வாத்தியத்தில் சாதிக்கும் சகோதரிகள்

கர்நாடக இசைக்கு மட்டுமே உரிய சிறப்பு, அதன் கமகங்கள். மாண்டலின் தந்திகளில் அதிர்வு அதிகம். கை நிறையக் காசுகளைக் கீழே கொட்டியது போல் தெறிக்கும் ஒலி. தந்தியைக் கட்டுப்படுத்தி அதில் தகுந்த கமகத்தைக் கொண்டு வருவது பெரிய சவால். கம்பிகளை அழுத்திப் பிடித்து வாசித்து, விரல்கள் கன்னிப் போகும். ஆனால் இந்தச் சவால்களைச் சமாளித்து, கர்நாடக இசையை, மாண்டலின் மூலம் ஒலிபரப்பிவருகிறார்கள் மாண்டலின் சகோதரிகள்.

ஐந்து தந்திகளை உடைய மாண்டலின் வாத்தியத்தில் அட்சரச் சுத்தமாகக் கர்நாடக இசையை வெளிப்படுத்தியவர் மாண்டலின் யூ. ஸ்ரீனிவாஸ். அவரையே தங்களின் முன்னோடியாகக் கொண்டு மாண்டலின் வாத்தியத்தைத் தங்களின் கைவசமாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஸ்ரீஉஷா, ஸ்ரீஷா சகோதரிகள்.

இவர்களின் தந்தை திரிமூர்த்தலு கித்தார் வாத்தியக் கலைஞர். இவரிடம் பாலபாடம் படித்த பின், முறையான சங்கீத பாடத்தை வித்துவான் ருத்ரராஜு சுப்பராஜுவிடம் சகோதரிகள் பயின்றனர். இவர்தான் மாண்டலின் யூ. ஸ்ரீனிவாஸின் குரு. அதன்பின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வித்துவான் செங்காலிபுரம் எஸ்.வி. ராமமூர்த்தி அய்யரிடம் தொடர்ந்து பயிற்சி செய்துவருகின்றனர்.

ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைச் சென்னையின் முக்கிய சபாக்களிலும் டெல்லி, மும்பையிலிருக்கும் சண்முகானந்த சபா, கொல்கத்தா ரசிக ரஞ்சனி சபாவிலும், வெளிநாடுகளிலும் மாண்டலின் சகோதரிகள் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர்.

மாண்டலினில் கர்நாடக இசையை வாசிப்பதற்காகத் தேசியக் கலாச்சார மையத்தின் உதவித்தொகையைப் பெற்று வருகின்றனர். மேலும் பார்த்தசாரதி சுவாமி சபா, கிருஷ்ணக் கானச் சபாவின் சிறந்த வாத்திய இசைக் கலைஞர்களுக்கான விருதைப் பெற்றிருக்கின்றனர். மும்மூர்த்திகள், அன்னமாச்சார்யா, புரந்தரதாசர் ஆகியோரின் சாகித்யங்களை மாண்டலினில் வாசித்து, விரைவில் ஒரு ஆல்பம் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE