உழைக்கும் மகளிர் பழைய சோறு, பீட்ஸா - உரிமைகள்?

By எல்.ரேணுகா தேவி

அந்தப் பெண்ணைப் பார்த்தால் வசதியான பெண்ணைப் போலில்லை. ஆனால், பீட்ஸா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் நெருங்கிப் பார்த்தபோது, வீட்டு வேலை செய்பவர் என்று தெரிந்தது. பீட்ஸா சாப்பிடுகிற அளவுக்கு அவரது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதா என்ன? நிச்சயம் இல்லை. நேற்றைய பழைய சாதம், இன்றைய மீந்துபோன பீட்ஸாவாக மாறியிருக்கிறதே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் பெரிதாக மாறவில்லை என்பதே உண்மை.

அழுக்குத் துணிகளையும், எச்சில் பாத்திரங்களையும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் வேலையாள், நாம் கொடுக்கும் பழைய சாதத்தையும், பழைய துணிகளையும் வாங்கிக்கொண்டு போகிறவர்கள்தான் வீட்டு வேலைப் பணியாளர்கள் என்ற மனப்பான்மை பெரும்பாலோரிடம் இருக்கிறது. சமூகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவந்தாலும், வீட்டு வேலைப் பணியாளர்கள் இன்னமும் மோசமான முறையிலேயே நடத்தப்பட்டுவருகிறார்கள்.

சந்திக்கும் பிரச்சினைகள்

வீட்டில் ஒரு பொருள் தொலைந்துவிட்டது என்றால், முதல் சந்தேகம் வீட்டு வேலைப் பணியாளர் மீதுதான் விழுகிறது. சினிமா தொடங்கி, நம்முடைய மனங்களில் இந்த விஷயம் அழுத்தமாகப் பதிந்து போயிருக்கிறது. அதனால் உடனடியாக அவர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்டுவிடுகிறது.

இவர்கள் வேலைக்குத் தாமதமாக வந்தாலோ, அல்லது உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்தாலோ திடீரென்று வேலையை விட்டு நிறுத்தப்படுவது சாதாரணம். இவர்களுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. சில வீடுகளில் குறிப்பிட்ட வேலைக்கு மட்டும் அமர்த்தப்படும் பணியாளரிடம், பல நேரம் மற்ற வேலைகளும் வாங்கப்படும்.

சென்னை போன்ற ஊர்களில் நகருக்குள் இருந்த இவர்களுடைய குடியிருப்புகள் அகற்றப்பட்டு, நெடுந்தொலைவில் இருந்து பணியிடங்களுக்கு வரும் பிரச்சினையை இவர்கள் கூடுதலாகச் சந்திக்கிறார்கள்.

உரிமைகளுக்கான அமைப்பு

வீட்டு வேலைப் பணியாளர்களுக்காக முதன்முதலாக 1985ஆம் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கம், கடந்த 29 ஆண்டுகளாக வீட்டுப் பணியாளர்களுக்கான அங்கீகாரம், நீதி, உரிமை ஆகிய நோக்கங்களை மையப்படுத்திச் செயல்பட்டுவருகிறது.

"இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் நம்முடைய நாட்டில் ‘வீட்டு வேலை' என்பது தொழில் என்கிற வரையறைக்குள் சேர்க்கப்படாமல் உள்ளதால், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் அரசிடம் இன்றுவரை இல்லை" என்கிறார் இந்தச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரி மலர். மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போது தொழில் என்ற இடத்தில் வீட்டு வேலையையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களுடைய எண்ணிக்கையும் முழுமையாகக் கிடைக்கும் என்கிறார் அவர்.

மறுக்கப்படும் உரிமைகள்

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் சார்பாக 2011ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 189ஆவது தீர்மானத்தில், வீட்டு வேலைப் பணியாளர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து நாடுகளின் அரசுகளும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆனால், இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு இன்று வரையிலும் கையெழுத்து போடவில்லை. நாடாளுமன்றத்திலும் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தீர்மானத்துக்குப் பிறகு தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு வீட்டு வேலைப் பணியாளர்களுக்காகத் துணை ஆணையர் கலைவாணி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 30 வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதில் தமிழக அரசின் கவனம் செலுத்தவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது குறைவாக உள்ளதால், அந்த மாநிலங்களில் ஊதிய உயர்வு கோரிப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மத்திய அரசு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தீர்மானத்தை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும், தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வீட்டுப் பணியாளர்களுடைய ஊதியப் பரிந்துரையைச் செயல்படுத்த வேண்டும் என்பது வீட்டு வேலைப் பணியாளர்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் சங்கங்களுடைய கோரிக்கை.

வீட்டு வேலைப் பணியாளர்களிடம் குறைந்தபட்ச அக்கறை காட்டுபவர்கள்கூட, அவர்களுடைய அடிப்படை உரிமையான வேலைக்கேற்ற ஊதியம் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. வீட்டு வேலைப் பணியாளர்கள் எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல, அவர்களுக்கு உள்ள நியாயமான உரிமைகளை. வீட்டு வேலைப் பணியாளர்கள் நமது வீட்டுப் பணிச் சுமையைப் பகிர்ந்துகொள்வதால்தான், நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடாமல் செயல்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்