மனைக்கு உரியவள் பெண். எனவே அவள் மனையாள். அந்த மனையே பெண்ணின் இயல்பான உலகமாக இன்றுவரையிலும் இருந்துவருகிறது. வாசற்படி என்பது பெண்ணைப் பொறுத்தவரை வெறுமனே கட்டிடத்தின் ஒரு பகுதியல்ல. அது அவள் உலகின் எல்லைப் பகுதி. கண்ணகியின் வண்ணச் சீறடியை மண்மகள் அறிந்திராமல் இருந்ததுதான் கண்ணகியின் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இப்படிப் பல கற்பிதங் களால் சிறைபடுத்தப்பட்ட உலகத்திலிருந்து அவ்வப்போது பெண்கள் வெளிக் கிளம்பிப் பல்வேறு சாதனை சரித்திரங்களைப் படைத்தபடி இருக்கிறார்கள்.
சாதனை படைத்தவர்கள் எல்லாம் முதலில் விதிமீறல் களாக அறியப்பட்டிருக்கலாம். வென்று காட்டிய பின் விதிவிலக்குகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம். இந்திரா காந்தியை அவர் இருந்த அமைச்சரவையின் ஒரே ஆண் மகன் என்று வர்ணித்தார் குஷ்வந்த்சிங். இந்திரா காந்தியின் ஆளுமைப் பண்புகள் பெண்களுக்குரியவை அல்ல, மாறாக ஆணின் இயல்புகளை அவர் ஆண்களைவிடச் சிறப்பாகப் பெற்றிருந்தார் என்று சொல்கிறார் அவர். இப்படித்தான் பொதுவெளிக்கு வந்தால் கூடப் பெண்ணுக்கான முகம் அங்கு இல்லை. ஆணின் முகத்தைத்தான் அவள் மாட்டிக்கொள்ள வேண்டும். இல்லை யெனில் மாட்டிவிடுவார்கள்.
பணிவுதான் அடையாளமா?
பெண்களுக்கான கல்வி உரிமை கேட்கப்பட்டது. குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற தார்மிக அடிப்படையை முன்னிறுத்தி அது மறுக்கப்பட்டது. பெண் படிக்கத் தொடங்கியவுடேனேயே படித்த பெண் உரிமை கேட்பது மிகப் பெரிய தவறு என்ற ரீதியிலேயே நாவல்களும் திரைப்படங்களும் அவளைச் சித்தரித்தன. படித்த பெண்கள் அகங்காரம் பிடித்தவர்களாக இருந்து பின்னால் கதாநாயகர்களால் திருத்தப்படுவார்கள். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பாக அடித்துத் திருத்தப்படுவதே அன்றைய தினங்களில் வெற்றிபெற்ற திரைப்படங்களாக ஓடின.
இதன் விளைவாக படித்த பெண்கள், மேலும் மேலும் பணிவாக நடந்துகொள்வதன் மூலமாகத் தாங்கள் அகங்காரம் பிடித்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களானார்கள். இதன் தொடர்ச்சியாகவே சம்பாதிக்கிற பெண், படித்த வேலைக்குப் போகும் பெண்ணை அன்றிலிருந்து ஏன் இன்றளவும்கூட குடும்பம் தனக்குரிய அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. கலெக்டர் பதவி வகிக்கும் பெண்கள்கூட, “நான் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டுதான் வேலைக்கு வருகிறேன்” என்ற அறிவிப்பை கவனமாகக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். பல பெண் பிரமுகர்கள் 80கள் வரை கொடுத்திருக்கும் பேட்டிகளில் இதை நாம் கவனிக்க முடியும்.
டீச்சரம்மா, நர்ஸம்மா அப்புறம் கொஞ்சம் மேலே போய் டாக்டரம்மா, இதையெல்லாம் தாண்டி பொறியாளர் தொடங்கி காவல்துறை வரை வருவது பெண்களுக்கு இன்னொரு காலகட்டப் போராட்டம். பெண்கள் பார்க்கக்கூடிய வேலைகள் என்ற புதிய எல்லையையும் கடக்கப் பெண்கள் போராட வேண்டியிருந்தது. முதன்முதலாகச் செய்தி வாசிப்பாளராக வந்த பெண் ஒருவரின் கணவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தபோது, தனது மனைவிக்குத் தான் வாசிக்கும் செய்திகள் பற்றி எதுவுமே தெரியாது என்பதையே அவருக்கான முதல் பெருமையாகத் தெரிவித்திருந்தார். வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என்ற அடியின் வரலாற்றுத் தொடர்ச்சி!
கற்பென்னும் கற்பிதம்
பொதுவெளியில் எந்தப் பெயரில் காலடி எடுத்து வைத்தாலும் பெண்ணின் முதல் சுமை அவளின் கற்பு. அவள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவள் வாழ்வின் முதலும் முடிவுமான லட்சியம் அவள் கற்புள்ளவளாக இருக்க வேண்டும் என்பதே. அதாவது அவள் கற்புள்ளவளாக இருக்கிறாள் என்பதை ஊரார் உணர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படியென்றால் அவள் உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். சந்தேகப்படுவது ராமனின் உரிமை. ‘எடுக்கவோ கோர்க்கவோ’ என்று கேட்பது துரியோதனின் பெருந்தன்மையே தவிர, துரியோதனன் மனைவிக்கிருக்கும் நட்புரிமை அல்ல.
