புது பூமி புது அனுபவம்: அடையாளத்தை மறக்கவைத்த தாய்லாந்து!

By எஸ். சுஜாதா

தாய்லாந்து செல்கிறோம் என்றதும் நண்பர்கள் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது. சிலர் ‘தாய்லாந்துக்கா’ என்று கேட்கவும் செய்தார்கள். தாய்லாந்து குறித்து முழுமையாக அறியாமல் பயணத்தைத் திட்டமிட்டுவிட்டோமோ என்ற சிந்தனையில் அந்த மண்ணில் இறங்கினோம். ஆனால், அங்கே அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் காத்திருந்தன!

அதிகாரிகள், பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனைப் பிரதிநிதிகள், பேருந்து ஓட்டுநர்கள், சமையல் கலைஞர்கள், பரிசாரகர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மசாஜ் செய்பவர்கள், பைக் விமன் என்று எங்கு பார்த்தாலும் பெண்கள். எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். தாய்லாந்தில் ஆண்களைவிடப் பெண்களின் தொகை சற்றே கூடுதல் என்பதாலும், அந்தப் பெண்களில் 47% பேர் வேலை செய்கிறார்கள் என்பதாலும் எங்கு நோக்கினாலும் பெண்களாகத் தெரிந்தார்கள்.

ஏன் வேலை?

ஆசியாவிலேயே முதலாவதாக 1932-ம் ஆண்டில் வாக்குரிமையைப் பெற்றவர்கள் தாய்லாந்துப் பெண்கள். வேலைகளில் பெண்கள் நிறைந்திருந்தாலும், அரசியலிலும் உயர் பதவிகளிலும் பெண்களின் பங்களிப்பு இன்றைக்கும் குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளின் கல்விக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதே ஆண்களும் பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. பெரும்பாலான பெண்கள் ஓரளவு படித்துவிட்டுச் சிறிய வேலைகளுக்குச் சென்றுவிடுவதால், ஆணுக்கும் பெண்ணுக்குமான வருமானத்தில் பாகுபாடும் நிலவுகிறது.

ஆடையும் வசதியும்

அளவான உயரத்தில் ஒல்லியாக இருக்கும் பெண்கள், நேர்த்தியாக உடையணிந்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்களின் விருப்பமான உடை ஷார்ட்ஸும் டாப்ஸும். அதேநேரம் ஜீன்ஸ், மிடி என்று எந்த உடையை அணிந்தாலும் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது!

‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்று ஞானம் பெற்ற புத்தரை, விதவிதமாகத் தங்கத்தில் செய்து வைத்துவிட்டு, தங்கத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள் தாய்லாந்து பெண்கள். எளிமையான வெள்ளித் தோடுகளை அணிகிறார்கள். ஒரு சிலர் வெள்ளி வளையல் போன்றவற்றை அணிகிறார்கள். சுற்றுலா வரும் வெளிநாட்டினர்தான் தாய்லாந்தின் புகழ்பெற்ற தங்க நகைகள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

உடையை வைத்தோ, அலங்காரத்தை வைத்தோ பெண்களிடம் வர்க்க பேதத்தைச் சட்டென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாரியாக இருப்பவரும் தேநீர் விற்பவரும் நேர்த்தியாக உடுத்தியிருக்கிறார்கள். சாலையோரத்தில் இரண்டு பெண்களை வெவ்வேறு இடங்களில் பார்த்தபோது, அவர்கள் யாசகம் கேட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்று தோன்றவேயில்லை. ஒரு சிலர் நாணயங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றதை வைத்துதான், யாசகர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் முகத்திலோ உடையிலோ வறுமையும் அழுக்கும் தெரியவில்லை. பணமோ கல்வியோ அங்கு பெண்களுக்கிடையே வேறுபாடுகளை உண்டாக்கவில்லை என்ற விஷயம் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஒருசேர அளித்தது.

நாகரிகமும் சகிப்புத்தன்மையும்

பெண்கள் மென்மையாகப் பேசுகிறார்கள். கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள். பொறுமையாக நடந்துகொள்கிறார்கள். தெரியாதவர்களைக்கூட நேருக்கு நேர் சந்திக்கும்போது சிறிய புன்னகையை உதிர்க்கிறார்கள். அநியாயமாகப் பேரம் பேசுபவர்களிடம்கூட எதிர்வாதம் செய்யாமல், அமைதியாகப் பேசுகிறார்கள். அவர்கள் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கும் பவுத்த நெறிகளிலிருந்து நாகரிகமும் சகிப்புத்தன்மையும் இவர்களிடத்திலும் வந்திருக்கலாம். நாட்டில் 85% பேர் பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள்.

வாக்கிங் ஸ்ட்ரீட்

கடற்கரை நகரமான பட்டயா பற்றிச் சிறு அறிமுகம் கொடுத்தார் எங்கள் வழிகாட்டி. ‘இது தூங்கா நகரம். இங்கு பெரும்பாலான கடைகள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஷாப்பிங் செய்யலாம். வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்குள் ஆண்கள் செல்லலாம். இந்தியப் பெண்கள் தவிர்க்கலாம்’ என்று சொல்லி மார்க்கெட் பகுதியில் இறக்கிவிட்டார்.

வேடிக்கை பார்த்துக்கொண்டே வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். அதற்குப் பிறகுதான் வழிகாட்டி எதற்காக அப்படிச் சொன்னார் என்பதும் தாய்லாந்து என்றதும் எப்போதும் தோன்றும் மர்மப் புன்னகைக்கான காரணமும் புரிந்தது. இரு பக்கங்களிலும் மது விடுதிகள், காபரே நடன விடுதிகள். ஒவ்வொரு விடுதியின் வாயிலிலும் குறைந்த உடையோடு இன்முகத்துடன் பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சில நிமிடங்களுக்குள் திரும்பிவிட்டோம்.

மேஜிக்கைத் தேடி

அடுத்த நாள் குழந்தைகளுக்காக டர்கிஷ் மேஜிக் ஐஸ்க்ரீமைத் தேடி இரவு பத்து மணிக்கு புறப்பட்டோம். நகர் முழுவதும் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மேஜிக் ஐஸ்க்ரீம் கடை வாக்கிங் ஸ்ட்ரீட்டில் இருக்கிற விஷயம் தெரியவந்தது. அந்தத் தெருவுக்குள் நுழைந்தோம். முதல் நாள் இருந்த தயக்கம் இல்லை.

புன்னகையுடன் வரவேற்ற துருக்கிகாரர் தாடியிலும் உடையிலும் வித்தியாசமாகத் தெரிந்தார். இப்படி அப்படி என்று கோனைக் கவிழ்த்து, விளையாட்டு காட்டி குழந்தைகளிடம் ஐஸ்க்ரீமைக் கொடுத்தார். சுவைத்துக்கொண்டே டாக்ஸி மூலம் தவறான இடத்துக்குச் சென்றுவிட்டோம். மீண்டும் நீண்ட தூரம் நடந்தோம். எல்லோருக்கும் கால் வலி, கால் மசாஜ் செய்தால் தேவலாம் போலிருந்தது. அப்போது இரவு பதினோரு மணி. மசாஜ் பார்லர் மூடும் நேரம் என்றாலும், அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் மசாஜ் செய்யத் தயாரானார்கள். மணி 12 ஆனாலும் மசாஜ் செய்துவிட்ட பெண்களிடம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பதற்றம் இல்லை. வீட்டு வேலைகளையும் குழந்தைகள் பராமரிப்பையும் ஆண்களும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதால்தான் இந்த நிதானம். நாங்கள் பன்னிரண்டரை மணிக்கு விடுதிக்கு வந்துசேர்ந்தோம்.

அரிய அனுபவம்

மொழி தெரியாத, ஓர் அந்நிய தேசத்தில் பெண்களும் குழந்தைகளுமாக நள்ளிரவில் தனியாகச் சுற்றிவிட்டு வர முடிந்ததை நினைத்து அனைவருக்கும் விவரிக்க இயலாத மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயம் எங்களில் யாரும் இந்தியாவின் எந்த நகரத்திலும் இப்படியோர் உலா செல்வது பற்றி யோசித்திருக்கக்கூட மாட்டோம். பாலியல் தொழிலாளர்கள் நிறைந்திருந்த தெருக்களிலும் மதுவும் காபரேவும் ஆக்கிரமித்த வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்குள்ளும் நள்ளிரவில் பெண்கள் மட்டுமே சென்று திரும்பியிருந்தோம்.

இருந்தும் மோசமான பார்வையோ, அநாகரிகமான பேச்சோ, கிண்டலோ, உரசலோ எதுவும் இல்லை. கண் சிவக்கக் குடித்துவிட்டு, நாற்றத்துடன் தள்ளாடும் மனிதர்களைப் பார்க்க முடியவில்லை. சிறு தயக்கமோ, பயமோ இல்லாமல் எங்களால் இயல்பாகச் சென்றுவர முடிந்தது என்றால், அங்கே பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது புரிந்தது.

வாழ்நாளில் பெண் என்ற அடையாளத்தை மறந்து, மனிதன் என்ற அடையாளத்துடன் தாய்லாந்தில் கழிந்த அந்த நாட்கள் அபூர்வமானவை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்