வானவில் பெண்கள்: சுயம்புவாக ஜொலிக்கும் வித்தகி

By எல்.ரேணுகா தேவி

பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் நம் சமூகத்தில் பலருக்கும் உள்ளது. அதுவும் குழந்தை பெற்ற பிறகு பெண்களின் உடலில் போதிய சக்தி, முன்பு இருந்தது போல் இருக்காது என்ற கருத்தும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இதுபோன்ற கருத்துகள் எல்லாம் வெறும் பேச்சுதான். பெண்கள் நினைத்தால் எந்தச் சூழ்நிலையிலும், எந்த வயதிலும் தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க முடியும் என்கிறார் நாற்பது வயதில் குங்ஃபூ தற்காப்புக் கலையில் ஆசிரியராக உள்ள சுனிதா.

சென்னைப் போரூரைச் சேர்ந்த சுனிதா வாரத்தின் அனைத்து நாட்களிலும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறார். காலையில் மழலையர் பள்ளி ஆசிரியர், மதியம் குங்ஃபூ ஆசிரியை, பிற்பகல் ஓவியம், எழுத்துக்கலை ஆசிரியர், மாலை நடனப் பயிற்றுநர் எனப் பல பரிமாணங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார் அவர்.

முயன்றால் முடியும்

“சிறுவயதிலிருந்தே நடனம், ஓவியம், எழுத்துக்கலை ஆகியவற்றைச் சுயமாகக் கற்றுக்கொண்டேன். மற்றவர்களால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியும்போது, முயன்றால் நம்மாலும் முடியும் என்ற எண்ணம்தான் என் மந்திரமாக இருந்தது. எனக்குப் பிடித்த விஷயங்களை நானே முயன்று பார்த்துக் கற்றுக்கொள்வேன். அப்படிக் கற்றுக்கொண்டதுதான் நடனம், ஓவியம், எழுத்துக்கலை எல்லாம் நான் கற்றுக்கொண்ட திறமைகளை வெளிக்காட்ட உதவியாக இருந்தவர்கள் தனியார் மழலையர் பள்ளி பொறுப்பாளர் அனிதா பிரகாஷும் தனியார் பள்ளி நிறுவனர் பிரவின் கிறிஸ்டோபரும்தான். என்னால் எதுவும் முடியாது எனப் பலர் பேசியபோது என்னால் சாதிக்க முடியும் என ஊக்கம்தந்தவர்கள் அவர்கள்” எனத் தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சுனிதா.

தன்னம்பிக்கையுடன் பேசும் சுனிதா, சிறுவயதில் மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் பெண்ணாக இருந்துள்ளார். தன்னைப் போல் தன் மகனும் பயந்தாங்கொள்ளியாக இருக்கக் கூடாது என்பதற்காக மகனை குங்ஃபூ பயிற்சிப் பள்ளியில் சேர்க்கச் சென்றுள்ளார். அங்கு குங்ஃபூ கலையின் வேகம், நுணுக்கத்தில் ஈர்க்கப்பட்ட அவர் தானும் அந்தக் கலையைக் கற்க வேண்டும் என முடிவெடுத்தார். அப்போது அவர் முப்பது வயதைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்கமும் விடாமுயற்சியும்

“எதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி என் மனதில் எப்போதும் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் குங்ஃபூ தற்காப்புக் கலையில் இருந்த வேகம் என்னைக் கவர்ந்தது. முப்பது வயதுக்கு மேல் குங்ஃபூ கற்றுக்கொள்ள முடியுமா என மாஸ்டர் கௌரி சங்கரிடம் கேட்டேன். உங்களைப் போன்ற பெண்கள்தான் இந்தக் கலையை முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லி ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தாலும் விடாமுயற்சியாலும் நான்கரை வருடத்தில் குங்ஃபூ கலையை முழுமையாகக் கற்றுக்கொண்டேன். சென்னையில் சர்வதேச குங்ஃபூ போட்டி நடைபெற்றது. அந்தக் கலையில் சிறந்து விளங்கும் சீன புத்த துறவிகளின் முன்னிலையில் செய்து காண்பித்து, பாராட்டுப் பெற்ற அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாது” என மெய்சிலிர்க்கிறார் அவர்.

பொருளாதாரரீதியில் பலப்படுத்திக்கொள்வதற்காக ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு குங்ஃபூ பயிற்சி கொடுத்துவருகிறார் சுனிதா. ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள குங்ஃபூ கலையில் உள்ள சிறு சிறு நுணுக்கங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் பல பொது மேடைகளில் செயல்முறை விளக்கம் தருகிறார் அவர்.

துணிச்சலும் துரிதமும்

“குங்ஃபூ கற்றுக்கொள்ள வரும் என்னுடைய மாணவர்களுக்கு குங்ஃபூ மட்டும் சொல்லித் தராமல் நல்ல தொடுதல், தவறான தொடுதல், தவறான பார்வை பற்றியும் கற்றுத் தருகிறேன். இன்றைக்குப் பெண்கள் மட்டுமல்ல சிறு குழந்தைகள்கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஆண்களின் ஒரே ஆயுதம் பெண்களை அடிப்பதுதான். பெண்கள் எப்போது துணிச்சலாகச் செயல்படுகிறார்களோ அப்போதுதான் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். தற்காப்புக் கலை என்பது எடுத்தவுடன் அடிப்பது அல்ல. ஆபத்தான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு அதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதுதான்” என்கிறார் சுனிதா.

கல்யாணம், குழந்தை என ஆன பிறகு என்னால் என்ன செய்ய முடியும் என நொந்துகொள்ளும் பெண்கள், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படத் தொடங்கினால் தடைகளைத் தகர்க்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சுனிதா.

படங்கள்: எல்.சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்