உயரப் பறக்கும் மேரி பாரா: கார் நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓ.

By ஆதி வள்ளியப்பன்

உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ், தனது புதிய தலைமைச் செயல் அலுவலராக (சி.இ.ஓ.) மேரி பாரா (51) என்ற பெண்ணை நியமித்துள்ளது. சர்வதேச கார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பதவியை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறை. அதுவும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கு தலைமைப் பதவி கிடைப்பது என்பது, சாதாரண விஷயம் அல்ல. நிச்சயம் இது ஒரு மைல்கல்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் கண்களுக்கு பெரிதும் அறிமுகமாகாத நபராக இருந்த மேரி பாரா, இன்றைக்கு பேசப்படும் நபராக மாறிவிட்டார். புகழ்பெற்ற வணிக இதழான ஃபோர்ப்ஸ் இந்த ஆண்டு வெளியிட்ட உலகின் அதிகாரம்மிக்க பெண்கள் பட்டியலில் மேரி 35வது இடத்தில் இருக்கிறார்.

தொடரும் பாரம்பரியம்

டெட்ராய்ட் மாகாணத்தின் புறநகர் பகுதியான வாட்டர்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்த மேரி பாராவின் அப்பா ஜெனரல் மோட்டார்ஸ் பான்டியாக் கிளையில் டை மேக்கராக 39 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தவர்தான். மேரியும் 33 ஆண்டுகளாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பணியாளர்தான். அந்த வகையில் மேரிக்கு, அந்த நிறுவனத்துடன் கிட்டத்தட்ட 72 ஆண்டு தொடர்பு இருக்கிறது.

நூற்றாண்டு கண்ட, அமெரிக்காவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக தற்போது உயர்ந்துள்ள மேரி, 1980இல் மிச்சிகனில் உள்ள அன்றைய ஜெனரல் மோட்டார்ஸ் கல்வி நிறுவனத்தில் மின் பொறியியல் பயிற்சியாளராகச் (இண்டர்ன்) சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 18. ஜெனரல் மோட்டார்ஸ் கல்வி நிறுவனமே அவர் படிப்புக்கு நிதிநல்கை அளித்தது. இப்போது அந்த கல்வி நிறுவனத்தின் பெயர் கெட்டரிங் பல்கலைக்கழகம். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் அவர் நிறைவு செய்தார். 40 வயதை எட்டுவதற்கு முன்பே நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹாரி பியர்ஸின் உதவியாளராக மாறினார்.

தலைமைச் செயல் அலுவலர் ஆவதற்கு முன்பு உற்பத்திப் பிரிவின் சர்வதேச துணைத் தலைவராக மேரி இருந்தார். முன்னதாக வடிவமைப்பு, பொறியியல், தரக் கட்டுப்பாட்டுத் துறைகளில் பணிபுரிந்துள்ள மேரி, அந்த நிறுவனத்தின் சமீபத்திய புதிய வாகன அறிமுகத் திட்டங்கள் பலவற்றுக்கும் தலைமை வகித்துள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த டான் அகர்சன், அவருடைய மனைவிக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தன் குடும்பத்துடன் அதிக நேரம்

செலவழிப்பதற்காக பதவியைத் துறந்தார். இதையடுத்து மேரி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேரி பாராவின் இந்த நியமனம் குறித்து, “எனது வாழ்நாளில் ஒரு வாகன நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு ஒரு பெண் வருவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை” என்று வாகனத் துறை நிபுணர் மிஷெல் கிரெப்ஸ் தெரிவித்தார். வாகன உற்பத்தித் துறையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஒரு பெண் தலைமைப்பதவிக்கு வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.

2014 ஜனவரி 15ஆம் தேதி மேரி புதிய பதவியை ஏற்பார். தலைமைச் செயல் அலுவலராக மாறவுள்ளதன் மூலம் ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகக் குழுவின் 14 உறுப்பினர்களில், மேரி 5வது பெண் உறுப்பினராகவும் மாறியுள்ளார்.

நிர்வாகத்திறன்

“மேரி பல குழப்பங்களை சரியான நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். மேரி பெண் என்பதற்காக இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவரது திறமை காரணமாகவே தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று முன்னாள் சி.இ.ஓ. அகர்சன் பாராட்டியுள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பழைய காலத்தைப் போல இல்லை. அங்கே நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேரியின் பதவி நியமனம். இதையடுத்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பாரம்பரிய கார் தயாரிப்புகளைக் காட்டிலும், புதிய கார் வகைகளிலேயே அதிக கவனம் செலுத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

நவீன உலகில் எப்படி போட்டி போடுவது என்று அறிந்த வல்லுநராக மேரி கருதப்படுகிறார். அவர் மிகவும் உறுதியானவர். தனது அமைதியான தன்மையைவிட்டு எப்போதும் விலகாதவர். அதேநேரம் பார்ப்பதற்கு அமைதியானவராகத் தோற்றம் அளித்தாலும், மனரீதியில் செயல்திறன் மிக்கவர், வலுவான தலைவர். எளிதில் அணுகக்கூடியவர், நிலைகுலையாத தன்மை கொண்டவர். கெட்டரிங் பல்கலைக்கழக மாணவர்

களிடம் பேசும்போது, ஒரு தாய்க்கே உரிய கரிசனத்துடன் பேசுபவர், வேறு எந்த சி.இ.ஓவும் நிச்சயமாக இப்படி இருக்க வாய்ப்பில்லை. அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகனும் மகளும் உண்டு.

“இந்தத் துறையில் சிறந்த குழுவாககக் கருதப்படும் நிறுவனத்துக்கு தலைமை ஏற்பதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வாடிக்கையாளரை மையம் கொண்டதாகவே இருக்கும்” என்று மேரி தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களின் வரவேற்பு

பொறியியல் பின்னணி இல்லாதவர்களே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நீண்ட காலம் தலைமை வகித்து வந்த நிலையில், பொறியியல் பின்னணி கொண்ட மேரி தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏனென்றால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2009 ஜூலை மாதத்தில் திவால் ஆகும் நிலைக்குச் சென்றது.

அதனால், சக வாகன உற்பத்தியாளர்களான ஜப்பானின் டொயோட்டா, டெஸ்லா மோட்டார் நிறுவனங்களின் போட்டியை மேரி சமாளித்தாக வேண்டும். அதேபோல, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது விலைமிகுந்தவையாக இருக்கின்றன. இந்தியா, தென் அமெரிக்க சந்தைகளில் வரவேற்பைப் பெற வேண்டுமானால் விலைகுறைப்பையும் அது மேற்கொண்டாக வேண்டும். இந்தச் சவாலையும் மேரி சேர்த்து சமாளித்தாக வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்