பருவத்தே பணம் செய்: சேமிப்பின் முதல் வழி?

By சி.முருகேஷ்பாபு

காப்பீடு முகவர் கிடைத்தாரா? அதற்கு ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்? ரஜினி நடித்த தில்லுமுல்லு காலம் முதல் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் காலம்வரை காப்பீட்டு முகவர் என்பவர் காமெடியன்தானே! உங்கள் ஊரிலும் தெருவுக்குப் பத்து காப்பீட்டு முகவர்கள் இருப்பார்கள்.

அந்தக் காலத்தில் காப்பீடு பற்றிப் பேச வரும் முகவர், ‘‘ஐயா… ஒருவேளை உங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி நீங்க போய்ச் சேர்ந்துட்டா உங்க குடும்பம் நடுத்தெருவுல நிக்கக் கூடாதுல்ல…” என்று ஆரம்பித்த உடனேயே, “ஒரு வார்த்தையாவது நல்ல வார்த்தை சொல்லுதியா… அபசகுனம் புடிச்சாப்புல பேசுதியே” என்று விரட்டி அடிக்கப்படுவார்.

இன்று காலம் மாறிவிட்டது. காப்பீடு எடுக்க வருபவர்களே இழப்பீட்டுத் தொகை பற்றிக் கேட்கிறார்கள். “நான் இல்லாவிட்டாலும் என் குடும்பம் பாதிக்கக் கூடாது” என்று யதார்த்தம் பேசுகிறார்கள். ஆனால், முகவர்களின் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இன்றும் ஒரு பாலிசி போடுங்க சார் என்று அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்திய ஜனத்தொகையில் காப்பீடு எடுத்தவர்களின் சதவிகிதம் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை என்பதுதான் உண்மை. ஆக, காப்பீட்டில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இத்தனை விளக்கமாகச் சொன்னாலும் அடிப்படையான ஒருவரித் தகவல் இதுதான்: எல்லோரும் காப்பீடு எடுங்கள். ஆயுள் காப்பீடு அவசியத்திலும் அவசியம்!

ஆயுள் காப்பீட்டில் டேர்ம் பாலிசி, மணிபேக் பாலிசி என்று பலவிதம் இருக்கிறது. (யூலிப் என்று ஒரு காப்பீடு விஷயம் இருக்கிறது. அது பாயசத்தில் முந்திரி மாதிரி கடைசியாகச் சேர்க்க வேண்டியது. அதைப் பற்றிப் பிறகு பேசலாம்.) உங்கள் வசதிக்கு எதுவோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், கண்டிப்பாக ஏதாவது ஒரு பாலிசியை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் முக்கியமான பாலிசி, காப்பீடு பாலிசி எடுக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

கைகொடுக்கும் மருத்துவக் காப்பீடு

யாரிடம் மருத்துவக் காப்பீடு பற்றிப் பேசினாலும் சொந்த அனுபவம் எனக்கு முன்னால் வார்த்தைகளாக வந்து நிற்கும். என் தந்தை மருத்துவத் துறையில் அரசுப் பணியில் இருந்தார். அதனால் அவருடைய ஓய்வூதிய காலம்வரை மருத்துவச் செலவு என்பதே எங்கள் வீட்டில் கிடையாது. அரசு மருத்துவமனைதான் எல்லாவற்றுக்கும். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரது மருத்துவத் தேவைகளையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டது மருத்துவக் காப்பீடுதான். இத்தனைக்கும் ஓய்வு காலத்தில்தான் அவருக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தோம். அடுத்துப் பல ஆண்டுகளுக்கு இதய நோய் தொடர்பான பிரச்சினைகள் எழுந்த போதெல்லாம் லட்சக்கணக்கில் செலவாகும். எல்லாவற்றையும் மருத்துவக் காப்பீடு கொண்டே சமாளித்தோம், அப்பாவின் கடைசிக் காலம்வரை அதுதான் கைகொடுத்தது.

என் தந்தைக்காக நான் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தேன். என் சகோதரர் எடுத்திருந்தார். என் தந்தைக்கு அரசு மூலம் கொடுக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. தன்னுடைய கடைசி மூச்சுவரை மருத்துவச் செலவு என்று கையை விட்டு என் தந்தை செலவழிக்கவில்லை. ஒருவேளை இந்த மருத்துவக் காப்பீடுகள் இல்லையென்றால் அவர் எங்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் சில சொத்துகளை நாங்கள் இழக்க வேண்டியிருந்திருக்கும்.

விஷயம் இதுதான்: உங்களுடைய வாழ்நாள் சேமிப்பு மருத்துவச் செலவுகளால் மொத்தமாகப் போய்விடக் கூடாது.

என்ன லாபம் நமக்கு?

வழக்கமாகக் காப்பீடு எடுத்து தவணைத் தொகை கட்டினால், பாலிசி முதிர்ச்சி அடையும்போது பணம் கிடைக்கும். இந்த மருத்துவக் காப்பீடு எடுத்தால் என்ன கிடைக்கும்? இதுதானே உங்கள் கேள்வி?

மருத்துவக் காப்பீட்டில் கட்டும் தவணை அந்த வருடத்துக்கானது மட்டுமே. வண்டிக் காப்பீடு மாதிரி! பலனும் வண்டிக் காப்பீடு மாதிரிதான்!

உங்கள் வாகனத்துக்கு சில நூறு ரூபாய் தவணைத் தொகை கட்டுவீர்கள். பாலிசி காலத்தில் வண்டிக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் உங்களால் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பல ஆயிரங்களை இழப்பீடாகப் பெற முடியும். சில நூறு ரூபாயைச் செலவு செய்ய யோசித்தால் வண்டிக்குச் சேதாரம் ஏற்படும்போது பல ஆயிரங்களைக் கையில் இருந்து இழக்க வேண்டியிருக்கும்.

மருத்துவக் காப்பீட்டிலும் அதேதான். சில ஆயிரங்களைச் செலவழித்து பாலிசி எடுக்கத் தயங்கினால், உடல்நிலை பாதிக்கப்பட்டால் சில லட்சங்களை இழந்து நிற்க வேண்டியிருக்கும். மிரட்டலாகச் சொல்லவில்லை. அதன் தீவிரம் புரிய வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

இந்த அடிப்படையைத் தாண்டினால்தான் சேமிப்பு பற்றியே நாம் யோசிக்க முடியும். அதனால்தான் விலாவாரியாகக் காப்பீடு பற்றியும் மருத்துவக் காப்பீடு பற்றியும் பேச வேண்டியதாக இருக்கிறது. இதில் தெளிவாகிவிட்டால் நாம் சேமிப்புப் பற்றிப் பேசத் தொடங்கிவிடலாம்.

சேமிப்பின் முதல் வழி என்ன தெரியுமா?

செலவைக் குறைப்பதுதான். இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே என்கிறீர்களா? காத்திருங்கள், ஒரு கதையோடு வந்து உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.

(தொடர்ந்து சேமிக்கலாம்)

கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்.

தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்