பெண் கல்வியே மாற்றத்தை உருவாக்கும்!

By எஸ். சுஜாதா

ஆண் குழந்தைகள் வீரர்களாகவும் பெண் குழந்தைகள் தாய்மார்களாகவும் வளர்க்கப்படும் மாசாய் மக்களில் இருந்து புதுமைப் பெண்ணாக உருவானவர் ககென்யா டையா (Kakenya Ntaiya). கல்வியாளராகவும் சமூகப் போராளியாகவும் இயங்கிவருகிறார். இவரது பள்ளியில் பயிலும் மாணவியர் அனைவரும் உறுப்புச் சிதைப்பு, குழந்தைத் திருமணம் ஆகியவற்றிலிருந்து தப்பியவர்கள்! ஒரு பெண் படித்தால், சமூகமே முன்னேறும் என்பதற்கு ககென்யாவே சாட்சி!

யார் இவர்?

கென்யாவில் மாசாய் மக்கள் வசிக்கும் ஈனூசாயென் கிராமத்தில் பிறந்தவர் ககென்யா. ஐந்து வயதில் இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உடனே பெண் உறுப்புச் சிதைப்பு சடங்கு செய்யப் பெற்றோர் முடிவெடுத்தனர். அந்தச் சடங்கு செய்துகொண்டால் ஒரு மாதம் பள்ளிக்குச் செல்ல இயலாது என்பதால், உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகு செய்துகொள்வதாகப் பெற்றோரிடம் மன்றாடினார் ககென்யா. பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.

தம்பி, தங்கைகளைக் கவனித்துக்கொள்வது, தொலை தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவருவது, மாடுகளையும் கோழிகளையும் பராமரிப்பது, சமையல் செய்வது என்று நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இதற்கு நடுவில் படிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினார் ககென்யா. 15 வயதில் திருமணம் என்பதால், 14 வயதில் உறுப்புச் சிதைப்பு சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து தன்னைப் படிக்க வைத்தால் சடங்குக்குச் சம்மதிப்பதாகக் கூறினார்.

“பெண் குழந்தைகளை விட மாடுகளை உயர்வாக மதிப்பார்கள். திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, என் மகள்களும் இந்தக் கொடூரத்தை அனுபவிக்க வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. திருமணத்தைவிட பெண் உறுப்புச் சிதைப்பு பெரிய கொடூரமாகத் தோன்றவில்லை. ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்துக்காகச் சம்மதித்தேன். அதைச் செய்து கொண்டதால்தான் என் கனவு சாத்தியமானது” என்கிறார் ககென்யா.

அமெரிக்கப் பயணம்

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்தபோது, அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் ககென்யாவின் குடும்பம் செலவு செய்யும் சூழலில் இல்லை. ஊர் மக்களைத் திரட்டினார். தனக்குப் பண உதவி செய்து, அமெரிக்கா அனுப்பி வைத்தால், திரும்பி வந்து பள்ளி, மருத்துவமனை கட்டித் தருவதாகச் சொன்னார். நல்ல மருத்துவமனை இல்லாததால் பிரசவத்தில் 90 சதவீதப் பெண்கள் மரணத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தனர். கிராம மக்கள் சேமிப்புகளைக் கொடுத்து, ககென்யாவை அமெரிக்கா அனுப்பி வைத்தனர்.

அமெரிக்கா அவருக்கு வேறோர் உலகத்தைக் காட்டியது. தங்கள் நாடும் நாட்டு மக்களும் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டார். பெண் உறுப்புச் சிதைப்பு எவ்வளவு மோசமான வன்முறை என்பதையும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தையும் புரிந்துகொண்டார். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் என்று பத்து ஆண்டுகள் அமெரிக்காவிலும் கென்யாவிலும் கழிந்தன. தான் சொன்னதைப் போலவே 2009-ம் ஆண்டு பெண்களுக்கான முதல் பள்ளியை ஆரம்பித்தார் ககென்யா.

கனவுப் பள்ளி

“எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பதுதான் நோக்கம் என்றாலும் எங்களால் ஆரம்பத்திலேயே அதைச் செயல்படுத்த முடியாது. அதனால் பெற்றோரையும் பெண் குழந்தைகளையும் அழைத்துப் பேசுவோம். படிக்க ஆர்வம் உள்ள குழந்தைகளைத் தேர்ந்தெடுப்போம். பெண் உறுப்புச் சிதைப்பு, குழந்தைத் திருமணம் போன்றவற்றைச் செய்ய மாட்டேன் என்று பெற்றோரிடம் எழுதி வாங்கிவிடுவோம். பெற்றோர் இல்லாத குழந்தைகள் என்றால் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனே சேர்த்துக்கொள்வோம். நாங்கள் நினைத்தது போலவே பெண்களை முன்னேற்ற வேண்டும் என்றால் உறைவிடப் பள்ளிதான் சிறந்தது.

குறைந்த எண்ணிக்கையில் மாணவிகளைச் சேர்த்து, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் சொல்லித் தருகிறோம். முன்பெல்லாம் பெண் குழந்தைகளிடம் உன் கனவு, லட்சியம் என்ன என்று கேட்டால் யாருக்கும் சொல்லத் தெரியாது. இன்று அவர்கள் மருத்துவர், ஆசிரியர், வக்கீல் என்று சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!’’ என்கிறார் ககென்யா.

ஒவ்வொரு குழந்தையையும் சிறப்பாகக் கவனித்துப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள், மூன்று வேளையும் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு என்று கென்யாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்கிறது ககென்யாவின் பள்ளி.

தொடரும் பணிகள்

கென்ய அரசாங்கத்துடன் இணைந்து கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வந்து, 300 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார் ககென்யா. பெண்கள் தலைமையேற்கும் பண்புகளை வளர்த்துக்கொள்ளப் பயிற்சியளித்துவருகிறார். பெண் கல்வியின் அவசியம், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிரான பிரச்சாரம், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது, ஆரோக்கியம், எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்றவற்றையும் தீவிரமாகச் செய்துவருகிறார். 2013-ம் ஆண்டு சிஎன்என் ஹீரோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ககென்யா.

“பெண் கல்வியே மாற்றத்தை உருவாக்கும்! இன்று எங்கள் பள்ளியில் படித்த 250 பெண் குழந்தைகளும் பெண் உறுப்புச் சிதைப்புக்குப் பலியாகாதவர்கள், குழந்தைத் திருமணத்திலிருந்து தப்பியவர்கள் என்பதில் மனநிறைவடைகிறேன். எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பெண்களைக் காப்பாற்ற முடியும். பெண்களுக்கு வாய்ப்பளித்தால் சிறப்பாகத் தலைமை ஏற்பார்கள், சிறந்த முடிவுகளை எடுப்பார்கள், தைரியமாக எதையும் எதிர்கொள்வார்கள் என்பதை எங்களால் பார்க்க முடிகிறது.

இந்தக் கிராமத்தில் இருந்து படித்த ஒரு சாதாரண பெண்ணால் இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்றால், இந்த 250 பெண்களால் இன்னும் எவ்வளவோ இந்தச் சமூகத்துக்குச் செய்ய முடியும். என் தோள்களில் இருந்து சுமையை இறக்கி, அவர்கள் தோளில் ஏற்றிக்கொள்வார்கள். எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது!’’ என்கிறார் 38 வயது ககென்யா.

ஒவ்வொரு குழந்தையையும் சிறப்பாகக் கவனித்துப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள், மூன்று வேளையும் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு என்று கென்யாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்கிறது ககென்யாவின் பள்ளி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்