பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் அதிகரித்துவந்தாலும், நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. கல்லுக்குக் கீழே பூக்கின்ற பூக்கள்போல் பெண்கள் பல துறைகளிலும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாமக்கல் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ப.ஆனந்தலட்சுமி, அதற்கு இன்னுமோர் உதாரணம்.
நகர்ப்புறப் பெண்களுக்குக் கிடைக்கிற பல வாய்ப்புகள் கிராமப்புறப் பெண்களுக்கு எட்டாக்கனிதான். அதுவும் கல்வி சார்ந்த கட்டுப்பாடுகள் கிராமங்களில் அதிகம். அப்படியொரு கிராமத்தில் இருந்தாலும் கட்டுப்பாடுகளைத் தகர்த்து விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துவருகிறார் ஆனந்தலட்சுமி,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி கிராமம்தான் இவருடைய சொந்த ஊர். பெற்றோர் பழனியப்பன், கமலம் இருவருக்கும் விவசாயம்தான் வாழ்வாதாரம். ஆயில்பட்டி கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நடந்து சென்று கல்வி பயின்றார் ஆனந்தலட்சுமி. அப்போது ஆசிரியர்களின் ஊக்குவிப்பாலும் வழிகாட்டுதலாலும் இவருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
விளையாட்டில் ஆர்வம்
பள்ளியளவில் நடக்கும் கபடி, 100 மீ்ட்டர், 200 மீ்ட்டர், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்வார். பள்ளிகளுக்கிடையே நடக்கும் மண்டல அளவிலான போட்டி வரைதான் ஆனந்தலட்சுமியால் அப்போது பங்கேற்க முடிந்தது. போட்டி நடைபெறும்போது தன் தந்தையைத் துணைக்கு அழைத்துச் செல்வார். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றாலும், வறுமையின் காரணமாக அதற்கடுத்து நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர வசதியிருந்தபோதும் ஆனந்தலட்சுமியின் பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் பட்டம் வாங்க வேண்டும் என்ற உத்வேகம் அவரைத் தொலைதூரக் கல்வி முறையில் பி.காம். முடிக்கவைத்தது. இதற்கிடையில் திருமணம், ஒரு மகள், ஒரு மகன் என இல்லறம் தொடர்ந்தது. குழந்தைகள் பிறந்த பிறகு இல்லத்தரசியாக வீட்டுக்குள்ளேயே முடங்கவிடாமல் கைகொடுத்தது காவல்துறை பணி.
“நான் 2000-ல் காவல்துறை பணியில் சேர்ந்தேன். இந்தத் துறையில் சேர்ந்தது அத்தனை நாட்களாக எனக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்த விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. காவல்துறையினருக்கு நடத்தப்படும் அனைத்துத் தடகளப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். அவற்றில் பரிசு வாங்காதபோதும், முதல் ஆறு இடங்களுக்குள் வருவேன்” என்று சொல்லும் ஆனந்தலட்சுமி, 35 வயதைக் கடந்த பின் முதல் முறையாக கடந்த 2004-ம் ஆண்டு மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நடத்தப்படும் மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். யார் வேண்டுமானாலும் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
ஊக்கப்படுத்திய பரிசுகள்
அதில் 2000 மீட்டர் தடை தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் கலந்துகொள்வார் ஆனந்தலட்சுமி. கடந்த 2004, 2005, 2006, 2007, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை அகில இந்திய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். 2010-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டியில் 2,000 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அதுபோல் 400 மீட்டர் தடை தாண்டும் தொடர் ஓட்டத்தில் 2-வது இடத்தையும் ஈட்டி எறிதல் போட்டியில் 3-வது இடத்தையும் பிடித்தார்.
“இந்தப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர். அத்தனை போட்டியாளர்களை நினைத்து நான் கவலைப்படவில்லை. எனது கவனம் வெற்றியில் மட்டுமே இருந்தால், பதக்கம் வெல்ல முடிந்தது. சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றிபெற்று வந்தபோது பெற்றோர் பாராட்டினர். என் கணவர் சேகர் ஊக்கம் அளிப்பது எனக்குப் பக்கபலமாக இருக்கிறது. பிற மாநிலங்களில் இதுபோல் தடகளப் போட்டியில் வெற்றி பெறும் காவல் துறையினருக்கு ஊதிய உயர்வில் மட்டுமின்றி பதவி உயர்விலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்தினால், காவல் துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்’’ என்கிறார் ஆனந்தலட்சுமி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago