காலம் காலமாகச் சமூகத்தால் மிகவும் மோசமாகப் பார்க்கப் படுபவர்கள் பாலியல் தொழிலாளர்கள். சமூகம், குடும்பம், வாழ்க்கை போன்றவை தரும் நெருக்கடிகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் வேறுவழியின்றி பாலியல் தொழிலாளர்களாக மாறுகிறார்கள். இது தனிப்பட்ட பிரச்சினையல்ல, சமூகத்தின் பிரச்சினை என்ற புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை.
மற்ற எந்தத் தொழிலைவிடவும் பாலியல் தொழில் ஆபத்துகள் நிறைந்தது. பால்வினை நோய்கள், உயிர் குடிக்கும் எய்ட்ஸ் போன்றவை எந்த நேரத்திலும் தாக்கலாம். வாடிக்கையாளர்களின் நாகரிகமற்ற நடத்தை, உடல் மீது தொடுக்கும் வன்முறை, இடைத்தரகர்களின் மிரட்டல், காவல் துறையினரின் நடவடிக்கைகள், சமூகத்தின் பார்வை என்று பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.
பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2-ம் தேதி உலகப் பாலியல் தொழிலாளர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
‘எவ்வளவோ தொழில் இருக்க, பாலியல் தொழில்தான் செய்யணுமா?’ என்ற கேள்வி பெரும்பாலா னோருக்கு இருக்கிறது. தான் ஒரு பாலியல் தொழிலாளியாக வேண்டும் என்று விரும்பி எந்தப் பெண்ணும் இந்தத் தொழிலுக்கு வருவதில்லை. தாங்க முடியாத வறுமை, வலுக்கட்டாயமாகப் பிறரால் தள்ளப்படுதல், ஆள் கடத்தல், ஆண்களால் ஏமாற்றப் பட்டவர்கள் போன்ற பல காரணங்களால்தான் பெண்கள் இந்தத் தொழிலுக்கு வந்துசேர்கிறார்கள். ஒருமுறை இதற்குள் தள்ளப்பட்டு விட்டால், அவர்கள் மீண்டு வெளிவருவது அத்தனை எளிதான விஷயம் இல்லை. அப்படியே வருபவர்களையும் இந்தச் சமூகம் இன்முகத்துடன் வரவேற்பதில்லை.
பதின்ம வயதில் காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறினார் கயல். யாரை நம்பி வெளியேறினாரோ, அவர் இரண்டே மாதங்களில் ஏமாற்றிச் சென்றுவிட்டார்.
“நான் பிறந்து வளர்ந்தது வேறு இடம். காதலன்தான் என் உலகம் என்ற எண்ணத்தில் வீட்டைவிட்டு வந்தேன். ஆனால் என்னை அநியாயமாக ஏமாற்றிவிட்டான். வேலைக்காக நான் ஏறி, இறங்காத கடைகள் கிடையாது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்தபோது ஒரு தோழி அறிமுகமானாள். பாலியல் தொழிலை அறிமுகப்படுத்தினாள். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் சொந்த ஊருக்குப் போய் விடலாம் என்று நினைத்து தொழிலில் இறங்கினேன். ஊருக்குப் போனால் உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் வந்துவிட்டது. மீண்டும் நடுத் தெருவில் நின்றால் என்ன செய்வது? ஏற்கெனவே அனுபவித்த பசியும் அவமானமும் இந்தத் தொழிலிலை விட்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. வெளியே சென்றவர்களுக்கும் யாரும் வேலை தரவில்லை. வீட்டு வேலைக்குப் போகலாம் என்றால், அந்த வீட்டு ஆண், மனைவி இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுக்கிறார். மறுத்தால் வேறு ஏதாவது காரணம் சொல்லி வேலையிலிருந்து அனுப்பிடுறாங்க” என்று வேதனையைக் கொட்டுகிறார் கயல்.
பெண்களுக்கு அடுத்தபடியாக பாலியல் வன்முறைக்கு ஆளாகிறவர்கள் திருநங்கை கள். தற்போது திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்களைத் திருநங்கையாக உணர்ந்த ஒவ்வொருவரும் குடும்பத்தினரால் துரத்தப்பட்டிருக்கிறார்கள். அல்லது தங்களைப் புரிந்துகொள்ளாத வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்தவர் தனலட்சுமி.
“இப்பவே திருநங்கைகளுக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டேங்கிறாங்க. அந்தக் காலத்துல சொல்லவா வேணும்? எங்களுக்குப் படிப்பு கிடையாது. வீட்டு வேலைகூட கொடுக்க மாட்டாங்க. அப்போ நாங்க வாழ என்னதான் செய்யறது? பாலியல் தொழில்தான் வருமானத்தைக் கொடுத்தது. அதே சமயம் பல பிரச்சினைகளையும் கொண்டுவந்து சேர்க்குது. ரௌடிகள், போலீஸ் பிரச்சினைகள் ஒருபக்கம், கஸ்டமர் பிரச்சினை இன்னொரு பக்கம். ஒரு கஸ்டமர் என்னைக் கூட்டிட்டுப் போய் சிகரெட்டுல சூடு வச்சான். உடைகளைக் கழற்றிவிட்டு வீட்டு வேலைகளைச் செய்ய வச்சான். தாங்க முடியாத வலி, அவமானம். அவன் என்னை மனுசியாவே நினைக்கலை. அங்கிருந்து என்னால வெளியேறவும் முடியலை. மூணு நாளைக்குப் பிறகு தெரியாத ஊரில் இறக்கி விட்டுட்டுப் போயிட்டான்” என்று சொல்லும்போதே தனலட்சுமியின் உடல் பயத்தில் நடுங்குகிறது, கண்ணீர் பெருகுகிறது.
“பாலியல் தொழிலாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்னு பலர் நினைக்கிறாங்க. ஆனால் பல வாடிக்கை யாளர்கள் பணம் கொடுக்காமல் எங்களை மிரட்டிட்டுப் போயிடறாங்க. பல பேருடன் உறவு கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் வாடிக்கையாளர்களும் உண்டு. ஆணுறை அணிய மாட்டேன்னு சொல்ற வங்களும் இருக் காங்க. இடைத்தரகர்கள் சொல்லும் பேச்சைக் கேட்காவிட்டால் பணம் கிடைக்காது. இல்லையென்றால் போலீஸிடம் அவங்களே எங்களை மாட்டி விட்டுடுவாங்க. ஆள் கடத்தல் மூலமாகப் பாலியல் தொழிலுக்கு அழைத்து வரப்படும் பெண் குழந்தைகளும் பெண்களும் தங்கள் வாழ்நாளில் பல இடைத்தரகர்களிடம் கைமாறுகிறார்கள்” என்கிறார் பானு.
பாலியல் தொழிலாளர் மத்தியில் பணியாற்றிவரும் தென்னிந்திய எய்ட்ஸ் செயல்திட்ட அமைப்பின் மேலாளர் தாரணி, “எங்கள் அமைப்பின் ஆய்வின்படி குடும்ப வறுமையால் பல பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலிலிருந்து வெளியே வருபவர்களையும் மீண்டும் அதே தொழிலுக்கு இழுத்துவிடுகிறார்கள். ஆணும் பெண்ணும் விரும்பி உறவு வைத்துக்கொள்வதில் தவறில்லை என்கிறது சட்டம். ஆனால் இடைத் தரகர்கள், கடத்தல்காரர்களால் கட்டாயப் படுத்தி இந்தத் தொழிலைச் செய்ய வைப்பது சட்டப்படி குற்றம்” என்கிறார்.
ஒவ்வொரு மனிதருக்கும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான உரிமை நிலைநாட்டப்படும்போதுதான் சமூக மாற்றம் நிகழும். அதுவரை பாலியல் தொழிலாளர்களைச் சக மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம்.
(கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago