ஊருக்கு ஊர் சுவையும் மணமும் வேறுபடும் என்பதை நிரூபிக்கின்றன நம் வாசகிகள் சொல்லியிருக்கும் உணவு வகைகள். என்னதான் நாளுக்கொரு புது உணவு வகை அவதாரம் எடுத்தாலும் நம் பாரம்பரியத் தொடுதலோடு இருக்கிற உணவின் சுவையும் மணமும் அலாதியானது. அவற்றில் சில இங்கே.
தூதுவளை பருப்பு ரசம்
என்னென்ன தேவை?
தூதுவளை இலை - 6
தக்காளி - 3 கனிந்த பழமாக
பச்சை மிளகாய் - 1 கீறியது
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி
இலை - சிறிதளவு
ரசப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த தெளிவான நீர் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு நீரில் தக்காளியைக் கரைத்து, அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி, கொத்தமல்லி இலையைத் தூவவும்.தொண்டைக்கு இதமான, சுவையான தூதுவளை ரசம் தயார்.
- சுமதி ரகுநாதன், கோயமுத்தூர் - 36.
கொள்ளு - ராகி இனிப்புப் பணியாரம்
என்னென்ன தேவை?
கொள்ளு (காணம்) - கால் கிலோ
ராகி (கேழ்வரகு) - 150 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
கருப்பட்டி - அரை கிலோ
ஏலக்காய் - 5
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கொள்ளு, ராகி, பொட்டுக்கடலை இவற்றை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, அதை மாவுக்கலவையில் ஊற்றி, ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
பிசைந்த மாவை நன்றாக அழுத்தி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, கல் சூடேறியதும், மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வடை சுடுவதுபோலவும் பொரித்தெடுக்கலாம்.
சிற்றுண்டியாகச் சாப்பிட சுவையான, பாரம்பரியப் பலகாரம் இது. கொள்ளு, ராகி, கருப்பட்டி சேர்ந்துள்ளதால் உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.
- எஸ். வளர்மதி, ஈரோடு
கத்தரி முருங்கை பால் குழம்பு
என்னென்ன தேவை?
கத்தரிக்காய் - 3
முருங்கைக்காய் - 2
தனியா, சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - 1
புளி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மிளகாய், சீரகம், தனியா மூன்றையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுக்கவும். கத்தரிக்காய், முருங்கைக்காயை நறுக்கி சிறிதளவு தேங்காய்ப் பாலில் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, கொதிக்க விடவும். அதில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் நல்லெண்ணெய் சேர்க்கவும். பிறகு பாலில் ஊறப்போட்டுள்ள காய்களைச் சேர்த்து, வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சாதம், டிபன் வகைகள் இரண்டுக்கும் இந்தப் பால் குழம்பு ஏற்றது.
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.
சுக்குமாவு அல்வா
என்னென்ன தேவை?
பச்சரிசி - 200 கிராம்
சுக்கு - விரல் அளவு
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
கோட்டயம் சர்க்கரை அல்லது கருப்பு வெல்லம் - 400 கிராம்
உரித்த பூண்டு - 16 பல்
முற்றிய தேங்காய் - 1
சுட்டு எடுத்த முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
எப்படிச் செய்வது?
தேங்காயைத் துருவி மிக்ஸியில் அடித்து இரண்டாம் முறை எடுத்த பால் எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அல்லது வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். மிளகு, சுக்கு இரண்டையும் நன்றாகப் பொடித்து வைக்கவும். பாத்திரத்தில் 2 கப் முதல் முறை எடுத்த பால் ஊற்றி அதனுடன் பூண்டு பற்கள், வெந்தயம் சேர்த்துக் கொதிக்க விடவும். தேங்காய்ப் பால் வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது அடிபிடிக்காமல் கிளறிவிடவும். வடிகட்டி வைத்திருக்கும் வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் சுக்கு, மிளகுப் பொடியையும் சேர்க்கவும்.
அரிசி மாவை இரண்டாம் முறை எடுத்த பாலில் நன்றாகக் கரைத்து, துளி உப்பு சேர்த்து, கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். முந்திரிப்பருப்பைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கரண்டியில் மாவு ஒட்டாமல், எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் தாம்பாளத்தில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
இனிப்பும் காரமும் இணைந்த நலமான பலகாரம் இது. சுக்கு மாவு அல்வா, குமரி மாவட்டத்தின் பாரம்பரிய பலகாரம். மாவு வெந்து வரும்போது, பிரிந்து வரும் எண்ணெய் குறைவாக இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயைச் சூடாக்கிச் சேர்க்கலாம்.
- எஸ். சீலலோசினி, அளத்தங்கரை, ராஜக்கமங்கலம்.
அரிசி தோசை
நெய்தல் நிலத்தின் நான்கு மணி பலகாரங்களில் அரிசி தோசையும் ஒன்று. கையருகில் உள்ள பொருட்களை வைத்தே தயாரித்துவிடக்கூடிய எளிய உணவு இது. வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற சிறந்த சத்துணவும்கூட.
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி, தேங்காய் துருவல் - தலா 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கருப்பட்டி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
அரிசியை ஊறவைக்கவும். அதில் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும். பாசிப்பருப்பை வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். கருப்பட்டியைச் சிறிது நீர் விட்டு கரைத்து, வடிகட்டவும்.
பாசிப்பருப்பு ரவை, கருப்பட்டி கரைசல், தேங்காய் துருவல் இவற்றை ஒன்றாகக் கலந்து
சிறிது நேரம் வைத்திருக்கவும். பாசிப்பருப்பு ரவை, கருப்பட்டி கரைசலில் ஊறும்வரை காத்திருக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், ஒரு கரண்டி மாவை தோசையாக வார்க்கவும். அதன் மேல் பயறு கலவையைப் பரத்தி மேலும் ஒரு கரண்டி மாவை அதன் மேல் ஊற்றி, பரவலாக இழுக்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- ஏஞ்சல் பாப்டிஸ்ட், கன்னியாகுமரி.
புதினா வேர்க்கடலை தட்டை
தேவையானப் பொருட்கள் :
பச்சரிசி மாவு- 2 கப்
பொட்டுக் கடலை மாவு- அரை கப்
உளுத்தம் பருப்பு- கால் கப் (வீட்டில் வறுத்து உடைத்தது)
புதினா விழுது- 2 டீஸ்பூன்
வறுத்த வேர்க் கடலை- 50 கிராம்
வெண்ணெய்- 15 கிராம்
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -பொறிக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக உடைக்கவும். பச்சரிசி மாவை சிவக்க வறுத்து ஆறவிட்டு, பொட்டுக் கடலை மாவு, உளுத்தம் மாவு, புதினா விழுது, உடைத்த வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைக் கலக்கவும். பின்னர் இவற்றை கெட்டியாக மாவு பதத்தில் பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறிய தட்டைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இப்போது சுவையான புதினா வேர்க்கடலை தட்டை ரெடி.
- பி.சசிகலா, திருச்சி-23
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago