பருவத்தே பணம் செய்: பங்குச் சரிவையும் சமாளிக்கலாம்

By சி.முருகேஷ்பாபு

நம் பொருளாதார நிலைமை எப்படி இருந்தாலும் நம்மால் மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்க முடியும் என்பதுதான் அந்த முதலீட்டு வாய்ப்பின் சிறப்பம்சம். நம்மால் அதிக அளவு ஆபத்துகளைச் சந்திக்க முடியும் என்ற நிலையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பது மட்டுமல்ல, அதற்குள்ளேயும் பல திட்டங்கள் இருக்கின்றன.

பங்குச் சந்தையில் பொதுவாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டும் இருக்கும். குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் இருக்கும். பங்குச் சந்தையில் எப்போதுமே எல்லா நிறுவனப் பங்குகளும் மேல் நோக்கிய பயணத்தில் இருக்காது. சந்தை உச்சத்தில் இருக்கும் நேரத்தில்கூடச் சில துறைகள் இறங்குமுகமாக இருக்கும். நாம் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் அந்த வகை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால் நம் முதலீடு வளரக் கொஞ்சம் சிரமப்படும்.

அதனால் எந்தத் துறை சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து, அதில் முதலீடு செய்யும் துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நம் முதலீட்டைச் செய்தால் எளிதாக லாபம் பார்க்கலாம்.

எது சிறப்பான திட்டம்?

நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனித்தாலே போதும். சாலை அமைக்கவும் பாலங்கள் கட்டவும் அரசாங்கம் அதிக அளவில் திட்டமிட்டால் கட்டுமானத் துறை நிறுவனப் பங்குகள் உச்சம் தொடும் என்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல வங்கி நடவடிக்கைகள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்த உடனேயே வங்கித் துறை நிறுவனங்கள் நல்ல நிலைமைக்கு வரும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இதேபோல ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், சிமென்ட் என்று எல்லாத் துறைகளுக்குமே நல்ல காலம் எது என்பதை கொஞ்சம் ஊன்றிப் பார்த்தால் நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். அப்படி ஏற்றம் பெறும் துறைகள் எவை என்பதைக் கணித்து முதலீடு செய்யலாம்.

இந்தத் துறைகளைக் கணித்து நேரடியாகப் பங்குச் சந்தையிலேயே முதலீடு செய்யலாம். அதிக லாபம் கிடைக்கும் நிலை அதில் உருவாகும். ஆனால், அதைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் அளவு நமக்கு நேரம் இல்லாதபோது, நாம் இதுபோன்ற துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

எப்படி முதலீடு செய்வது?

கையில் உள்ள மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்துவிட்டால் சில நேரம் சிக்கலில் மாட்டிக்கொள்வோம். நாம் வாங்கும் நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் யூனிட் விலை அதிகமாக இருந்திருக்கலாம். நாம் வாங்கிய கொஞ்ச நாளில் விலை குறைந்துபோகலாம். அப்போது நாம் செய்த முதலீடு நஷ்டத்தைக் காட்டும்.

இதுவே, நாம் யூனிட்டின் விலை அதிகமாக இருக்கும்போது கொஞ்சம் வாங்கி வைத்துக்கொண்டு, கொஞ்ச காலம் கழித்து விலை குறையும்போது இன்னும் கொஞ்சம் வாங்கி அதை ஆவரேஜ் செய்யலாம். அப்போது நம் முதலீட்டின் மீது பெரிய பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் யூனிட்டுகளும் அன்றைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை மாறிக்கொண்டேதான் இருக்கும். சந்தையில் ஏற்றம் இருந்தால் யூனிட் விலையிலும் ஏற்றம் இருக்கும். சந்தையில் சரிவு இருந்தால் யூனிட் விலையும் சரிந்துதான் இருக்கும். அப்படி இருக்கும்போது உச்சத்தில் சந்தை இருக்கும் நேரத்தில் நாம் வாங்கி வைத்து அடுத்த நாளே சரிந்துவிட்டால் முதலீடும் சரிந்து போய்விடும். அந்தச் சூழலைச் சமாளிக்கத்தான் ஆவரேஜ் செய்வது என்று சொன்னேன்.

உங்களிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. அதில் நாலாயிரம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். அப்போது சந்தை உச்சத்தில் இருக்கிறது. யூனிட்டின் விலை 40 ரூபாயாக இருக்கிறது. நீங்கள் 100 யூனிட் வாங்கியிருக்கிறீர்கள். அடுத்த நாள் சந்தை லேசாகச் சரிந்துவிடுகிறது. அப்போது உங்கள் முதலீட்டின் மதிப்பு நாலாயிரம் இல்லை, மூவாயிரம்தான். ஆனால், உங்கள் கையில் 6,000 ரூபாய் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சரிந்த சந்தையில் முதலீடு செய்யலாம்.

முப்பது ரூபாய் என்ற மதிப்பில் 200 யூனிட் வாங்குகிறீர்கள். இப்போது உங்களிடம் 300 யூனிட்டுகள் இருக்கின்றன. முப்பது ரூபாய் என்ற கணக்கில் பார்த்தால் மொத்த மதிப்பு 9,000 ரூபாயாக இருக்கும். சரிவால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் குறைவுதான். அதுவே, அடுத்தநாள் 35 ரூபாயாக யூனிட் விலை மாறினால் லாப திசைக்கு உங்கள் முதலீடு மாறிவிடும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், உங்கள் முதலீட்டை மொத்தமாகச் செய்யலாம், கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு விலையில் வாங்கிக்கொண்டே போகலாம். அப்படிச் செய்யும்போது நம் முதலீட்டில் பெரிய சரிவு ஏற்படாமல் தடுக்க முடியும்.

முதலீட்டைப் பத்திரமாகவும் சிறப்பாகவும் செய்ய இதைவிட எளிமையான அர்த்தமுள்ள வழிகள் உண்டு. அதற்குப் பெயர்தான் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (எஸ்.ஐ.பி). அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்