மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எந்தத் தடையும் இல்லாத மக்களாட்சி நடைபெறுகிற நாடுகளிலேயே பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடவேண்டியிருக்கிறது. தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற நாட்டில் பெண்களின் நிலை எப்படியிருக்கும்? பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியே அதற்கு சாட்சி. ஆப்கானிஸ்தானின் எல்லையிலுள்ள இது 2007-ம் ஆண்டு முதல் தலிபான் எனப்படும் தீவிர மதவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இவர்களை விரட்ட பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எந்தப் பலனும் இல்லை.
கல்வி கற்கத் தடை
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பிறகு ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் மதத்தின் பெயரால் அராஜகம் வேரூன்றியது. குறிப்பாகப் பெண்களின் தார்மீக உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் பொது இடங்களில் நின்று பேசக் கூடாது, கணவர் மற்றும் உடன் பிறந்தவர்கள் தவிர மற்ற ஆண்களுடன் செல்லத் தடை, பாட்டு, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டன. இவை அனைத்துக்கும் மேலாகப் பெண்கள் பள்ளிகளுக்குச் செல்லக் கூடாது என 400 பெண்கள் பள்ளிகள் ஒரே நாளில் இழுத்து மூடப்பட்டன. இவற்றை மீறுபவர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ஆணுக்குக்கூட வராத தைரியம் அங்கிருந்த 12 வயதுச் சிறுமி மலாலாவுக்கு வந்தது. பிபிசி உருது இணையதளத்தின் வலைப்பூக்களில் தலிபான் நடவடிக்கைகளை எதிர்த்து ஜனவரி 2009-ல் இருந்து மலாலா எழுதத் தொடங்கினார். மலாலாவை அவருடைய தந்தை ஜியாவுத்தீன் யூசூப்சாய் உற்சாகப் படுத்தியதுடன் தைரியமும் கொடுத்தார். அவரும் மலாலாவைப் போன்றே மிரட்டலை மீறிப் பெண்களுக்காக அங்கு ஒரு பள்ளியை நடத்திய போராளி.
மலர்ந்தது சோளப்பூ
“பெண்கள் கல்வி பெற விதிக்கப்பட்ட தடை எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால், பலவந்தமாகப் புகுத்தப்படும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கையை எதிர்த்து நான் கண்டிப்பாகப் பள்ளிக்குச் செல்வேன். இதை எதிர்ப்பவர்கள், பிணங்களாகத் தெருமுனைகளில் தொங்க விடப்படுவதைப் பார்த்து எனக்குச் சலித்து விட்டது. தலிபான்களின் மிரட்டலுக்குப் பயந்து என் வகுப்பில் 27 மாணவிகளில் 11 பேர் மட்டுமே வந்திருந்தனர். வீடு திரும்பும் போது ஒருவன், ‘உன்னைக் கொன்று விடுவேன்’ என்று சொன்னது என் காதில் கேட்டது. சிறிது தூரம் சென்ற பின் நான் திரும்பிப் பார்த்தபோது, அவன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.
அடுத்த முனையில் இருப்பவனைத்தான் இப்படி மிரட்டியிருப்பான் என நான் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று வருவோம். இப்போது அப்படி பிக்னிக் சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது. பலர் பேயைப் பார்த்து பயப்படுவது உண்டு. சிலர் சிலந்திப்பூச்சியைப் பார்த்து மிரள்வது உண்டு. ஆனால், நாங்களோ மனிதர்களைப் பார்த்து பயந்தோம். ஏனெனில், இவர்கள் காட்டு மிராண்டிகள்” என மலாலா தன் உணர்வுகளை ஒவ்வொரு நாளும் பதிவுசெய்ததைப் படித்த உலகினருக்குப் பெரும் அதிர்ச்சி.
இந்த வலைப்பூ, மலாலா மற்றும் அவருடைய நண்பர்களின் வாழ்வில் தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடிபோல் விளங்கியது. ஆரம்பத்தில் ‘குல் மக்காய்’ (அங்கு பேசப்படும் பஸ்து மொழியில் சோளப்பூ என அர்த்தம்) என்னும் புனைப்பெயரில் எழுதியவர், தன் எழுத்துக்குப் பெரும் ஆதரவு கிடைத்ததும் தன் சொந்தப் பெயரிலேயே கருத்துகளைப் பதிவுசெய்தார்.
பள்ளிக்குச் செல்லும்போது புத்தகங்களை பர்தாவுக்குள் பாடுபட்டு மறைத்தது, ஆசிட் வீச்சுக்குப் பயந்து நாட்களைக் கடத்தியது என மலாலாவின் வலைப்பூவில் திகிலும் சோகமும் தொடர்ந்தன. இவரது எழுத்துக்கள், பேட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் மட்டுமின்றி வெளிநாட்டுப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியாயின. மலாலாவுக்குப் பாராட்டு குவிந்தது.
வலி தந்த திருப்புமுனை
இந்தச் சூழ்நிலையில்தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது. அக்டோபர் 09, 2012 அன்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவிகளுடன் கிளம்பிய பேருந்தைத் துப்பாக்கி முனையில் நிறுத்தினான் ஒரு தலிபான் தீவிரவாதி. ஆவேசமாக உள்ளே நுழைந்தவன் ‘உங்களில் மலாலா யார்?’ எனக் கோபமாகக் கேட்டான். இதற்கு மவுனம் சாதித்த இரு சிறுமிகள் மீது குண்டுகள் பாய்ந்தன. இதைக் கண்டு பயந்து நடுங்கியவர்களில் சில மாணவிகள், மலாலாவை நோக்கிப் பார்வையை வீசினர். அவர், மலாலாதான் என உறுதி செய்யப்பட்டவுடன் அவர் மீது துப்பாக்கிக் குண்டுகள் சடசடவெனப் பொழிந்தன. கழுத்து மற்றும் தலையில் புகுந்த குண்டுகள் மலாலாவை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன.
அங்கிருந்து தலிபான்களுக்குப் பயந்து ஒரு ரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட மலாலாவிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு உயிருக்கான ஆபத்து விலகாத நிலையில் அவர் ராவல்பிண்டியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், நினைவு திரும்பாத மலாலாவை பாகிஸ்தான் அரசு, இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பியது.
பெருகிய ஆதரவு
இந்த அளவுக்கு மலாலாவை பாகிஸ்தான் அரசு காப்பாற்றத் துடித்த காரணம், இத்தனை சிறிய வயதிலும் தலிபான் தீவிரவாதிகளின் முன் மலாலா காட்டிய தைரியம். தனது நாட்டின் அமைதிக்காக மலாலா 11 வயது முதலே எடுத்து வந்த முயற்சியும் அங்கு தொடர்ந்து நசுக்கப்பட்டுவரும் பெண்களின் உரிமைகளுக்காக மலாலா கொடுத்த போர்க்குரலும் மலாலாவுக்கு அனைவரையும் ஆதரவுக்கரம் நீட்டவைத்தன.
பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொதுமக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜாத்’ எனும் தைரியமான பெண் என்ற விருதை அரசு அளித்துப் பாராட்டியது. இத்துடன் கணக்கில் அடங்காத கொலை மிரட்டல்களும் மலாலாவுக்குக் கிடைத்தன. அரசு மற்றும் சமூக சேவை நிறுவனங்களும் அமைதிக்கான எண்ணற்ற விருதுகளை மலாலாவுக்குக் கொடுத்து மகிழ்ந்தன.
தலிபான்களுக்கு எதிராக மலாலா எழுத்துக்களால் போராடியது பாகிஸ்தானின் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பியது. தான் சுடப்படுவதற்கு முன் மூன்று வருடங்களாக பாகிஸ்தானின் புகழ்பெற்ற சிறுமியாக இருந்தார். ஸ்வாத்தின் பெண் குழந்தைகள் படிப்புக்காக ‘மலாலா எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என ஒரு அமைப்பைத் தொடங்கி சமூக சேவை செய்தார். பாகிஸ்தான்
மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி பாகிஸ்தான் வந்தபோது தைரியமாக அவரிடம் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
“இவை அனைத்தும் ஆபத்தானவைதான். ஆனால், அதை எதிர்க்காமல் இருப்பது அதைவிட ஆபத்தானது. இதற்காக, என் மகளின் உயிரைப் பறித்துவிடுவதாகப் பலமுறை
என் வீட்டில் மிரட்டல் கடிதங்கள் வீசப்பட்டன. மலாலா மரணப் படுக்கையில் போராடிக்கொண்டிருந்தபோதும் அவர்கள் என் மகளை விடவில்லை. ‘மலாலா உயிர் பிழைத்து வந்தால் அவளை மீண்டும் தாக்குவோம்’ என அறிவித்திருந்தனர்” என வருந்துகிறார் மலாலாவின் தந்தையான கவிஞர் ஜியாவுத்தீன் யூசூப்சாய்.
கைசேர்ந்த பரிசு
ஆனால் இத்தனை தடைகளையும் எதிர்கொண்டு பெண்களுக்காக மலாலா தைரியமாக எடுத்த முயற்சி வீண்போகவில்லை. அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த ராஜா பர்வேஸ் அஷ்ரஃப், “நம் நாட்டின் உண்மை முகம் மலாலா. அவர், பாகிஸ்தானின் அமைதி மற்றும் அன்பின் தூதுவர்” என மலாலாவைப் புகழ்ந்தார். ஐ.நா. சபையின் உலக கல்வி சிறப்புப் பிரதிநிதியாக இருக்கும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன், “பெண் கல்விக்காக மலாலா செய்த தியாகம் பாகிஸ்தானில் வீண்போகக் கூடாது என பாகிஸ்தான் பிரதமரை வலியுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.
மலாலா கடந்து வந்த எத்தனையோ விருதுகளுக்கு மகுடம் சூட்டும் விதமாகத் தற்போது கிடைத்திருக்கும் நோபல் பரிசு, பெண் கல்விக்கும் பெண்ணுரிமைகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே தோன்றுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago