எங்க ஊரு வாசம்: நல்ல சேதி சொன்ன கிருஷ்ணப் பருந்து!

By பாரததேவி

கல்யாண சாமான்கள் வாங்குவதில் ஊரே அமர்க்களப்படும். கருப்பட்டியைச் சுமந்துகொண்டு வெள்ளாமை அறுத்தப் பிஞ்சையினூடே வரும் ஒற்றையடிப் பாதையில் வருகிறவர்களைச் சிறுவர்கள் பார்த்துவிட்டாலோ அவ்வளவுதான். ‘மாமா மாமா’ என்று கூப்பிட்டுக்கொண்டே அவரைச் சூழ்ந்துகொள்வார்கள். நாடார் கொண்டுவந்து இறக்கும் கருப்பட்டியின் மணம் வேப்ப மர, புளிய மரக் காற்றோடு கலந்து ஊரெங்கும் மணந்து எல்லோர் நாக்கிலும் நீரை வரவழைக்கும். இந்தச் சிறுவர்கள் ‘மாமா மாமா’ என்று அவரை நோக்கி சிறுகை நீட்டி கெஞ்சுவதைப் பார்த்துகொண்டிருக்க அந்தக் கருப்பட்டிக்காரர் கல்நெஞ்சுக்காரர் அல்ல.

சிறுவர் விரும்பும் சில்லுக் கருப்பட்டி!

இந்த மாதிரி சிறுவர், சிறுமிகள் தன்னைச் சுற்றுவார்கள் என்று தெரிந்தே சில்லுக் கருப்பட்டி (பெரிய கருப்பட்டியிலிருந்து உதிர்ந்தவை) கொண்டுவருவார். அதைத் தன்ன் பெரிய கையில் அள்ளி, “இருங்கடா இருங்கடா. உங்களுக்கும் கருப்பட்டி தாரேன்” என்று ஆளுக்குக் கொஞ்சம் கொடுப்பார். அப்போது அந்தச் சிறுவர்களின் முகத்தில் சந்தோஷம் பூத்துக் குலுங்கும்.

இப்படி கல்யாண வேலைகளைச் செய்ய கிராமங்களைத் தேடி வருகிறவர்கள் வயிறு குளிர மோர், பசி தீர கம்மங்கஞ்சி, சோளக் கஞ்சி, கேப்பை கூழ் என்று கொடுப்பார்கள். போகும்போது வேலை செய்த கூலியாக மூட்டைகளில் தானியங்களை சுமந்துகொண்டு நிறைவான மனதோடு செல்வார்கள்.

களைகட்டும் கல்யாணச் சந்தை

ஊருக்குள் இருக்கும் வேலைகளை முடிந்துவிட்டது. இனி கல்யாணப் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் மட்டுமல்ல, இரண்டொரு வேண்டிய பெரியவர்கள், தாய், தகப்பன் என்று எல்லாருக்குமான துணி மணிகளை எடுக்க வேண்டும். மணப்பெண்ணுக்கு வான நிறத்தில் வண்ணாத்திப்பூச்சி சேலையும், ராதா, ருக்மணி வளையலும் வாங்க வேண்டும். மாப்பிள்ளைக்கு பட்டுக்கரை வேட்டியும், ஈக்கிக் கரையிட்ட தோள் துண்டும் வாங்க வேண்டும். பிறகு கல்யாணத்துக்கான மஞ்சள், குங்குமம், சந்தனம் என்று எல்லாப் பொருட்களும் வாங்க வேண்டும். பொழுது சாய்ந்த பிறகு கல்யாணப் பொருட்களை வாங்குவதற்கு யாருக்கும் விருப்பம் இருக்காது. பொழுது மேற்கில் கொஞ்சமாக நகரும் முன்பே எல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டும்.

அதோடு வாங்கிய கல்யாணப் பொருட்களை காடுப்பாதை வழியே தலைச் சுமையாக கொண்டுவரக் கூடாது. காத்து கருப்பு அண்டக்கூடும். அதனால் மருத வேலு ஆடெழும்பும் (பத்து மணி) நேரத்துக்கு வண்டியைக் கட்டிக்கொண்டு போய்விடுவார். காளைகளும் பசுக்களும் எப்போதும் விவசாயிகளுக்கான தெய்வங்கள்.இவற்றின் துணையோடு வனங்களின் வழியாகக்கூடப் போகலாம். இந்தக் குல மாதாக்களைக் கண்டால் காத்துகளும் கருப்புகளும் ‘சூச்சம் சூச்சம்’ (பயந்துகொண்டு) என்று ஓடிவிடும்.

சகுனம் சொல்லும் பட்சிகள்

விடியற்காலை நிலா தன் கூட்டாளியான நட்சத்திரங்களோடு பாலாக வெளிச்சத்தைப் பூமியில் பரப்ப, வணிடியோடிய புழுதிச் சாலைகளும், மரங்களும் அந்த வெளிச்சத்தில் கண்கொளாக் காட்சியாக இருக்கும். விடியற்காலை ஊதக்காற்று உடம்பைச் சிலுசிலுக்க வைக்கும். காட்டுப் புக்களின் வாசம் எங்கும் நிறைந்து மாயம்காட்டிக் கொண்டிருக்கும்.

இந்த ஆண்டு நாலு கல்யாணங்கள் பேசியிருந்ததால் அவர்களின் அம்மாக்களும் அவர்களுக்கு வேண்டிய சொந்தங்களுமாகப் பத்துப் பேர்வரை டவுனுக்காக அந்தப் புழுதியேறியச் சாலையில் கடாப் பெட்டியும், கஞ்சிக் கலயமுமாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்களோடு அவர்கள் மென்றுகொண்டிருந்த வெற்றிலை வாசமும் தொடர்ந்தது.

வெளுப்பு கிழக்குத் திக்கம் கூடிவருகையில் கழுத்தில் வெள்ளை வாங்கிய ‘கிருஷ்ணப் பருந்து’ ஒன்று இவர்களின் குறுக்காகப் பறந்துபோக, அலையக்காவுக்குச் சந்தோஷம் பொறுக்கவில்லை.

“ஏத்தா, ‘கிட்ண பெறாந்து’ நம்ம குறுக்கால போவுது. நல்ல சகுணமாக்கும். எல்லாரும் கன்னத்துல போட்டுக்கோங்க” என்றாள்.

“ஆமாக்க. நீ சொன்னது வாஸ்தவமான பேச்சு” என்று வீரம்மா சொல்ல, எல்லோரும் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். இப்போது விடிந்து விட்டதால் கிழக்குத் திக்கமாகச் சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க, மேற்கே வெள்ளாமை எடுத்துவிட்டு உழுது போட்டிருந்த செவல் தரையில் வெயில் படர்ந்து தங்கத் தகடாக மின்னியது. மரங்களில் கூடு கட்டித் தொங்கிக்கொண்டிருந்த தூக்கணாங்குருவிகள் மெல்லிய காற்றுக்கு ஊஞ்சலாடிக்கொண்டே இவர்களை வேடிக்கை பார்த்தன.

மரங்களின் அடர்வுக்குள் தவிட்டுக் குருவிகள், மைனாக்கள், கொண்டைக் குருவிகள், சிட்டுக் குருவிகள் என்று அனைத்தும் விதவிதமாகக் கூவியவாறே ஒருசேர வானவெளியில் பறந்தன. பெண் மயில்களோடு நின்றிருந்த ஆண் மயில்கள் தங்கள் அகலமான தோகையை விரித்து ஆடின. கரிச்சன் குருவி, வலது பக்கமிருந்து இடது பக்கமாகப் பறக்க, ராசாத்தி மகிழ்ச்சியோடு, “அடியாத்தா அடியாத்தா… நமக்கு சகுனமின்னா சகுனம். அப்படியொரு சகுனம்” என்று கூவினாள்.

“எப்படி ராசாத்தி சொல்லுதே?” என்று பொன்னி கேட்க, “ஒரு கரிச்சான் குருவி சோத்துக்கைப் பக்கமிருந்து பீச்சங்கைப் பக்கமாவில்ல போவுது!” என்றாள் உற்சாகமாக.

“அப்ப நம்ம புள்ளைக குளத்துக்குள்ள இருக்க அல்லியும் தாமரையுமா பூத்துக் குலுங்க இருப்பாக” என்று சொல்லிக்கொண்டே சூரியனைப் பார்த்து கும்பிட்டாள் பொன்னி!

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

ஓவியம்: முத்து

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்