ஆண்களையும் உள்ளடக்கியதே பெண்ணியம்- ஓவியா சிறப்புப் பேட்டி

By பிருந்தா சீனிவாசன்

‘பெண்ணியம் என்பது ஆண்களைத் தவிர்த்தது அல்ல’ என்ற கருத்துக்குச் சொந்தக்காரர் ஓவியா. இன்ன வயதுதான் என்று வரையறுத்துச் சொல்ல முடியாத வயதில் இருந்தே சமூகம் சார்ந்தும், களப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைமுறை இவருடைய தாத்தாவும் பாட்டியும் என்பதுதான் இவருடைய பொதுவாழ்க்கைக்கான முதல் புள்ளி. பல இடைவெளிகளையும் இடைஞ்சல்களையும் தாண்டி, உத்வேகத்துடன் இயங்கிவரும் இவர், பதின்ம வயதுகளிலேயே சிறந்த பேச்சாளராகவும், களப்பணியாளராகவும் அறியப்பட்டவர்.

பூர்விகம் அருப்புக்கோட்டையாக இருந்தாலும் சொந்த ஊர் என்ற உணர்வைத் தருவது மதுரைதான் என்ற அறிமுகத்துடன் பேசத் தொடங்குகிறார் ஓவியா.

பெரியார் காட்டிய பாதை

“எங்கள் வீடே இயக்கப் பணிகளில் இருந்ததால், சிறு வயது முதலே பெண்ணியச் சிந்தனையும் பெரியாரியச் சிந்தனையும் எனக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமே இல்லை. விதை முளைத்துச் செடியாவது போல, வீடு எனக்கான பாதையைத் தெளிவாகக் காட்டியது. பள்ளி நாட்களிலேயே பல நூல்களைப் படிப்பது, பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது, வெளியூர்களில் கிளை அமைப்புகள் தொடங்கத் துணை நிற்பது என்று இயக்கம் சார்ந்தே என் பணிகள் அமைந்தன. பாலிடெக்னிக் முடித்தேன். கல்லூரி முடித்ததும் தோழர் வள்ளிநாயகத்தைக் கரம்பிடித்தேன். எங்களுடையது சாதி மறுப்புத் திருமணம். சாதி, மதம் தவிர வேறு சில சிக்கல்களும் எங்கள் திருமணத்தில் இருந்தன. இருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றோம்.

எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல்தான் எங்கள் மணவாழ்க்கையும் தொடங்கியது. பொது வாழ்க்கைக்கு இடையில் பொதுவான வாழ்க்கை நெருக்கடிகளையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தின்போது தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபட முடியாமல் இருந்தேன். பிறகு 21ஆவது வயதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஆர்.ஓ) எனக்கு நிர்வாகப் பிரிவில் வேலை கிடைத்தது. பொருளாதாரச் சுமை ஓரளவுக்குக் குறைந்த பிறகு மீண்டும் பொது வாழ்க்கைக்கான பணிகள் குறித்து யோசிக்கத் தொடங்கினேன்” என்கிற ஓவியா, மத்திய அரசுப் பணியில் இருந்துகொண்டே சிறிய அளவில் இயக்கப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்.

உத்வேகம் தந்த புறக்கணிப்பு

“அக வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரித்தபோதுதான் வாழ்க்கை குறித்த மீள்பார்வை எனக்கு ஏற்பட்டது. மேலைநாட்டுப் பெண்ணியக் கருத்துக்களைப் படித்தேன். அவர்களிடம் இருந்து எப்படி நம் சிந்தனைகள் மாறுபட்டிருக்கின்றன, நம்மைச் செழுமைப்படுத்திக்கொள்ள கடக்க வேண்டிய பாதைகள் எவை என்பன குறித்த தெளிவை அந்தப் புத்தகங்கள் எனக்குத் தந்தன” என்று சொல்பவர் தன் கொள்கைகளால் பணியில் ஏற்பட்ட சங்கடங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

“அந்தக் காலகட்டத்தில் பெண்ணிய அரசியலை முன்னெடுத்த, பெண்ணியம் குறித்துப் பேசிய என்னை அத்தனை சுலபமாக யாரும் புரிந்துகொள்ளவில்லை. மத்திய அரசுப் பணியில் தமிழ் சார்ந்த உணர்வுடன் இயங்கிய என்னை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. துறை சார்பில் இந்தியா முழுவதும் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் நான்தான். ஆனால் அதற்கான அங்கீகாரத்தையோ, பதவி உயர்வையோகூட எனக்குத் தரத் தயாராக இல்லை. அதுபோன்ற புறக்கணிப்புகள் ஒருபோதும் என் பணிகளுக்குத் தடையாக இருந்ததே இல்லை” என்று நினைவுகூர்கிறார்.

மானுட விடுதலைக்கான அடிப்படை பெண் விடுதலை என்ற கருத்தை வலியுறுத்தி, ‘புதிய குரல்’ என்ற இதழை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திவந்த இவர், பெண்ணுரிமையிலும் விடுதலையிலும் ஆண்களுக்கும் பங்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்கிறார். “மத எதிர்ப்பில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. அரசியலைப் பெண்கள் கையகப்படுத்த வேண்டும் என்பதும் எங்கள் இலக்குகளில் ஒன்று. பெண்களில் கையில் அரசியல் இருந்தால்தானே மொழிப் பிரச்சினை, இனப் பிரச்சினை போன்றவற்றை முன்னெடுக்க முடியும்? பாலின ரீதியான வேலைப் பிரிவினையை நாங்கள் எதிர்த்தோம். எங்களுடைய தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகத்தான் தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வசந்தகுமாரி நியமிக்கப்பட்டார்” என்று தங்கள் இயக்கத்தின் பணிகளை விவரிக்கிறார் ஓவியா.

துணை நின்ற தோழர்கள்

தங்களுடைய வெற்றிக்குப் பின்னால் பல்வேறு இயக்கங்களின் ஆதரவு இருப்பதையும் ஓவியா மறக்காமல் குறிப்பிடுகிறார்.

“நாங்கள் தனியாக எதையுமே சாதித்துவிடவில்லை. கன்னியாகுமரி மாவட்ட திராவிட இயக்கங்கள், தமிழ்ப் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், தமிழ்த் தேசிய நண்பர்களின் துணையோடுதான் எங்கள் இலக்கை அடைந்தோம். 1990களில் மதுரையில் நாங்கள் நடத்திய கருத்துப் பிரச்சாரம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்து அறநிலையத் துறையில் அதிகாரிப் பதவியில் பெண்களை நியமிக்கக் கூடாது என்று அப்போது சட்டம் இருந்தது. காரணம் மாதவிலக்கு நாட்களிலும் அவர்கள் கோயிலுக்குள் வந்துவிடுவார்கள் என்பதால், பெண்களை அந்தப் பதவிக்குப் பரிந்துரைக்காமல் இருந்தார்கள். இதை எதிர்த்து நாங்கள் நடத்திய நடுவீதிப் பிரச்சாரம் அங்கிருந்த மக்களுக்குப் புதிதாக இருந்தது. ‘உங்கள் உடம்பில் இருந்து வெளியேறும் மலஜலம் தீட்டாகாதபோது, பெண்களின் உடம்பில் இருந்து வெளியேறும் உதிரம் மட்டும் தீட்டா?’ என்று எழுதப்பட்ட பதாகைகளைப் படிக்கப் பெண்களே தயங்கினர். அங்கே வேலை செய்தப் பெண்கள் எங்களிடம், ‘உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கேட்டார்கள். நாங்கள் போராடுவதே அவர்களுக்காகத்தான் என்று புரிந்துகொள்ளக்கூட முடியாத அளவுக்கு இந்தச் சமூகத்தின் கட்டுப்பாடுகளில் அவர்கள் மூழ்கியிருப்பதுதான் வேதனை. இது போன்றவர்களுக்காகத்தான் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம்” என்கிறார் ஓவியா.

மீண்டும் புதிய குரல்

பொருளாதாரப் பின்புலம் இல்லாததாலும், இரண்டாம் நிலை வலுவான தலைவர்கள் இல்லாததாலும் இவர்களுடைய செயல்பாட்டில் அப்போது ஒரு தேக்கம் ஏற்பட்டது. வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, சென்னையில் குடியேறிய பிறகு மீண்டும் தன் பணிகளைத் தொடர்ந்துவருகிறார் ஓவியா. முன்பு நடத்திய இதழான ‘புதிய குரல்’என்ற பெயரிலேயே தற்போது மீண்டும் ஒரு பொது இயக்கம் ஆரம்பித்து நடத்திவருகிறார். சாதியற்ற, பாலின பேதமற்ற தமிழ்ச் சமூகத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த இயக்கம்.

“சாதியற்றோருக்கு இங்கு இடமே இல்லை. எங்கேயும் எப்போதும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அப்படியொரு அடையாளமே தேவைப்படாத தமிழ்ச் சமூகம்தான் எங்கள் இலக்கு. நாங்கள் மெதுவாக, ஆனால் உறுதியாகப் பணியாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். காரணம் ஒரே நாளில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறோம். சாதி மறுப்பாளர்களின் குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதே ஆரோக்கியமான மாற்றம்தானே” என்று சொல்லும் ஓவியா, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய ஆண்களின் பிண்ணனி குறித்தும் ஆராய வேண்டும் என்கிறார்.

ஆண் என்கிற அகந்தை

“பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகிற ஆண் குற்றவாளி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இப்படி நிகழும் சம்பவங்களின் மூல காரணம் என்ன என்பதையும் யோசிக்க வேண்டும். ஒரு ஆண் குழந்தையின் மனதில் பிறப்பு முதலே ஊட்டி வளர்க்கப்படுகிற ஆணாதிக்க மனோபாவம்தான் பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஒரு பெண் தன்னை மறுக்கும்போதோ, நிராகரிக்கும்போதோ அவனுக்குள் இருக்கும் ஆண் என்கிற அகந்தைதான் அவனை வன்முறையில் இயங்க வைக்கிறது. இதை நிச்சயம் களைந்தே ஆக வேண்டும். அந்தப் பொறுப்பு ஒவ்வொரு அம்மாவின் கைகளிலும்தான் இருக்கிறது” என்று தீர்வையும் முன்வைக்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்கிற நிலையை நோக்கி இந்த வையம் நகர்கிற நாள்தான் பெண்ணுரிமைக்கான கூக்குரல் தேவைப்படாத நாளாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்