நாடு போற்றும் நெல்லை விவசாயி

By ஆதி வள்ளியப்பன்

அமலராணி ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி. கணவர் டாக்டர். மகனும் மகளும் டாக்டருக்குப் படிக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவிக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

ஆனால், அமலராணி திருப்தி அடையவில்லை.

தேசிய அளவில் பலரும் விவசாயத் தொழிலை கௌரவக் குறைச்சலாகக் கருதும் நிலையில் அதை அக்கறையுடன் மேற்கொண்டுவருவது மட்டுமில்லாமல், தேசிய விருதும் பெற்றுச் சாதனை படைத்தவர் திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி தி. அமலராணி.

உணவு உற்பத்தியில் மாநில அளவில் சாதனை படைக்கும் தலா ஒரு ஆண், ஒரு பெண் விவசாயிக்கு கிருஷிகர்மான் விருதும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் மகசூல் சாதனை படைத்ததற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இந்த ஆண்டு இவ்விருதைப் பெற்றுள்ளார் அமலராணி. 2011-12ஆம் ஆண்டு பிசானப் பருவத்தில் ஹெக்டேருக்கு 18,143 கிலோ நெல் உற்பத்தி செய்ததுதான் இவருடைய சாதனை. சிவகரி வட்டம் ராமநாதபுரம், அருளாச்சி பகுதிகளில் இவர் விவசாயம் செய்துவருகிறார்.

ஒரு பட்டதாரியாக இருந்தும், அலுவலகத்துக்குப் போய் வேலை பார்ப்பதைப் பற்றி நினைக்காமல் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு எப்படி ஏற்பட்டது?

“என் குடும்பமும் என் கணவர் குடும்பமும் காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் குடும்பங்கள். சின்ன வயசிலேயே எனக்கு விவசாயத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.

எங்களுடைய ஆச்சி (பாட்டி) வெள்ளைத்தாய் சின்ன வயசில் இருந்தே வயலுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார். அந்தக் காலத்தில் கமலையில் தண்ணீர் இறைத்துத்தான் விவசாயம் செய்ய வேண்டும். ஒரு முறை கமலையில் தண்ணீர் இறைக்கும் ஒரு மாடு இறந்துவிட்டது. அப்போது அவரும் அவருடைய தங்கச்சியும் வைராக்கியத்துடன் கமலையில் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்வதை நேரில் பார்த்தேன். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோதுகூட விவசாயத்தைப் பற்றித்தான் ஆச்சி விசாரித்துக்கொண்டிருப்பார்.

அந்தக் காலப் பாட்டிகளிடம் மண் மீதான பாசமும் பிடிப்பும் அதிகம். அவரைப் போன்றவர்களிடம் இருந்துதான் இந்த மண், விவசாயம் மீதான பிடிப்பு எனக்குத் தீவிரமானது. எனது கணவர் டாக்டராக இருந்தாலும்கூட, அவருக்கும் விவசாயத்தின் மீதுதான் பிரியம்.

ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு பயிர் நன்றாக விளையும். அந்தப் பயிரை வளர்த்து, அதிக மகசூலைப் பெற முயற்சிக்க வேண்டும். விவசாயம் இல்லையென்றால், யாருக்கும் சாப்பாடு கிடைக்காது. எந்த வயிறும் காயக் கூடாது என்பதே ஒவ்வொரு விவசாயியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

விளைநிலங்கள் வீடுகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஒரு நிலம் மூணு ஆண்டு தரிசாகக் கிடந்தால், அதை வீட்டு மனையாக்கி விற்றுவிட நினைக்கிறார்கள். ஒருபுறம் மக்கள்தொகை அதிவேகமாகப் பெருகிவருகிறது, மறுபுறம் விவசாயம் சுருங்கிவருகிறது. இப்படியே போனால் மக்கள் பஞ்சத்தில் சிக்கும் கொடுமை சீக்கிரம் வந்துவிடும். இன்றைய நிலையில் விவசாயம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகள் கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல் போவதும் தண்ணீர் பிரச்சினையும்தான். அதைச் சமாளித்துத்தான் விவசாயத்தை பார்த்துவருகிறோம்.

நான் சாதனையான திருந்திய நெல் சாகுபடி முறை முக்கால்வாசி இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். கொஞ்சம் செயற்கை விவசாய முறைகளும் அதில் பயன்படுத்தப்படுகின்றன. விவசாய அதிகாரிகள் தரும் பரிந்துரைகளை பின்பற்றியும் தேவைப்படும்போது ஆலோசனைகளைக் கேட்டும் செயல்படுகிறோம்.

ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருப்பதன் மூலம், நம்மை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடிகிறது” என்றார் அமலராணி.

சரி, உங்களுக்கு விவசாயத்தில் இருக்கும் ஆர்வத்தைப் போல உங்கள் குழந்தைகளுக்கும் இருக்கிறதா என்று கேட்டால், “இப்போது அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார்கள். எங்களைப் போல அவர்களுக்கும் விவசாயத்தில் நிச்சயம் ஆர்வம் இருக்கும். விவசாயத்தை மேற்கொள்ளும் அக்கறையை அவர்களிடமும் விதைப்போம்,”என்கிறார் நம்பிக்கையுடன்.

எல்லா அம்மாக்களும் விதைக்க வேண்டிய விதைதான் அது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்