பெண்களுக்குத்தான் எத்தனை வேலை! அடுப்பில் பால் பொங்கும், குழந்தை ஒரு பக்கம் ‘வீல் வீலென்று’ கத்தும், இதற்கு நடுவில் சமையல் வேலைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும், ஒரு உதவிக்காகத் தங்கள் கணவன்மார்களிடம், “என்னங்க கொஞ்சம் இந்தக் காய்கறிகளை நறுக்கித் தாங்களேன்” என்று கேட்டால், ஹாயாக பேப்பர் படித்துக்கொண்டே, தொலைக்காட்சி சத்தத்தை இன்னும் கூட்டுவார்கள். இதுதான் பல வீடுகளில் அன்றாட நிலை.
வீட்டு வேலை என்றால் அது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்ற நிலை இன்னமும் நீடிக்கிறது என்பதுதான் யதார்த்தம். “எனக்குத் திருமணமாகி 22 வருஷங்கள் ஆகிவிட்டன, வீட்டு வேலைகளை எல்லாம் நான்தான் பார்த்துக்கொள்வேன், என் கணவர் காய்கறிகள் வாங்கிக் கொடுப்பது, மளிகை பொருட்கள் வாங்கித் தருவது போன்ற வெளி வேலைகளை மட்டும்தான் செய்வார்” என்று தன் நிலவரத்தைப் பற்றிக் கூறுகிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல்லத்தரசி கல்பனா.
மனைவிக்கு உதவிசெய்யும் எண்ணம் இருந்தாலும் வீட்டு வேலைகளில் கணவர் தலையிடுவதில்லை. “அவர் வீட்டு வேலை எல்லாம் பார்க்க மாட்டார். நானும் அவரை எதிர்பார்க்க மாட்டேன்” என்று சொல்லும் கல்பனா, வீட்டு வேலை செய்வதெல்லாம் ஒரு பெரிய பாரமாகத் தனக்குத் தெரிந்ததில்லை என்கிறார்.
“வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டதால் வீட்டு வேலை பார்ப்பதெல்லாம் எங்கள் கடமை என்று சொல்லியே வளர்த்துவிட்டார்கள். ஆனால் என் குழந்தைகளை அப்படிச் சொல்லி வளர்ப்பதில்லை, வெளியே போய் நாலு விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே சொல்வேன்” என்று வீட்டு வேலைகள் பார்ப்பதெல்லாம் பெண்களின் கடமை என்பதை முற்றிலுமாக ஏற்றுக்கொண்ட மனநிலையில் பேசுகிறார்.
நகரத்தில் வாழும் சிலருக்கு வீட்டு வேலை பார்ப்பதில் கொஞ்சம் சுதந்திரம் இருப்பதாகவும், ஏதோ குறைந்தபட்ச வேலையிலாவது ஆண்கள் பங்குபெறுகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இதை முற்றிலும் எதிர்க்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த வைதேகி. “நகரத்தில் வாழ்பவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வியோடுதான் பேசவே ஆரம்பிக்கிறார், “இங்கும் அதே நிலைதான், அவர் சமையலறை பக்கம் எட்டிப் பார்த்ததுகூடக் கிடையாது,
விடுமுறை நாட்களில் விதவிதமாகச் சமைக்க வேண்டும். ஆனால், உதவியை மட்டும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாது” என்று சலித்துக்கொள்கிறார். பல வீடுகளில் கேட்கும் அக்மார்க் புலம்பலைத்தான் இவரும் முன்வைக்கிறார், “ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் என் கணவர் வீட்டில் இருப்பார். அன்று அவரை வேலைவாங்கவும் முடிவதில்லை. ஏதேனும் உதவி கேட்டால் ‘வீட்டுலயும் நிம்மதி இல்லை ஆபிஸிலும் நிம்மதியில்லை’ என்று எரிந்து விழுவார், நானும் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துவிடுவேன்” என்கிறார் வைதேகி.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில வீடுகளில் ஆண்களும் வேலை பார்க்கிறார்கள், இருப்பினும் பெரும்பாலான பெண்கள் அவர்களின் உதவியை எதிர்பார்ப்பதில்லை. அதற்கான காரணத்தைச் சொல்கிறார், மதுரையில் இருக்கும் தனியார் பள்ளியின் முதல்வரான சுந்தராம்பாள். “அவர்கள் வீட்டு வேலை செய்வார்கள். ஆனால், அதில் ஒரு சுத்தம் இருக்காது. ஒரு வேலை செய்வதற்குள் நமக்குப் பத்து வேலை வைத்துவிடுவார்கள். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் அவரே வந்து வேலை செய்தாலும் நான் விடுவதில்லை” என்று சொல்கிறார் அவர்.
ஆண்களுக்கு வீட்டு வேலை பார்ப்பது கடினமான செயலாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. காரணம், நம் வளர்ப்பு முறை என்பதைப் பலரும் பிரதிபலிக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் ஆண்களும் பெண்களும் விளையாடும் விளையாட்டுக்களின் தேர்வு, செய்யும் வேலைகளின் பிரிவு என்று பல அம்சங்களைத் தொட்டு இதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் சுகந்தி இந்தப் போக்கைப் பற்றிக் கவலை தெரிவிப்பதுடன் மாற்றுக்கான யோசனைகளையும் முன்வைக்கிறார். “மிகவும் குறைந்த சதவீதத்தில்தான் வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குபெறுகிறார்கள். அதுவும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களிடம் மட்டும்தான் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. மின்சார ரயில்களில் பயணிக்கும் எவ்வளவோ பெண்கள் கீரையை சுத்தம் செய்துகொண்டும், காய்கறிகளை நறுக்கிக்கொண்டும் பயணிப்பார்கள். ஏதாவது ஒரு ஆண் அப்படிச் செய்து நாம் பார்த்திருக்கிறோமா ?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
பெண்களின் உழைப்புக்கு இன்றுவரை மதிப்பு தரப்படுவதில்லை என்றே சொல்ல வேண்டும். வீட்டு வேலைகளில் அதிக கவனமும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் பெண்களே. ஆனால், அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் ஒவ்வொரு வீட்டிலும் வழங்கப்படுவதில்லை. எனினும் காதல் திருமணம் செய்துகொண்டவர்களிடம் இயல்பாகவே வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருப்பதாகச் சொல்கிறார் சமூக ஆர்வலர் ஹேமாவதி, “நகரத்தில்தான் ‘ஷேரிங்’ என்னும் பழக்கம் கூடியிருக்கிறது,
கிராமப்புறங்களில் இன்னமும் வீட்டு வேலை பார்ப்பது பெண்கள்தான். இதற்குக் காரணம் நம் வளர்ப்பு முறை, ஆண்களுக்கு அதிக சுதந்திரமும், பெண்களுக்கு அளவான சுதந்திரமும் கொடுத்து வளர்த்துவிட்டார்கள். ஆண் இந்தந்த வேலைகள்தான் செய்ய வேண்டும் என்ற பாகுபாட்டையும் ஊட்டிவிட்டார்கள்” என்று சொல்கிறார்.
வீட்டு வேலை என்ற சிறிய வட்டத்துக்குள் பெண்களை அடைக்க நினைப்பது மிகவும் தவறான எண்ணம். நம் பெற்றோர்களின் காலத்தை மாற்ற முடியாது. என்னதான் ‘மாறுங்கள், மாறுங்கள்’ என்று நாம் அவர்களைச் சொன்னாலும், ஒன்றும் மாறப் போவதில்லை. அப்பாவுக்குப் பணிவிடை செய்வதே நம் அம்மாக்களுக்கு அவர்கள் அம்மா சொல்லிக்கொடுத்த முக்கியமான கடமை!
இன்றைய தலைமுறையாவது மாற வேண்டும், அப்படியொடு மாற்றம் ஏற்பட ஆண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மனைவி சமைத்தால் கணவர் காய் நறுக்கிக் கொடுக்கலாம், அல்லது குழந்தைகளையாவது பார்த்துக்கொள்ளலாம். மனைவி கேட்பதெல்லாம் கொஞ்சம் ஒத்துழைப்பு மட்டும்தான். அந்த ஒத்துழைப்பை அன்பாகக் கொடுத்தாலே மகிழ்ச்சியான, சமத்துவமான குடும்பங்களாக நம் குடும்பங்கள் மாறும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago