கோலாப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொழிலாளர்கள் 9 பேர் மீட்கப்பட்டனர். நாற்பதுகளில் இருந்த அந்தப் பெண்களை ‘மறுவாழ்வு இல்ல’த்தில் ஒப்படைத்தனர். அது மட்டுமல்லாமல் அந்தப் பெண்களின் பெற்றோர்களிடமோ குடும்பத்தினரிடமோ அவர்களை ஒப்படைக்கும்படி சொல்லப்பட்டது. அந்தப் பெண்களில் சிலரது பெற்றோர் உயிரோடு இல்லை; சில பெண்கள் பல தசாப்தங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர்கள்; சில பெண்களின் குடும்பத்தினருக்கு அந்தப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரியாது. இப்படிப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு இல்லமாக அலைக்கழிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு ஒரு ஆண்டு ஆயிற்று.
‘நெறிசாரா மனித விற்பனை (தடுப்பு) சட்ட’த்தில் (ITPA) உள்ள குறைகளையெல்லாம் மேற்கண்ட சம்பவம் நமக்குத் தோலுரித்துக் காட்டுகிறதல்லவா! முழுக்க முழுக்கச் சட்டபூர்வமாக இருக்க வேண்டிய விவாதத்தில் ‘நெறிசாரா’ (immoral) என்ற ஒரு வார்த்தையைச் சேர்த்து அறநெறிக்கும் சற்றே இடமளிக்கப்படுகிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் எல்லோருமே மனித விற்பனை காரணமாக அந்தத் தொழிலுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் என்பது போன்றும், அவர்கள் அனைவருமே மீட்கப்பட வேண்டியவர்கள் என்பது போலவும் அர்த்தமாகிறது.
பாலியல் தொழிலாளர்களை அவர்கள் சம்மதம் இல்லமாலேயே மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்பது போலவும் அந்தச் சட்டம் இருக்கிறது. அந்தப் பெண்களை விடுவிக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வருவிக்க வேண்டும் என்பதன் மூலம் அவர்களுக்கு உதவக்கூடிய முகமைகள், அமைப்புகள் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் சட்டம் இருக்கிறது. ‘மீட்பு மற்றும் மறுவாழ்வு’ என்று அன்போடு குறிப்பிடப்படும் நடைமுறைகளே அந்தப் பெண்களுக்குப் பெரும் தண்டனையாகவும் மோசமான அனுபவமாகவும் மாறிவிடக்கூடும்.
தற்போது இருக்கும் சட்டத்திலுள்ள ஓட்டைகளைச் சரிசெய்து மேம்பட்ட ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்கு எல்லா விதமான நியாயங்களும் இருக்கின்றன. சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘மனித விற்பனை (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்டம், 2016’-ன் வரைவு அப்படி உருவாக்கப்படவில்லை.
இந்தச் சட்டவரைவு மனித விற்பனையைப் பாலியல் தொழிலின் கண்கொண்டு மட்டுமே பார்க்கிறது. வயது வந்த பெண்களைக் குழந்தைகள் போன்று நடத்துவதுடன், முக்கியப் பிரச்சினைகளை ‘அறநெறி’ அடிப்படையில் அரசு அணுகுகிறது.
‘பாதிக்கப்பட்ட’ ஒருவரை மீட்கவும், இந்தச் சட்டத்தைக் கொண்டு உருவாக்கப்படவிருக்கும் ‘மாவட்ட மனித விற்பனைத் தடுப்புக் குழு’வுக்கு முன்பு அவரைக் கொண்டுவந்து நிறுத்தவும் பொதுநலன் மீது அக்கறைகொண்ட எந்தக் குடிமகனுக்கும், சமூக சேவகருக்கும் இந்தச் சட்டவரைவு அனுமதி அளிக்கிறது. இந்தப் பரிந்துரை காரணமாக, இந்த விவகாரத்தில் கலாச்சாரக் காவலர்கள் மூக்கை நுழைப்பதற்குப் பெரிதும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கண்காணிப்பு ஆசாமிகள், ஆர்வக்கோளாறுகள் போன்றோரால் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் அவமானப்படுத்தப்படும், அவதிக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.
‘பாலியல் தொழி’லையும் ‘பாலியல்ரீதியிலான சுரண்டல் தொழி’லையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் தவற்றை இந்தச் சட்டவரைவும் செய்கிறது. பாலியல் தொழிலில் விருப்பத்துடன் ஈடுபடுவோரின் உரிமைகளைக் காப்பதற்காகச் சமூகச் செயற்பாட்டாளர்கள் பாடுபடுவதற்கு எதிராக இந்த அணுகுமுறை இருக்கிறது. பாலியல் தொழிலில் விருப்பத்துடன் ஈடுபடுவோருக்கும் அவரது வாடிக்கையாளர்களுக்கும் ‘மனித விற்பனைத் தடுப்புச் சட்டம்’ பொருந்தாது என்று 2015-ல் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
‘பாலியல் தொழிலை ஒரு சுரண்டல்’ என்று பார்ப்பது வழக்கமான பார்வை. பாலியல் தொழிலின் பேரில் நடக்கும் சுரண்டலைத்தான் முதன்மையான தீமையாகக் கருதி நாம் நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும் என்பது இன்றைய சீர்திருத்தவாதிகளின் நிலைப்பாடு. குழந்தைகளைக் கடத்திக் கொண்டுபோய் விற்பது, வேலைகளுக்காகப் பெரியவர்களைக் கடத்திக் கொண்டுபோய் விற்பது போன்றவற்றையும், பலவந்தமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதையும் தனித்தனி வகைகளாகப் பிரித்து அணுகுவது முக்கியம். இந்தச் சட்டவரைவு அனைத்தையும் ஒரே பிரிவுக்குள் கொட்டிக் கலந்துவிடுகிறது.
யாரையெல்லாம் இந்தச் சட்டவரைவு மீட்க நினைக்கிறதோ அவர்களது அடிப்படை உரிமைகளை அது ஆபத்துக்குள்ளாக்கிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஒருவர் வழக்கறிஞரை அணுகுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுடன் 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்திரேட்டின் முன் அவரைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்றும் சட்டப் பிரிவு 22 சொல்கிறது. ஆனால், தற்போதைய சட்ட வரைவோ மீட்கப்பட்ட நபர்களை நேரடியாக ‘மாவட்ட மனித விற்பனைத் தடுப்புக் குழு’வின் உறுப்பினர்-செயலர்களின் முன் கொண்டுவந்து நிறுத்துவதை அனுமதிக்கிறது.
இரண்டாவதாக, மீட்கப்பட்ட நபரை அவரது பாதுகாப்பு கருதி சொந்த மாநிலத்துக்கோ வேறொரு மாநிலத்துக்கோ திருப்பியனுப்பிவிடுவதற்குத் தடுப்புக் குழுக்களுக்கு சுதந்திரமான அதிகாரத்தைச் சட்டவரைவு அளிக்கிறது. குடிமக்கள் தங்கள் விருப்பப்படி நாட்டுக்குள் சுதந்திரமாக எங்கும் செல்வதற்குச் சட்டப் பிரிவு 19 அளித்துள்ள உரிமைக்கு இது எதிரானது. மனித விற்பனையால் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டால் தாங்கள் மேலும் அவமானத்துக்கும் இன்னலுக்கும் உள்ளாக்கப்படுவோம் என்று அஞ்சுவார்களே, அவர்களுக்கு என்ன பதில்?
மாவட்டக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரம் எல்லாவற்றையும்விட அச்சுறுத்தும் விஷயம். நினைத்த இடத்தில் அவர்கள் நுழைந்து தேடலாம், ஆட்களை மீட்கலாம், மீட்கப்பட்ட நபர்கள் அவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப்படலாம். மீட்கப்பட்டதற்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்கும் அவர்களே பொறுப்பு. நடைமுறையில் அவர்களெல்லாம் போலீஸ்காரர், நீதிபதி, மறுவாழ்வு கொடுப்பவர் எல்லாம் ஒன்றாகக் கலந்த கலவை மாதிரி. எடுத்துக்காட்டாக, பாலியல் விடுதிக்குள் தேடல் ஆணையோ, கைது ஆணையோ இல்லாமல் போலீசார் நுழைய முடியாது. அதே மாதிரி சில வகை போலீஸ்காரர்களுக்கு மட்டுமே அப்படி நுழைந்து கைது செய்யவோ, தேடல் நிகழ்த்தவோ அதிகாரம் உண்டு. இப்போது அந்த விதிமுறைகளெல்லாம் மீறப்படவிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அலட்சியத்துடன் உருவாக்கப்பட்ட, குழப்பமான சட்டவரைவு போலத்தான் தோன்றுகிறது. இதனால் நல்லதைவிடத் தீங்குதான் அதிகம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் ‘மனித விற்பனைத் தடுப்புச் சட்ட’ங்களை உறுதியானவையாக ஆக்குவதிலும், குறைகளைக் களைவதிலும், விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அது இந்தச் சட்ட வரைவைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக ஒன்றை உருவாக்கியாக வேண்டும், குறிப்பாக, வல்லுநர்களின் துணையுடன்!
‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago