போகிற போக்கில்: மண் மணக்கும் நகைகள்

By க்ருஷ்ணி

தாத்தா, பாட்டி காலத்தில் களிமண்ணில் சட்டி, பானைகளைச் செய்தார்கள். அப்பா, அம்மா காலத்தில் குதிரைகள், புஷ்பாஞ்சலி என்று அலங்காரப் பொருட்கள் செய்தார்கள். இந்த நவீன யுகத்தில் களி மண்ணால் அழகழகான நகைகளைச் செய்கிறார்கள். சென்னை, கொரட்டூரைச் சேர்ந்த ஜெயந்தி, டெரெகோட்டா நகைகளைச் செய்வதில் சிறந்து விளங்குகிறார்.

முதலில் ஃபேஷன் நகைகளைச் செய்யக் கற்றிருக்கிறார். குந்தன் கற்களையும், மணிகளையும் வைத்து இவர் செய்த நகைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

“என் கணவருக்கு மும்பைக்கு மாற்றலானதால் நாங்கள் அங்கே சென்றோம். ஏற்கெனவே நான் சென்னையில் ஃபேஷன் நகைகள் வகுப்பு எடுத்த அனுபவம் மும்பையில் எனக்குக் கைகொடுத்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கிறவர்களுக்கு ஃபேஷன் நகைகள் செய்யக் கற்றுக் கொடுத்தேன்” என்று சொல்லும் ஜெயந்தி, ஏழு ஆண்டுகள் மும்பை வாசம் முடிந்து சென்னை வந்திருக்கிறார்.

“நான் சென்னை வந்தப்போ திரும்பின பக்கமெல்லாம் ஃபேஷன் நகைகள் செய்யறதைப் பார்த்து ஆச்சரியமாகிடுச்சு. தவிர அது இப்போ அவுட் ஆஃப் ஃபேஷன் வேற. நாம புதுசா ஏதாவது பண்ணணுமேன்னு யோச்சிசு, டெரகோட்டா நகைகள் செய்யக் கத்துக்கிட்டேன். ரொம்ப புதுமையாவும் அழகாவும் இருக்கிற நகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று சொல்கிறார் ஜெயந்தி.

கற்கள் இல்லாத பதப்படுத்தப்பட்ட களிமண்தான் இதற்கு மூலப்பொருள். அந்த மண்ணை கையால் பிசைந்து அச்சிலோ, விரும்பிய வடிவிலோ செய்துகொள்ள வேண்டும். பிறகு அதை ஈரமில்லாமல் காயவைத்து அடுப்பில் சுட்டெடுக்க வேண்டும். அதன் பிறகு வண்ணம் பூசிவிட்டால் கண்ணைப் பறிக்கும் நகைகள் தயாராகிவிடும்.

“டெரகோட்டா நகைகள் ராயல் லுக் தருவதால் பலர் இதை விரும்பி அணிகிறார்கள். புடவை, சுடிதார் எனப் பல வகை ஆடைகளுடனும் இவை ஒத்துப்போவது இவற்றின் இன்னொரு சிறப்பு” என்று சொல்லும் ஜெயந்தி, மணிகளும் சோக்கர் செட் நகைகளும் அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE