள் காற்றோடு நுழைய, தினமும் புளியம்பூ ரசத்தைக் குடித்தவர்கள் இந்த வாசத்தை மூச்சை இழுத்துவிட்டு நரம்பெல்லாம் சிலிர்க்க அனுபவித்தார்கள்.

ரசத்துக்கு இடித்தவர்களுக்கு உட்கார நேரமில்லை. பெரிய அம்மியோரமாகச் சிறியதாக ஒதுங்கியிருந்த அம்மியில் மருதாணியை அள்ளிவைத்துக் கொட்டைப் பாக்கோடு தோள் வலிக்க இழுத்து, இழுத்து மைய அரைத்து செறட்டை செறட்டையாக வழித்து எடுத்ததில் அவர்களின் கையே சிவந்துபோனது.

கிழவிகள், பிள்ளை பெற்றவர்கள், குமரிகள் என்று வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடைய கால்களிலும் கைகளிலும் சிவந்த பூக்காடாக மருதாணி பூத்துக் கிடந்தது. கல்யாணத்துக்காக ஈயம் பூசிய பெரிய, பெரிய அண்டாக்களும், சருவங்களும், வாயகன்ற உயர்ந்த குத்துச் சட்டிகளும் ஆற்றங்கரையில் ஓடிய நீரில் புளியும் செங்கல் பொடியும் போட்டு தேய்த்ததில் தங்கமாக மின்னின.

மாப்பிள்ளையின் தவிப்பு

‘பூ வைத்த’ பெண்கள் காடுகளுக்குப் போகக் கூடாது என்பதால் பூங்கோதை ஊருக்குள்ளேயே தன் சேத்திக்காரிகளோடு தோள் பின்னிக்கொண்டு அலைந்தாள். அவளை எப்போது பார்ப்போமென்று அருணாச்சலம் தவியாய்த் தவித்தான். அதற்காகக் காட்டில் உள்ள வேலையைக் கூட விட்டுவிட்டு ஊருக்குள்ளேயே சுற்றிக்கொண்டு அலைந்தான்.

அவனுடைய சேர்த்திக்காரனான முத்தரசு, “ஏலேய் அருணாச்சலம். களத்தில அடிச்ச நெல்லு வீட்டுக்கு வர எம்புட்டு நேரமடா ஆவும்? நாளை கல்யாணம். அதுக்குள்ள எதுக்குடா இந்தப் பறப்பு பறக்கே?” என்று கேட்க, அருணாச்சலத்துக்கு வந்த கோபம் இந்த மட்டு இல்லை.

“நாளைக்குக் கல்யாணமிங்கறது எனக்குத் தெரியாதா? கல்யாணத்துக்குப் பெறவு மூணு மாத்தைக்கு அவ கிட்டனாச்சிலும் அண்ட முடியுமா? தனியா பார்த்தோம், ரெண்டு வார்த்தை பேசுனோம், வச்சோன்னு பேச முடியுமா? வீட்டுக்குள்ளன்னு அவளுக்கு நாலு கெழடுக காவலு இருக்கும். பிஞ்சைக் காட்டுல அவ சேத்திக்காரக கூட அலைவா. பெறவு எங்கிட்டுப் பார்க்கிறது? அதுக்குத்தேன் கல்யாணத்துக்கு முன்னால ஒருக்கப் பார்த்துக்கிடுவோமின்னு தவிச்சிக்கிட்டு கெடக்கேன்” என்றான்.

“அப்படின்னா நானு போயி பூங்கோதைய பய்ய இங்கிட்டு கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி ஆத்துக்கு துணி துவைக்கப் போறாப்பல உன் பிஞ்சத்திக்கம் கூட்டிட்டு வரட்டுமா?” என்று முத்தரசு கேட்க, அருணாச்சலத்துக்கு அவன் மீது எப்போதும் இல்லாத அன்பும் பிரியமும் கூடின.

“ஏலேய் நெசமாத்தேன் சொல்லுறியாடா?” என்று ஆவலும் ஆசையுமாகக் கேட்க, “பெறவென்ன பொய்யா சொல்லுதேன். நீ படுற பாதறவ பார்க்க எனக்கே மனசுக்கு சகிக்கலே. அதுக்குத்தேன் போயி கூட்டியாரேன்னு சொல்லுதேன்” என்று சொன்ன முத்தரசுவை முத்தமிடாத குறையாகக் கட்டிச் சேர்த்தணைத்து வழியனுப்பி வைத்தான் அருணாச்சலம்.

மாமியாரின் கட்டுப்பாடு

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் போன முத்தரசு எப்போது வருவான் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தான் அருணாச்சலம். அவன் கால்கள் நிலை கொள்ளாமல் தவிக்க, அவன் பார்வை ஊரிலிருந்து வரும் ஒற்றையடிப் பாதையிலேயே நிலைத்திருந்தது.

அவனை ரொம்பவும் பரிதவிக்க விடாமல் சற்று தூரத்தில் முத்தரசு வர, அவன் பின்னால் கண்டாங்கி சேலை ஒன்றும் தெரிய அருணாச்சலத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பூங்கோதையிடம் சற்று விளையாட்டு காட்ட வேண்டும் என்பதற்காக அங்கிருந்த முள் புதரில் ஒளிந்து கொண்டான்.

பூங்கோதை வந்து தன்னைத் தேடுவாள் என்று இவன் நினைத்துக்கொண்டிருக்க, “எய்ய எதுக்கு முள்ளுக்குள்ள ஒளிஞ்சிருக்கீக. சத்த வெளியே வாங்க” என்ற குரல் கேட்க, திகைப்போடு வெளியே வந்தான் அருணாச்சலம். அவன் எதிரில் அவனுக்கு நாளைய தினம் மாமியாராகப் போகும் முத்தாணி நின்றிருந்தாள். அருணாச்சலத்துக்கு திக்கென்றது.

இவள் எதற்காக இப்போது இங்கே வந்தாள் என்று யோசிக்க, முத்தாணியோ, “நீங்க பூங்கோதைய தனியாப் பார்க்கணுமின்னு சொன்னீகளாம். நாள கல்யாணம் முடிக்கப் போறவக இப்படி காட்டுலயும் கரையிலயும் ஒத்தீயில சத்தீயிலப் பார்த்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு நம்ம பொண்டாட்டியா வரப் போறவதானேன்னு உங்க மனசு எடுக்காத எடுப்பெல்லாம் எடுக்கச் சொல்லும். பெறவு எதாவதொரு அதங்கொதமான வேலை நடந்து எம் மவ வவுத்துல வாயில ஏதும் வந்துருச்சின்னா அம்புட்டுத்தேன். நானும் என் மவளும் தூக்குல தொங்க வேண்டியதுதேன். எதுக்கு இதை சொல்லுதேன்னா எத்தனையோ கல்யாணம் மணவறைக்கு வந்தும்கூட பணத்துலயும் பகையிலயும் நின்னும் போயிருக்கு. இன்னைக்கு மட்டுமில்ல, நாளைக்கு நீங்க எம் மவ கழுத்துல தாலி கட்டுனாலும் மூணு மாத்தைக்கு அவளை இப்படி மறவா ஒத்தையில பார்க்கணுமின்னு நெனைச்சீராதீக” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.

அருணாச்சலம் குன்றிப்போய் நின்றான்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்