ஆனால் ஆதரவற்ற ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால் போதும் என்று பெண் உடலை குறி வைத்து இயங்கிக்கொண்டே இருக்கும் ஆண்களின் பொதுச்சிந்தை. இந்த இடத்தில்தான் ஒரு முரண் நிகழ்கிறது. வேலைக்குப் போய்ப் பொருளீட்டத் தொடங்கிய பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லாத பெண்ணைவிட ஆணின் துணை அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால்தான் கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்ணைப் பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கிறதே தவிர அவர்கள் இன்னமும் பொதுவெளியைக் கைப்பற்றவில்லை.
பொதுவெளியில் அவர்கள் நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். பெண் விடுதலையின் சோகம் இது என்று சொல்வதா, சவால் இது என்று சொல்வதா? சோகம் என்று கொள்ளும் பெண்கள் முடங்கிப் போவார்கள். சவால் என்று எடுத்துக்கொள்ளும் பெண்கள் சாதிப்பார்கள்.
குடும்பத்தின் பங்கு
இப்படித்தான் கற்களும் முற்களும் பாதாள பதுங்குகுழிகளும் நிறைந்ததாக பெண்ணின் பொதுவெளி இருக்கிறது. இதில் தனக்கெனத் தனிப்பாதை போட்டுத்தான் பெண்கள் வெற்றி பெற முடியும். எல்லோரும் நடந்து பண்படுத்திச் சென்றிருக்கும் ஒரு பொதுப் பாதையைத் தேடினால் கிடைக்காது. அரசியல் இயக்கங்களுக்குள் வந்திருக்கும் பெண்களின் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்தால் புதிய மானுட வரலாற்றை அது எழுதக்கூடும். குடும்ப விழிப்புணர்வு அல்லது பொதுச் சிந்தனையுள்ள யாரோ ஒரு குடும்ப உறுப்பினர் வாயிலாகப் பெண்கள் அரசியல் வெளிக்கு வருவது நிகழக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட ஆதரவுடன் மட்டுமே எவரும் தொடர்ந்து இயங்கிவிட முடியாது.
என்னை எடுத்துக்கொண்டால் எனது குடும்பம் முதலில் சுயமரியாதை இயக்கம், அதன் பின் திராவிடர் கழகக் குடும்பம். இங்கு எந்தக் குழந்தைக்கும் பொது வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை என்று குடும்பம் சொல்லிக் கொடுக்காது. ஆனால் எனது குடும்பம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அது நான் பெற்ற முதற்பேறு. அதுவே இன்றுவரை பெரும்பேறு. வளரும் பருவத்தில் திராவிடர் கழகமே எனது குடும்பமாக இருந்தது. மிகக் கண்ணியமான பெருங்குடும்பம். ஆணாதிக்கச் சமூகத்தின் வெம்மை தெரியாமல் குளிர் சாதன வசதி பொருத்தப்பட்ட வீட்டில் வளர்வது போல் சுதந்திரச் சிந்தனைக்கான உரிமையுடன் நான் வளர்ந்தேன். மிக இள வயதிலேயே எனது வாழ்க்கைத் துணைவராகக் கட்சியி லிருந்தே தோழர் வள்ளிநாயகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆனால் இந்தக் குளிர் சாதன வசதி 18 வயதிலேயே முடிந்து போனது.
சாத்தியமாகட்டும் பொது வாழ்க்கை
வெகு விரைவில் இந்தச் சமூகம் பெண்ணுக்கு எவ்வளவு கொடுமையானது என்பதைப் புத்தகங்களுக்கு வெளியிலும் வாசிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பு தான் மகளிர் விடுதலை மன்றம், தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம், புதிய குரல் என்ற அமைப்புகளில் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
பொதுவாக இன்று சாதி ஒழிப்பும்கூடச் சாதியக் கட்டுமானத்துக்குள் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் பணம், பதவி, சாதி, மதம் இப்படிப் பிடிமானங்கள் எதுவுமில்லாமல் ஆண்களே பொதுத் தளத்தில் இயங்குவதற்கான வெளி வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் பெண்ணாக இருந்து இவை அனைத்தையும் எதிர்த்து இயங்குவதில் நிறைய எல்லைக் கோடுகள் இருக்கின்றன. அதிலும் பெண்களுக்குள் தனித்து இயக்கம் கட்டுவதில் உள்ள அனுபவங்கள் வேறாகவும் ஆண்களோடு இணைந்து அமைப்புகள் கட்டுவதில் உள்ள அனுபவங்கள் வேறாகவும் இருக்கின்றன. ஆனால் இந்த இருவித அமைப்புகளும் இன்று தேவையாக இருக்கின்றன. பொதுவாழ்வுக்கான மனம் இன்னும் பெண்கள் மத்தியில் வளர்ச்சியடைய வேண்டும்.
இந்தத் தலைமுறைப் பெண்கள் சிலர் முதல் முறையாக வேறு எந்த ஆணின் நிழலுமின்றி பொதுவாழ்வுக்குள் வருவதைப் பார்க்க இயல்கிறது. அது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. ஆனாலும் விரிவடையாத பெண்களின் சிந்தனைகள் பெண்கள் அமைப்பாவதில் இன்னுமே தடைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆண்களோடு இணைந்து பணி செய்யும்போது பெண், தான் அவர்களுக்கு இணையானவள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
மேலும் பெண்ணைத் தோழராக, அதைத் தாண்டி தலைவராக ஏற்றுக் கொள்வதில் ஆண் மனதுக்கும் சிக்கல்கள் இருக்கிறது. இன்னும்கூட ஒரு பொது இடத்தில் ஒரு பெண் தன்னைச் சத்தம் போட்டுப் பேசுவதை ஆண் அவமானமாக உணர்கின்ற கட்டத்தை நாம் கடந்துவிடவில்லை. ஆனால் விரைவில் கடந்துதானே ஆக வேண்டும்?
கட்டுரையாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago